சொந்த சகோதரர்
***************************
நா,வே.அருள்
எத்தனையாவது முறை என்று தெரியவில்லை
அவர்கள் இன்னுமொரு
முறை
அம்பேத்கரைக் கொன்றுவிட்டார்கள்.
ஒவ்வொரு முறையும்
துள்ளத் துடிக்கத்தான்
கொல்கிறார்கள்.
ஆனால் எவ்வளவு கொடூரமான
கொலையையும்
அவ்வளவு மிருதுவான
வார்த்தைகளால்
வருணிக்கத் தெரிந்தவர்கள்.
எத்துணைதான் அநீதியாக
இருந்தாலும்
நியாயங் கற்பித்துவிடுகிற
ஆயுதத் தராசு முள்
அவர்களிடமிருக்கிறது.
இத்தனைக்கும் கொன்றவர்களின்
தாய்மார்கள்
அம்பேத்கரின் சகோதரிகள்தாம்.
சகோதரிகளுக்கும்
சேர்த்துத்தான்
அவர்
சாத்தான்களிடமிருந்து
சட்டப் புத்தகத்தைப்
பிடுங்கிவந்தார்.
அந்தச் சட்டப் புத்தகத்தின்
பக்கங்களைக் கிழித்துத்தான்
இந்த முறையும்
அம்பேத்கரை எரித்திருக்கிறார்கள்.
கொன்றவனும்
கொல்லப்பட்டவனும்
ஒரே தோட்டத்து இரண்டு
பூக்கள்தாம்.
ஒரு மலரைப் பூஜையறைக்கும்
ஒரு மலரை தகனமேடைக்கும்
அனுப்பியவன்
எதுவுமே நடக்காதது
போல இளைப்பாறியபடியே
தொலைவில் இருக்கிறத்
தோட்டக்காரன்!
09.04.2021 இரவு
9 மணி
கருத்துகள்
கருத்துரையிடுக