நாமே எதிரிகள்!


அழுது புலம்பவும் அந்நிய மொழி
புன்னகை பூக்க புறத்தியான் பற்கள்
சிரசுக்குள் செருகும் சிறைக்கம்பிகள் குத்தி
முனகும் மூளை.

பச்சைக் கிளியாகும்
பச்சைத் தமிழன்.

நாக்கு இழந்தவர்கள் நாடு
ஒவ்வொருத்தரும் ஊமை!
தாள முடியவில்லை
தமிழ்ச் சோகம்
தத்தளிக்கிறது தமிழ்த் தேசம்!

அன்னிய மொழி இராணுவ
ஆயுதப் பொழிவுகள்!
பள்ளி கல்லூரிகளில்
தமிழ்
பதுங்கு குழிகளில்!

மொழியை அழிக்க...
மூலதனப் புயல்
சனாதன சுனாமி
உலகமய ஊழி!

*
வஞ்சிக்கப்பட்ட வரலாறு ...
தமிழால் பிழைப்பு நடத்துவோரால்
தமிழ் பிழைத்ததென்னும்
தகவல் பிழை!

தானைத் தலைவர்களின் தமிழ் நேசம்
சந்தேகத்திற்கு உரியது...
உணர்ச்சிக் களிமண்ணில்
உருவம் கொடுத்து
கடைசியில் கரைப்பது
கடலில்....

தமிழுக்கு
ஆயிரம் மாலைகளுடன் அலங்காரம்
படுக்க...பாடை!

*
வியாபாரம் ஆனது விளைநிலம்
கொள்ளைக் கொள்முதல்
லஜ்ஜையற்ற லாபம்

ஆட்சேபமில்லை...
அயல்மொழிகள்
பள்ளிகள் தோறும் பாடங்கள் ஆகட்டும்
வீணை ராகத்திலென்ன விகற்பம்?

பாட்டாளிகளுக்குப்  பாஷாணமே...
பரிபாஷை ஆகாத பாஷை!

தமிழ்வழிக் கல்வியே
தாரக மந்திரம் !
ஒவ்வொரு தமிழனின்
உயரிய சுதந்திரம்!

ஊட்டச் சத்தாகலாம்...உலகமொழிகள்
உயிர்ச் சத்து...தமிழ்மொழி

*
ஒருபுறம்...
பட்டிமன்றங்களில் பல் இளிப்புப் பரிகாசம்
கவியரங்கங்களில் கைத்தட்டு சகவாசம்
இவைதாண்டிய இலக்கியத்தில்
"தண்டணை  எழுத்தாளர்..."

மறுபுறம்...
கம்பன்...வள்ளுவன்...
பெயர் கேட்ட ஞாபகம்!

இளங்கோ...
பழைய காலத்து
பள்ளி நண்பனோ?...

ஔவை...
முதியோர் இல்லத்து மூதாட்டி!

கவலைப்பட யாருண்டு?
கடல் நீச்சல் காரனின்
குவளைக் குளியல்!

*
உலக சரித்திரத்தில் உட்கார்ந்திருந்தவன்
இன்று...
காணாமல் போன குலசாமி போல....

இளைஞர்கள் குடிபுக
தமிழ்ப்பால் இல்லாத
கணினி கபே

முடிந்தது கதை...

ஒரு சாண் வயிற்று ஊளைச் சத்தத்தில்
இதயத் துடிப்பு
எப்படிக் கேட்கும்?

*
முத்தமிழ் அறிஞர் உண்டு.
முத்தமிழ் எங்கே?

*
சோளக்காட்டுப்  பொம்மை வைத்து
காக்கைகள் விரட்டித்
தமிழ்ப்பயிர் காத்ததாய்த்
தண்டோரா...
இது-
நரிகளை மேயவைக்கும்
நாடகம்!

*
நாக்கின் மடிப்பில்
வழிவது வார்த்தை
நெஞ்சின் துடிப்பில்
எழுவது வாழ்க்கை
வார்த்தையும் வாழ்க்கையும்
உருளும் தாய்மடி ...தாய்மொழி!

தமிழ்
எல்லா வகையிலும்
இயலும்.
எந்த அரசு முயலும்?

நீதிமன்றம்...நிர்வாக எந்திரம்...
வாழ்க்கை ... கல்வி...வசப்படும் துறைகள் ...
வளர்பிறை மொழியுடன்
வாய்க்குமா ஒரு பொதுமை அரசு?
வாய்க்க வைக்கும் நம்
வரிப்புலி மனசு.

                                --நா.வே.அருள்







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகம்