கொசுக்களின் குருதியிலிருந்து
கடிதங்களுக்கு மை தயாரித்துக் கொள்கிறவர்
மானுடத்தின் தலைவாசல்
தாய்மடி
பச்சைமண்ணை ஏந்திக்கொள்ளும்
உள்ளங்கை
கருவறை
நாற்றங்கால்
கடவுள் வணங்கும் சந்நிதானம்
இத்தனை பெயர்களிலும்
இன்னும் புனையாத சில புனைபெயர்களிலும்
உலவும் ஆன்மா ...
கவிதை!
கவிதை கேட்கும் செவிகள் வாய்க்க
காலாற நடக்க வேண்டும்
பாதங்கள் தெருமண்ணைப் புசிக்க வேண்டும்
கண்களுக்கு---
பசியைப் பார்க்கும் பார்வை வேண்டும்
வள்ளுவனுக்குள் வசிக்க வேண்டும்
கம்பனுக்குள் கனிய வேண்டும்
இளங்கோவின் இதயம் வேண்டும்
பாரதியின் பதியம் வேண்டும்
கவிதை கேட்கும் செவிகள் வாய்க்க
காலாற நடக்க வேண்டும்
இதற்கெல்லாம்
புழுங்கும் பூமியில் ஏதொரு புல்வெளி?
குப்பைமேடுகளில்
கரப்பான் பூச்சிகளாய் வாழும் வரத்தைக்
கடவுளா கொடுத்தான்...?
இழந்த சொர்க்கம் பற்றி
எவரும் நினைப்பதில்லை
சாக்கடைக்குள் புழுவாவதே
"சாகா வரம் "
குருதியில் தோய்ந்த வன்முறை வாள்
கொண்டுவந்து சேர்த்ததென்ன ?...
ஈக்கள் மொய்க்கும் பிணம்!
யுகங்களாய்
மனதின் பனிப்பாறைப் பிளவுகளில்
உறங்கிக்கிடக்கும் கிருமிகளைப்
பணத்தோட்டத்தில் பயிரிடுகிறான்
பாழும் மனிதன்!
மனிதனை மீட்கும் மாபெரும் சக்தி
கவிதைக்கு உண்டெனில்
திரும்ப வருவார் தி.க.சி
மானுடத்தின் தூதுவர்களாக
சில பல மகாகவிகள்!...
அவர் பேசக் கேட்டவர்களுக்குப்
பிடிபடக்கூடும் ...
நிகழ்கால இருளழிக்கும் நித்திய நெருப்பு...
அவரது ஒவ்வொரு சொல்லின்
உமிழ்நீர்த் தெறிப்பு!
பதினைந்து பைசா கடுதாசி என்று பழித்தவர்கள்
எழுதிக் குவித்த குப்பைகளிலிருந்து
ஒரு கவிதையைக் கண்டெடுப்பார் தி.க.சி.
அவர்----
காலம் எழுதி வைத்த
கவிதையின் முத்திரைத்தாள்!
--நா.வே.அருள்
கருத்துகள்
கருத்துரையிடுக