கவிதை அலசல் / நா.வே.அருள்
**************************************
எங்கள் பொங்கல் உப்புக் கரித்திருந்தது
கவிதை . சோலை மாயவன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உழவனின் பொங்கல் ஏன் உப்புக் கரிக்கிறது?
மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் அதிக வித்தியாமில்லை. மாடுகளுக்குக் கொட்டகைகள். மனிதர்களுக்கு வீடுகள். மாடுகள் முளைக்குச்சியில் கட்டப்பட்டிருக்கும். மனிதர்கள் உறவுக் குச்சியில் கட்டப்படாமலேயே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். மாடுகள் தீனியை அசை போடுகின்றன. மனிதர்கள் பசியை அசைபோடுகிறார்கள். மாடுகளுக்கு மனிதர்கள் தண்ணீர் காட்டுகிறார்கள். மனிதர்களுக்கு வாழ்க்கை தண்ணீர் காட்டுகிறது. மாடுகளின் கழுத்துகளில் நுகத்தடிகளின் வடு. மனிதர்களின் கைகளில் காய்ப்பு காய்த்த தடம். மாடுகளுக்குக் கொம்புகள் இருக்கின்றன. மனிதர்களுக்கு அதுவுமில்லை.
உழவன் விதைநெல்லைப் போல வற்றிப் போய் இருக்கிறான். அவனுக்கு உழவு மாடுகள்தான் உண்மையான உறவு. வயலோடுதான் வாழ்க்கை. பயிர் பச்சிலோடுதான் பாசம். பிள்ளைகளின் பெயர்கள் கூட மறந்துவிடும். ஆனால் மாடுகளுக்குத் தவிடு வைப்பதை மறப்பதே இல்லை. அதிகம் நுகர்ந்தது மனைவியின் வாசத்தைவிட மண்வாசம்தான்.
தெரிந்தோ தெரியாமலோ வைக்கோல் குவியலுக்கு வைக்கோல் போர் என்று பெயர் வைத்தார்கள். வாழ்க்கையே ஒரு போராக மல்லடிக்க வேண்டியதாய் இருக்கிறது. உழவு எந்திரங்கள் வந்தபிறகு கிராமங்களில் மனித எந்திரங்களுக்கு மரியாதை குறைந்துவிட்டது. அதுவும் வயதான உழவனுக்கு மாட்டு சாணம் அளவுக்குக் கூட மரியாதை கிடையாது.
கொட்டகையில் மாடுகள் இல்லாததைப் பார்த்து உழவனின் மனம் வெதும்புகிறது. கண்ணீர் கசிகிறது. இப்போது புரிகிறதா …. இப்படித்தான் உழவனின் பொங்கல் உப்புக் கரிக்கிறது.
இனி சோலை மாயவனின் கவிதைப் பொங்கல்.
எங்கள் பொங்கல் உப்புக் கரித்திருந்தது
---------------------------
தன் இரண்டு கைகளாவே
நினைத்திருந்தார் அப்பா
உழவு மாடுகளை
எல்லோரும் வீட்டில் இருந்தாலும்
அப்பா மட்டும் -
கழனியில் ஏர் ஓட்டிக்கொண்டிருப்பார்
நல்ல ஏர் ஓட்டியென்று பெயரெடுத்தவர்
நாங்கள் நான்கு பிள்ளைகள் என்பதெல்லாம் அப்பாவிற்கு
இரண்டாம் பட்சம் தான்
தவிடு புண்ணாக்கு வைக்கோல்
நுகத்தடி கலப்பை
சாட்டைவாரென்று அதிகமாக
உச்சரிக்கும் சொற்கள்
வாங்கும் கூலிப் பணத்தில் பாதி
தவிடு புண்ணாக்கு வாங்கி வந்துவிடுவார்
மாட்டினை நுகத்தடியில் பூட்டி
தோளில் கலப்பையை சுமந்து புறப்பட்டாரெனில்
அதிகாலை நான்கு மணி என்று அர்த்தம்
வறட்சிக் காலத்தில்
வைக்கோல் போர் போராகக் குவித்து வைத்திருப்பார்
மாடுகள் பட்டினிக்கிடந்தால் உடைந்துபோயிடுவார்
உழவு இயந்திரங்கள்
வயல்களில் இறங்க இறங்க
அப்பா ஏர் ஓட்டும் நாட்கள் குறைய தொடங்கின
வம்படியாக வேலை கேட்டால்
வயதாகிவிட்டென புறக்கணிப்பார்கள்
அக்காவின் கல்யாணம் கைக்கூடி வர
மாடுகளைக் கைமாற்றிவிட்டார்
வேலை இல்லாத நாட்களில்
யாரிடமும்
பேசுவதை குறைத்துக்கொண்டார்
வாசலில் சாணி மெழுகி
மாக்கோலம் வரைந்து
செங்கரும்பு முக்கோணமாக நட்டு
புத்தாடை உடுத்தி
புதுப்பானையில் பச்சரிசியை
சூரியனை வணங்கிய பின் போட்டு
பால்பொங்கி வரும்
பொங்கலில்
மாடுகள் இல்லாத மாட்டுக்கொட்டாயைப்
பார்த்துப் பார்த்து
விசும்பும் அப்பாவின் கண்ணீரும்
கலந்திருந்தது......
-சோலைமாயவன்
15-1-2022
கருத்துகள்
கருத்துரையிடுக