பாம்புக் காதுகளும் மூளைச் சங்கும்
ஆதிபெருந்தேவன்
எதையுமே கேட்பதில்லை என அடம் பிடித்துக்கொண்டிருக்கும் செவிட்டுச் செவிக்கு
மொண்ணையாக விரும்பாத மூளை எழுதிக்கொள்ளும் மடல்!
செவிட்டுச் செவியே, நான் கத்துகிற கத்தல் இந்திய தேசத்துக்கே கேட்டாலும் கேட்கும்....உனக்குக் கேட்கவில்லையா?...கேள்விகுறி போல் வளைந்திருக்கும் உனது இரண்டு பிம்பங்களும் எப்போதுஊமைகளாயின ? உனது இரண்டு "காட்சிப் பிழைகளும்" அரசு என்கிற இரும்பு எந்திர முட்டையின் இருபுறத்திலும் பொருத்தப்பட்ட அலங்கார உறுப்புகளா? அல்லது கண்கள் மூடிக்கொண்டிருக்கும்முகத்தின் ஆணவச் சதைப் பிதுங்கல்களா? எனில், கேட்கக் கூடாது என்பதற்காகப் படைக்கப்பட்டிருப்பதற்குப் பெயர் காதுகளா?...அழுந்தத் தலைப்பாகைக் கட்டிய ஒருவனிடம் ரகசியம் சொன்னஊமையின் கதை ஆகிவிட்டது என் கதை!
நாடு முழுவதும் ஆர்ப்பாட்டமும் மறியலும் சட்டமன்றத் தீர்மானங்களாகவும் உலவுகிற வால்மார்ட் ராட்சசத்துக்கு எதிரான உணர்வலைகளை சளியைச் சிந்திப்போடுவதுபோல் சிந்திப்போட்டுவிட்டுஅப்பால் நகரும் உனக்கு அமெரிக்க ஜலதோஷமா? ஆணவ நோயா?
அடுத்த நொடியில் இறக்கப் போகிறவனின் கடைசி முணுமுணுப்பைக் கூட அலட்சியப்படுத்துகிற ஆணவப் போக்கிற்கு என்ன பெயர்? ஒரு
விடுகதை போடுகிறேன்...உனக்குத் தெரிந்தால் சொல்லு பார்ப்போம்...அமெரிக்காவில் ஒருவன் கொட்டாவி விட்டால் போதுமாம்! இந்தியாவில் ஒருவன் தூங்கி விடுகிறானாம்! அவன் யார்?
வியாபாரம் செய்ய வந்தவர்கள் அரசியல் செய்வதும், அரசியல் செய்ய வந்தவர்கள் வியாபாரம் செய்வதும் உனக்குத் தெரிந்ததுதானே?...ஒரு கிழக்கிந்தியக் கம்பெனியை உள்ளே விட்டுவிட்டு இந்தியாபட்ட பாடு உனக்குத் தெரியாதா? இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப் பட்டம் சுமந்தார்கள் இவர்களின் பாட்டனும் பூட்டனும்... இப்போ...கிளை கிளையாய், மரம் மரமாய் உள்ளே நுழைகின்றனராட்சச வடிவம் கொண்ட புதுப்புது கிழக்கிந்தியக் கம்பெனிகள்...ஆக்டோபஸ் கைகளில் சிக்கிய தலைப்பிரட்டை மாதிரி... பாவம் இந்தியன்!
வாங்குகிற இந்தியனுக்குச் சவப்பெட்டியும் விற்க வருகிறவனுக்கு வரவேற்பு வளையமும் ஒரே மரத்தில் செய்கிற அதிசய அரசியல் தச்சனைப் பற்றி என்ன சொல்ல?
பிரச்சினையின் மையப் புள்ளி இதுதான்...ஐம்பத்தொரு சதவிகிதத்துக்கும் மேலாக சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு!...மேலோட்டமாகப் பார்த்தால் வசதியும் வளர்ச்சியும் வரட்டும் என்றுசிலரும், ரொம்பக் குறைந்த விலைகளுக்குப் பொருள்கள் வாங்கலாம் என்று சிலரும் கணக்குப் போடலாம்... அந்தக் கணக்கு தப்புக் கணக்கு என்று காலம் கடந்து புரிந்து கொண்டால், இந்தியர்களுக்குஎன்ன லாபம்? அமெரிக்க கஜானாவுக்கு லாபம் என்று அலுவாலியா மன்மோகன சிதம்பரக் கம்பெனிகள் கணக்குப் போடுவது உனக்கெங்கே தெரியப்போகிறது, கேட்காத செவியே!
கேள்வி இதுதான்... பாச்சி பல்லி உலவும் இந்திய சமையலறைகளில் வால்மார்ட் அஞ்சறைப்பெட்டிக்கு அவசியம் என்ன? வால்மார்ட் என்பது பனிமலை ஒன்றின் நுனி மட்டும்தான்...அமெரிக்க பணஅரக்கர்கள் வசதியாகப் படுத்துப் புரள இந்திய இடுகாடு தேவைப்படுகிறதாம்...எலும்புகூடு கட்டில்களுக்குத்தான் இந்திய விவசாயிகளின் நிர்பந்திக்கப்பட்ட தற்கொலைகள்...சில்லறை வர்த்தகத்துக்குஅடுத்தபடியாக விவசாயம்...ஒரே துப்பாக்கியில் இரண்டு குழல்கள்! அந்த கர்ண கடூர ஓசைகளை இசைப்பதற்காகத்தான் முட்டி மோதி முணுமுணுக்கின்றன இந்தியாவில் "மூன்று" புல்லாங்குழல்கள்!
என்ன சொல்கிறார்கள் என்பது மாத்திரமல்ல... யார் சொல்கிறார்கள் என்பதும் கவனிக்கப் படவேண்டிய அவசியம் இருக்கிறது...ஓநாய்களை நம்பிவிட்டால், ஆடுகளைக் கைவிடுகிறோம் என்றுபொருள்...பரம பத ஆட்டத்தில் யார் பாம்பு? யார் ஏணி ? எப்படித் தெரிந்து கொள்வது?
""இந்தியாவில் தொழில் முதலீட்டுக்கான சூழல் மோசமாகிக் கொண்டே வருகிறது"" - அமெரிக்க அதிபர் கவலைப்படுகிறார்! சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு இடம்பெற இந்தியாவில் உள்ளதடைகள் பற்றிக் கவலைப் படுகிறார்களாம் அமெரிக்க உலக வியாபாரிகள்! அமெரிக்க வாழ்வாதாரம் குறைந்ததை அடுத்து அந்த நாட்டில் சில்லரைப் பொருள்களுக்குப் போதிய கிராக்கி இல்லை. துண்டுபோட்டு மூடி கை விரல்களை மாற்றி மாற்றி அமுக்கிப் பார்த்தாலும் படியவில்லை...அதனால் இப்போதைய இலக்கு.... இந்தியா! அமெரிக்காவில் பயன்படுத்தி குப்பையில் போட வேண்டுமா?...இந்தியாவில் போட்டுவிடலாம் என்பது அவர்கள் கணக்கு!
அட கேட்காத செவியே...சில்லறை வர்த்தகம் என்றால் சாதாரண விஷயமே இல்லை. ஒரு தேசத்தின் பொருளாதார ஆணிவேர் அது. எந்தத் துறையில் எதை உற்பத்தி செய்தாலும் அதை நுகர்வோருக்குசில்லறை வர்த்தகம் மூலம்தான் விற்க முடியும் என்பது யதார்த்தம்! அதனால்தான் உலக சில்லறை வர்த்தக வியாபாரிகள் உலகமெல்லாம் வரிசை கட்டி நிற்கிறார்கள்...அமெரிக்க முதலாளிகளின்வால்மார்ட், பிரான்சு முதலாளிகளின் கேர்போர், பிரிட்டன் முதலாளிகளின் டெஸ்கோ, ஜெர்மனி முதலாளிகளின் மெட்ரோ, குரோகர், ஷ்வார்ஸ், காஸ்ட்கோ, தி ஹோம் டெபொ, வால்கிரீன் கோ, ஆல்டி, இன்னபிற...
கேப்பையில நெய் வடியுதுன்னா, கேட்டவனுக்கு எங்க போச்சுன்னு சொல்லுவாங்க...அப்படித்தான் சிலர் கயிறு திரித்து விடுகிற கதையும்... அதாவது, விவசாயிகளிடமிருந்து கூடுதல் விலைக்கு வாங்கி,அதை நுகர்வோருக்குக் குறைந்த விலைக்கு விற்பார்கள் என்பதும்... அமெரிக்காவில் என்ன நடந்தது? விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். ..வால்மார்ட் வருவதற்குமுன் விவசாயிகளுக்குக் கிடைத்தது ஒரு டாலருக்கு 70 சதவிகிதம் என்றால், வால்மார்ட் அமெரிக்காவுக்குள் நுழைந்ததற்குப் பின்பு ஒரு டாலருக்கு 10 சதவிகிதம்தான். சராசரியாக ஒரு அமெரிக்கனின்வயல் பரப்பு 1089 ஏக்கர். அமெரிக்காவில் விவசாயப் பண்ணையின் அளவு இந்திய விவசாயப் பண்ணையைவிட 250 மடங்கு அதிகம். அவர்களாலேயே தாக்குப் பிடிக்க முடியவில்லை என்றால்...2ஏக்கர், 3 ஏக்கர் இந்தியப் பண்ணையார்களால் (!?) என்ன செய்து விட முடியும்? நிற்க.
நேரடி அந்நிய முதலீடு அன்னியச் செலாவணியை நிரந்தரமாக அதிகரிக்கும் என்று சொல்ல முடியாது. ஏற்றுமதி மூலமாகவும் என்.ஆர்.ஓ கணக்கு மூலமாகவும் வெளிநாட்டு உதவி மூலமாகவும் வருகிற அன்னியச் செலாவணிதான் நிரந்தர அன்னியச் செலாவணி. நேரடி அந்நிய முதலீடு என்பது வெறும் தற்காலிகமானது மாத்திரமல்ல. லாபமாக வெளியேறிக்கொண்டே இருக்கும். அதனால்,இதற்குப் பெயர் சொத்து அன்னியச் செலாவணி அல்ல. கடன்படு அன்னியச் செலாவணி.
சில பொருளாதாரப் புள்ளிகள் (!?) நேரடி அந்நிய முதலீட்டை ஏன் ஆதரிக்கிறார்கள்?.."இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் சமீப காலங்களில் அரசு சலுகைகளின் வாயிலாக ஊதிக் கொழுத்து விட்டதால்,இவர்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள கள்ள உறவை அச்சுறுத்தும் எந்த ஒரு விஷயத்தையும் தங்களுடைய வாழ்வா, சாவா என்றே பார்க்கின்றன....அவர்களின் ஒரே சிந்தனை "எவ்வாறு சொத்துக்குவிப்பைத் தீவிரப்படுத்துவது என்பது மட்டுமே!" இந்த நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸின் தலையங்கத்தை யாராவது படிக்கக் கேட்டிருக்கிறாயா, செவியே?
உனக்கும் எனக்குமிடையில் இருந்த நரம்பு பாலம் என் அறுந்து விழுந்ததோ தெரியவில்லை...சரி இதைக் கேட்க முயற்சி செய்...அமெரிக்காவில் உள்ள ஆயாவா மாநில பல்கலைக் கழகப் பேராசிரியர்கென்னத் இ ஸ்டோன் தனது ஆய்வில், " வால்மார்ட் புகுந்த சிறிய நகரங்களில் பத்தாண்டு காலத்தில் 47 விழுக்காடு அளவுக்கு சில்லறை வர்த்தகம் காணாமல் போய்விட்டது" என்கிறார். 1987 களில்அமெரிக்காவில் எங்கெல்லாம் வால்மார்ட் பேரங்காடிகள் இருந்தனவோ, அங்கெல்லாம் 1999 வாக்கில் மற்ற இடங்களை விட வறுமையின் கொடுமை அதிகமாக இருந்தது என்று அமெரிக்காவின்பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகம் நடத்திய ஆவில் தெரியவந்துள்ளது.
ஊழல் உலகமயமாக்கப்பட்டு விட்டதாக கார்ப்பரேட் நிறுவனங்கள் கருதிக்கொண்டு கண்ணியமற்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றன, "கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதுதடை செய்யப்பட வேண்டும். அரசியலில் ஊழல் உருவாவதற்கான மூல காரணம் இதுதான்" என்று மாநிலங்களவை உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எச்சரிப்பது சரிதானே?
உழைப்பாளிகளின் உழைப்பில் பெரும்பகுதி கார்ப்பரேட் நிறுவனங்களின் அதீத லாபமாகிறது என்று அமெரிக்கப் பத்திரிகையாளர் பால் க்ருக்மேன் சொல்வதை நிராகரிக்க முடியுமா?
கேளாத செவியே, ஆதியில் வேதம் படிப்பதைக் கேட்ட சூத்திரனின் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றினார்களாம்! நீ இருந்தும் பயனில்லாமல் இருப்பதால் ஒருநாள் ஈயத்தை ஊற்றத்தான் போகிறேன் உனக்குள்
"கேளாச் செவியால் மீளாத் துயர்" என்று யாரேனும் சொல்வதற்கு முன் விரைவாய் விழித்துக்கொள்! இசை அருவி பாயும் ஓடை மட்டுமல்ல, செவியின் ஓட்டை...முழங்கும் சங்கொலியை முழுதாய்விழுங்கும் மூலாதாரமும் கூட...மூளைச் சலவை செய்கிற அந்நியர்களின் குழைவுகள் முதலில் வந்தடைவது காதுகளைத்தானே? அதனால் கவனமாக இருக்க வேண்டும் நீ.
இப்படிக்கு,
தலை நாற்காலியில் அமர்ந்திருக்கும்
தன்மானக்காரன்.
கருத்துகள்
கருத்துரையிடுக