தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தாம்பரம் கிளையில் 2/8/2014 சனிக்கிழமை பிற்பகல் பீரங்கிகளுக்கு  எதிராக தூரிகைகள் என்கிற நிகழ்வு தொடங்க ஓவியர்கள்  சந்ரு, நடராஜன், கலைச்செல்வன், வெங்கடேசன், ரபீக், சிவப்பிரகாசம் ..... என ஏராளமான ஓவியர்கள் வரையத் தொடங்குகிறார்கள்...கண்கள் செருக பாலஸ்தீனத்து காசாவில் காயம்பட்ட உடலாக உணர்கிறோம்.  உறுப்புகள் சிதைந்த உடல்களில் ஒன்றாக நம் கண் முன்னே குழந்தையின் விரல் வந்து விழுகிறது...உணர்வுகள் கனத்துப்போக...
கவியரங்கம் தொடங்கும் நேரம்...கவியரங்கத்தில் கலந்து கொள்ள கிருஷாங்கினி, ஜோசப் ராஜா, தயானி தாயுமானவன், பாரிவள்ளல், சிவப்பிரகாசம், கங்கை அரசு, தியாகராஜன், அருள்தம்பி ஆகியோர் வந்திருந்தனர். தமுகச தெருவில் தொடர்ந்து கார், பைக் சப்தங்கள் என போய்க்கொண்டே இருந்தாலும் விடாப்பிடியாக கவிதையை உள்வாங்கிய படி அமர்ந்திருந்தவர்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

நான் வாசித்த தலைமைக் கவிதையிலிருந்து...

பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள்...

பீரங்கிகள்
உலோகங்களின் கூட்டுறவில் உருவாக்கப்பட்டவை

தூரிகைகள்
உயிர்ப்பின் குறியீடாகவும்
உணர்ச்சியின் வெளியீடாகவும் இருக்கும்
மரங்களிலிருந்தும்,
உயிர்வாழும் ஜீவன்களின் உரோமங்களிலிருந்தும்
உருவாகின்றன

பீரங்கியைப் பிறர் இயக்க வேண்டும்
தூரிகை
தானே இயங்கும் தன்னிச்சையானது

மரணம் போர்த்திய  உலோகம்
பீரங்கி...
துளைக்கும்!

உமி மூடிய தூரிகை
நெல்...
முளைக்கும்!

பீரங்கி மரணத்தோடு சம்பந்தப்பட்டது
தூரிகை...வாழ்வோடு!

பீரங்கி
தோற்பதற்காக வெல்லலாம்!

தூரிகை
வெல்வதற்காக தோற்கலாம்!

எத்தனையோ  சடலங்களை விழுங்கிய பின்னும்
வாய் பிளந்தே கிடக்கும் பீரங்கி
மரணத்தின் பள்ளத்தாக்கு!

எத்தனையோ வனங்களை ஈன்ற பின்னும்
மூடியே கிடக்கிறது மண்
வாழ்க்கையின் தூரிகை!

                             ...தொடரும்...




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்