பொதுவாகவே ஒவ்வொருவரின் கவிதை ரசனையும் அவர் சார்ந்த பல்வேறு காரணிகளுடன் இணைந்ததுதான். ....... சுகுமாரனின் பயணத்தின் சங்கீதங்கள் படித்திருக்கிறேன். இன்று அதிகாலையில் அவருடைய "நீருக்குக் கதவுகள் இல்லை" தொகுப்பின் இரண்டாவது கவிதை 'பலிக்கோழை' -யைப் படிக்க நேர்ந்தது.
இன்றைய காலச் சூழலில் - கவிதையின் இருப்பு குறித்த சிந்தனையே கேள்விக்குறி ஆகிவிட்டதாகக் கருத இடமுள்ள சந்தையில் - இந்தக் கவிதை என்னை உலுக்கி விட்டது. கவிதைக்காகவே வாழ்கிறவர்களுக்கு கவிதையின் இந்த மாயம் சாத்தியம்தான் என்பதைப் புரிந்துகொண்டேன். இப்படி வாழ்நாளில் ஏதேனும் ஒரு கவிதை எழுதிவிட்டாலும் இலக்கியத் திருப்தி கொள்ளலாம். நிற்க.
ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டுமெனில் ஓவ்வொருவனும் தன் மனதிலிருந்து சர்வாதிகாரத்தைக் கழற்றி எறிய வேண்டும். தீண்டாமையும், சாதியும் ஒழிய வேண்டுமெனில் தலித்துகள் தமது உரிமைகளுக்காகப் போராடுகிற அதே நேரத்தில் பிறந்து விட்ட காரணத்தால் ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவர்களில் மனசாட்சி உள்ளவர்கள் எல்லாம் தலித்துகளுடன் இணைந்து சாதி ஒழிப்புக்குப் போராட வேண்டும்.
தர்மபுரியைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். தமிழகத்தில் ஒரு சாலைதான் தருமபுரி. இந்தியாவின் ஓர் ஊர்தான் தமிழகம். தலித்துகளுக்கு எதிராக திட்டமிட்டு நிகழ்த்தப்பெறும் வன்கொடுமை, இன்னபிறவின் ஆதிக்கச் சாதிக்கார மனநிலைக்கு ஆட்பட்ட அடியாள் ஒருவனின் மெத்தப் பணிவான சிறு கேள்வியாய்த் தொடர்கிறது கவிதை... விடுபட்ட வார்த்தைகளை யூகித்தும் மூல காரணியை அனுமானித்தும் அவதானிக்க வேண்டிய நுட்பமான கவிதை. அவசரப்பட்ட குறுக்கீடுகளை ஒதுக்கிவிட்டு உள்நுழைந்து பயணிக்கக் கோரும் இந்த 'பலிக்கோழை' கவிதை....
இனி கவிதை....
பலிக்கோழை
அபத்தமானவை என்றும்
கொடூரமானவை என்றும்
தெரிந்தும் கூட
உமது ஆணைகளை ஓர் எழுத்துப் பிசகாமல்
நிறைவேற்றியிருக்கிறேன், ஐயா ,
அப்போதெல்லாம் நான்
என்னாலேயே அவமதிக்கப் பட்டிருக்கிறேன்.
கொன்றது நாமல்ல எனினும்
சடலங்களைக் காட்டி யாசிக்கச் சொன்னீர்
உமது வாக்கை மறுக்கத் தெரியாமல்
ஒலி பெருக்கி வைத்து
ஒப்பாரி பாடினேன்
அப்போதெல்லாம் என் கண்ணீர்
எனக்கே மூத்திரமாய்க் கரித்தது.
விரித்த துண்டில் சிதறிய நாணயங்களைப்
பொறுக்க நீர் குனிந்தபோது
நிலம் பிளந்து உம்மை விழுங்கட்டுமென்று
விரும்பிருக்கிறேன்
அதுவோ உம நிலம்
நீர் சொல்லாமல் இளகுமா?
சிதைத்தது நாமல்ல எனினும்
குலைந்த முலைகளையும் கிழிந்த யோனியையும்
எல்லாரும் காண வெளியரங்கமாக்கச் சொன்னீர்
உமது கட்டளைக்குப் பணிந்து
பேரொளி விளக்கைப் பொருத்தி
ஊர்க் காட்சி யாக்கினேன்
அப்போதெல்லாம் என் விந்து
என்னையே அமிலமாகப் பொசுக்கியது.
காட்சிக் கட்டணத்தை
வசூலிக்க நீர் நடந்தபோது
மலைசரிந்து நீர் புதையக் கூடாதாவென்று
பிரார்த்தித் திருக்கிறேன்
அதுவோ உம கடவுள்
நீர் ஆட்டுவிக்காமல் இயங்குமா?
விபத்துக்குக் காரணம் நாமல்ல எனினும்
இறந்து கிடந்தவனின் உடைமையை அபகரிக்கச் சொன்னீர்
உமது சொல்லுக்குப் பணிந்து
தடயமில்லாமல் திருடினேன்
அப்போதெல்லாம் என் குடல்
என் வாய்க்குள் நாகமாய் நெளிந்தது
பறிமுதல் பொருளைக்
கக்கத்தில் இடுக்கிகொண்ட உம்மை
சிறைக்குள் தள்ளிவிடத் துடித்திருக்கிறேன்
அங்கோ உம அதிகாரம்
நீர் பேசினால் கம்பிகள் நிற்குமா?
இவை உதாரணங்கள் ஐயா,
இதைச் செய்தவர் நீரல்ல
ஆனால் நீர்தான் என்றும்
தெரியும் எனக்கு
இதைச் செய்தவன் நானல்ல
என்மேல் அமர்ந்திருக்கும் நீர்தான் என்றும்
தெரியும் உமக்கு.
எல்லாம் கடந்து
இன்று நீர்
அபகரித்தது என் பொருளை
சிதைத்தது என் குறியை
கொள்ளவிருப்பது என்னை
அதைச் செய்பவர் நீரல்ல
ஆனால்
என்னைப்போன்ற இன்னொரு பலிக் கோழையின்
தோளில் வீற்றிருக்கும் நீர்தான்
நீர் அறியாமல் போனீர்
என் அவமானங்களில் கனன்று கனன்று
இப்போது நான் எரிதழல்
ஓர் எழுத்துப் பிசகாமல்
உமது ஆணைகளை நிறைவேற்றிய நான்
உமது பாதங்களைத் தொட்டு
ஒருமுறை ஒரே ஒரு முறை
வணங்க விரும்புகிறேன் ஐயா.
கருத்துகள்
கருத்துரையிடுக