அசுரன்
தாழிட்டு
வீட்டில்
பதிரமாகிவிடுகிற இருள் நேரத்தில்
எங்கோ ஓர்
இருள் மலைக்குள்
இரையைப் பிய்த்துப் பிராண்டி
விழுங்கும்
பேய் விலங்கொன்று.
***
புசிக்கப்பட்டுத் துப்பப்பட்டு
நிராதரவான பெண் ஒருத்தியின்
சுருண்டு கிடக்கும் உள்ளாடைமேல்
இழையாய்ப் பொசியும்
அவள் கூந்தலிலிருந்து உதிர்ந்த
ஓரிழை மயிர்.
***
காற்றில் ஓய்ந்து உறைய மறுக்கும்
கதறல்களும்
கன்னத்தில் காய்ந்து உலர்ந்த
கண்ணீர்த் துளிகளும்
செய்யும் கெக்கெலி யில்
வெட்கி மரவட்டையாய்ச்
சுருளும் என் கவிதை.
***
இந்த க்ஷணத்தில்
என்னைச் சிலை வடித்தால்
விகாரமான உருவமாவேன்
கோரைப் பற்கள் முளைக்கும்
கைகளில் ஆயுதங்கள் வளரும்
இடம் பெயர்ந்து அசுரனாய் அசைவேன்
இந்தப் பூமிக் கோளத்தை
ஒற்றைக் கையால்
கருந்துளை ஒன்றில் தூக்கி எறிவேன்.
--நா. வே. அருள்
கருத்துகள்
கருத்துரையிடுக