தமுகச தாம்பரம் கிளை நடத்திய இஸ்ரேலிய அரசுக்கு எதிரான, பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவான "பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள்" தெருஓர நிகழ்வில் நடந்த கவியரங்கத்தில் தலைமை ஏற்று வாசித்த கவிதையிலிருந்து...

நேற்றைய தொடர்ச்சியாக....
3
அந்தக் கனவுக் கொள்ளையனிடம் 
கண்ணிழந்தவர்கள் ஏராளம் 
அவனது தொழில் களவு.
உப தொழில் உளவு 
கைத்தொழில் -
மூளை மழுங்கும் மூலதன வியூகம்!
பொழுதுபோக்கு-
நாடுகள் தோறும் நடத்தும்
நாற்காலி நடனம்.

வேதம் ஓதும் சாத்தான்
விலாசம்: வெள்ளை மாளிகை

இது அமெரிக்க முலாம் பூசிய ஆயுதப்போர்!
அமெரிக்காவின் ஆடு புலி ஆட்டம்
மூலதனத்தின் சதுரங்கம்
பணக் கொள்ளையரின் பாம்பு ஏணி பரமபதம்

இனிப்பு பூசிய காரம்...ஏகாதிபத்தியம்!
பூப்போல் முகமென்று புனிதம் பேசும்
ஆனால்... முள்ளிவாய்க்காலில் முள் மேயும்
காஸாவில் கல் மேயும்
ஈராக்கில் ரத்தம்
லிபியாவில் யுத்தம்
சிரியா, ஈரானுக்குச் சித்தம்!

நம் அரசுகளுக்கு
ஆரேனும் சொல்வீரா?...
அமெரிக்காவின் ஆலிங்கனத்தில்
பிறப்புறுப்பு காணாமல் போவதாகப்
பேச்சடிபடுகிறது!

இந்திய வானிலை அறிக்கையோ
இன்னும் மோசம்!

இஸ்ரேலுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவதில்லை எனத்
தீர்மானமாய் இருக்கிறார்கள்!

இனம் பேசுவோரின் மனம்!

நாடாளுமன்றத்தைவிட்டு
வெட்கித் தலைகுனிந்து வெளிநடப்பு செய்கிறது
மனிதநேயம்...

.....தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகம்