கவிதை ஒரு கைவல்லியம்
*********************************
1
கவிதையென்பது
ஒரு நாடோடித் தவம்.
கவிதையை
வீட்டுக் காவலில் வைக்க முடியாது.
சிறையாகுமெனில்
கவிதை
வீட்டையே நிராகரித்து
வெளியேறிவிடும்.
வழக்கமான வாசல் வழிதான் என்றில்லை
அது
காற்றைப்போல
சாளரத்தின் வழியாகவும்
நுழையும் நூதனம்
கவிதையென்பது
கதவுகளைக் கூட வெறுக்கும் கட்டற்ற நுழைவு.
கவிதைக்குப் பிடித்தது
தென்னங்கீற்றில் கூடு கட்டும்
நிலவின்
சாளரத் தொங்கல் மட்டுமல்ல
சாக்கடையில் விழுந்து கிடக்கும்
நிலவின்
பின்வாசல் பிம்பமும்தான்.
எப்போதும் திறந்திருக்கும் வீட்டைத்தான்
அது விரும்புகிறது.
பூட்டியிருக்கும் வீட்டினைத் திறந்துவிடுகிற
மந்திரக் கைகள் கவிதைக்கு உண்டு.
2
கவிதையின் இன்னொரு பிரத்தியேகம்
அசாத்தியமானது.
கவிதை
தனக்குள்
ஒரு வாசனை உலகத்தை வைத்திருக்கிறது.
அது
வார்த்தைகளில்
ஓவியத்தில்
காகிதப் பூக்களிலென
வாசத்தை நுகரவைத்துவிடுகிறது.
கண்களுக்குள் இருக்கிற
நாசியைக் கூர்கொள்ளவைக்கிறது
அது
நிலவுக்குள் கூட
ஒரு கவித்துவ வாசனையைக் கண்டுபிடிக்கிறது.
காட்டுப்பன்றி முதல்
காதலி வரை
வாசனையின் மூலமே
ஒரு கவித்துவ உலகத்தைத் திறந்துவைக்கிறது.
இந்தப் பயிற்சிதான்
ஒரு வாசகனுக்குக்
கள்வர்களைக் கண்டுபிடிக்கும்
கலையைக் கற்றுக்கொடுக்கிறது.
3
கவிதையென்பது காட்டில் பயணம்
காட்டுப் பயணத்திலும்
கொடிவழி தேடிக் குமைவதில்லை
அதற்குப்
புதர்களுக்குள் புகுந்து போகும்
புதிர்வழி தெரியும்
எத்தனை சிராய்ப்புகளையும் தாண்டி
காட்டைக் கடந்துவிடுகிற கைவல்லியம்தான்
கவிதையின் தேர்ச்சி.
கவிதை
இருந்த இடம் அசையாமல்
நிகழ்த்தும்
மரங்களின் நடனமறியும்
பறவைகளின்
சிறகுமொழிகள் தெரியும்
மீன்களின் மௌனபாஷை புரியும்
துரத்தப்படும் விலங்குகளின்
பயத்தையும
துரத்துகிற வேட்டைக்காரனின்
வெறியையும்
ஒரு சேரக் கண்களில் குடியமர்த்தும்
கவிதை.
கொடிவழி நடந்தாலும்
கொப்பம் பார்த்து நடக்கும்
இடறி விழாத யானைதான்
கவிதை.
காட்டு மூலிகையின் கஷாயத்தைப்போல
கவிதையொரு
வேட்டுவனின் பானம்.
4
கவிதை
ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறது
சூழ்ச்சியை அம்பலப்படுத்தும்
சூக்குமம் கவிதை.
மறதிகளின் குப்பைத் தொட்டியான
மனிதனின் மர்மக் கிணற்றைத்
தூர் வாருகிறது கவிதை.
விஷ ஜந்துக்களுக்குத் தூண்டில் தயாரிக்கும்
வித்தியாச அனுபவம் கவிதை.
அம்பேத்கரின் விழா நெரிசலில்
கொளுத்தப்படும் சட்டப் புத்தகங்களின்
சடங்குகளைப் பார்த்துச்
சிரித்துக் கொள்கிறது கவிதை
மேலும்
சிறையில் வசிக்கும்
ஆனந்த் டெல்டும்டேயின்
கசப்பான காபியாகிறது
கவிதை.
5
சதுரங்கத்தின் காய் நகர்த்தல்களைக்
கண்டுபிடிக்கிற கலையில்
கைதேர்ந்துவிடுகிறது கவிதை
கவிதை எப்போதும்
மக்களைக் கைவிடுவதில்லை
மக்கள்தாம்
அவர்களின் அன்றாட தேய்மானங்களில்
கவிதையை
மறந்தே போனார்கள்.
--நா.வே.அருள்
கருத்துகள்
கருத்துரையிடுக