தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தாம்பரம் கிளை நடத்திய "பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள்" கவியரங்கத்தில் தலைமை ஏற்று வாசித்த கவிதையின் இறுதிப்பகுதி...
6
ஆண்டவன் செயலென்று
அநீதியை அனுமதித்தோம்
அவதாரம் காக்குமென்று
ஆனவரை காத்திருந்தோம்

கலி முத்திப் போச்சென்று
கதை கதையாய்ப் பேசிக்கொண்டோம்
எது நடந்ததோ
அது நன்றாக நடந்ததாய்
எதிர் செயல்களையும்
ஏற்றுக்கொள்ளப்பழக்கப்பட்டோம்!

மனிதனே தெய்வமென்னும்
மகத்தான தத்துவத்தைப்
புனிதர்கள் சொல்லுகையில்
புளகித்துக் கேட்டிருந்தோம்
புரியாமல் விழித்திருந்தோம்

இனியேனும் --
செயல்படுகிற சிந்தனை வேண்டும்
சிவந்து போகிற கண்கள் வேண்டும்

முள்ளிவாய்க்கால் முதல்
பாலஸ்தீனம் வரை
ஒற்றை உயிருக்கும்
உலகம் பதில் சொல்ல...
ஐ.நா. சபை நமக்கு
அறிக்கை வாசிக்க...
ஒவ்வொரு உலகக் குடிமகனும்
உரக்கக் குரல் கொடுப்போம்

காற்றில் ஏறும் நம் கவிதைக்குதிரைகள்
காஸாவில் இறங்கட்டும்...

கண்ணுறக்கமற்றுச் செய்வோம்
கவிதைச் சவாரி

கண்ணடக்கத்தையும் கடிவாளத்தையும்
கழற்றி எறிவோம்

கொள்ளு தின்னோம்
குடிநீர் கொள்ளோம்

லஜ்ஜை கொள்வோம்
லாயம் புறக்கணிப்போம்

நம் கனைத்தலே ஆயுதச் சீற்றம்
நம் குளம்பொலிகளே
பாலஸ்தீனிய தேசிய கீதம் !

காற்றில் ஏறும் நம் கவிதைக் குதிரைகள்
காஸாவில் இறங்கட்டும்

விமானத் தாக்குதலில் விழுந்த சடலங்களில்
இன்னும் துடிப்படங்காத
இதயங்கள் சேகரிப்போம்...
இதயமே இல்லாத இஸ்ரேல் அரசுக்குப்
பொருத்தி வைத்திட
புரட்சிகள் செய்வோம்

                                     -முற்றும்-
*****************
கவிதை முடிந்திருக்கலாம்...அவர்கள் கனவுகள் இன்னும் ரத்தமும் சதையுமாய் கசிந்து கொண்டிருக்கின்றன....

வாசித்த அனைவருக்கும் வாய்ப்பளித்த தாம்பரம் கிளைக்கும் இந்தக் கவிதையைக் காணிக்கை ஆக்குகிறேன்...

                                                                                   --நா.வே.அருள்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகம்