கனடா பயணக் குறிப்புகள்
சாலை விதிகளும் சமூக விதிகளும்
•••••••••••••••••••••••••••••
நா.வே.அருள்

கனடாச் சாலைகளில் வலப்புறத் திசைப் பயணங்களாக இருக்கின்றன.  நம் நாட்டில் எப்படிச் சாலைகளில் இடப்புறம் போவோமோ அப்படி அங்கு வாகனங்கள் எல்லாமே வலப்புற விதிகளைப் பின்பற்றிப் போய்க்கொண்டிருந்தன.  “சாலையில் மட்டுமல்ல, சமூகத்திலும் இடதுபுறம் பாதுகாப்பானது” என்றெல்லாம் இளமையில் கவிதை என்ற நினைப்பில் எழுதிக்கொண்டிருந்த எனக்கு இது ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது.
இடதுபுறச் சாலை விதிகள்தான் நமக்குப் பரிச்சயம்.  நமக்கு மட்டுமல்ல.  நம்மைப் போலவே பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் காலனி நாடுகளாக இருந்த ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா நாடுகளிலும் இப்படித்தாம்.  ஏன் அதன் காலனி நாடான கனடாவிலும் இடதுபுறச் சாலை விதிகள்தாம் இருந்தன.  ஏறக்குறைய எழுபத்தைந்து நாடுகளில் இடதுபுற சாலை விதிகள் இருக்கின்றன.  உலகின் மொத்த மக்கள் தொகையில் முப்பத்தைந்து விழுக்காட்டு மக்கள் தொகை இடதுபுற விதிகளைப் பின்பற்றுகிறார்கள். இந்தியா, ஆங்காங், புரூனே, வங்காளதேசம், பூட்டான், மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், இந்தோநேசியா, இலங்கை ஆகிய ஆசிய நாடுகளிலும், கென்யா, தென்னாப்ரிக்கா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, மாலவி, ஜாம்பியா, நமீபியா, உகாண்டா, தான்சானியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் இடதுபுறச் சாலை விதிகள்தாம்.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வலதுபுறச் சாலைவிதிகள் பின்பற்றப்படுகின்றன.  அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால் தொடர்புடைய நாடுகள் இடதுபுறச் சாலை விதிகளிலிருந்து வலதுபுறச் சாலைவிதிகளுக்கு மாறிய வரலாறுகளும் உண்டு.
சாலை விதிகள் எப்படித் தோன்ற ஆரம்பித்தன என்பது ரொம்பவும் சுவாரசியமான விஷயம்.  மனிதன் இயல்பிலேயே வலதுகைப் பழக்கமுள்ளவனாக இருந்திருக்கிறான்.  அவன் குதிரைகளில் பயணிக்கிறபோது வலதுகாலைத் தூக்கிப்போட்டுக் குதிரைகளில் ஏறுவான்.  இயல்பிலேயே நீண்ட வாள்களும் குறுவாள்களும் இடதுபுறத்தில் வைத்திருப்பது வசதியாக இருந்திருக்கிறது. எதிரிகள் வருகிறபோது சடாரென வாளினை வலதுகையால் உருவுவதற்கும் இடதுபுறம் வாள்கள் இருப்பதுதான் சௌகரியம்.  சவாரியிலிருந்து இறங்குகிறபோது வலதுகாலைத் தூக்கிப் பின்வாக்கில் தரையில் கால் ஊன்றுவான். அதாவது இடதுபுறத்தில் இறங்குவான்.  ஏறுவதற்கும் இறங்குவதற்கும் அவன் இடதுபுறச் சாலையில் பயணிப்பதுதான் பாதுகாப்பானதாக இருந்தது.  ஒருவேளை சாலையின் வலதுபுறம் பயணித்தால் அவன் அவசரமாக இறங்குகிறபோது சாலையின் நடுவில் இறங்கவேண்டியதாக இருக்கும்.  இப்படி ஒருகாலத்தில் குதிரைவீரர்களால் தன்னிச்சையாக உருவானதுதான் இடதுபுறச் சாலைப் பயணம்.  இப்போதும் இரு சக்கர வாகனங்களுக்கும் இந்த சௌகரியங்கள் அப்படியே பொருந்தும்.
இடதுபுறச் சாலை விதியானது பின் எப்படி வலதுபுறப் பழக்கமாக மாறியது என்பதும் இன்னொரு சுவாரசியமான தகவல்தான்.  கி.பி.1700 களில் பிரான்சு, அமெரிக்கா நாடுகளில் நிறைய குதிரைகள் பூட்டிய வண்டிகளில் பண்ணைப் பொருள்களை ஏற்றிச் செல்வார்கள்.  குதிரைகளைச் செலுத்துபவர்க்கென இருக்கை இருக்காது.  முன்னால் வரிசையாகப் பூட்டியிருக்கும் ஏழு குதிரைகளில் இடது குதிரையில் அமர்ந்தபடி ஓட்டிச் செல்வார்.  வலது கையால் சாட்டையைச் சுழற்றி வலது பக்கம் இருக்கிற குதிரைகளைச் செலுத்துவார். இதுவும் சௌகரியம் சார்ந்த விஷயம்தான்.  எதிரே வருகிற வேறு டிரக்குகளின் வலதுபுறம் இவன் செலுத்துகிற வாகனத்தை இடித்துவிடக் கூடாது. இடதுபுறக் குதிரையில் அமர்ந்திருப்பவனுக்குப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கவேண்டுமெனில் இவன் செலுத்துகிற வாகனம் வலதுபுறமாகச் சென்றால்தான் வசதி.  அதனால்தான் வலதுபுறமாக வாகனத்தைச் செலுத்துகிற வழக்கம் வர ஆரம்பித்தது.  . இப்படித்தான் வலதுபுறச் சாலை விதிகள் வரலாயின. 
கி.பி.1789 ஆம் ஆண்டு நடந்த பிரஞ்சுப் புரட்சியில் பிரபுக்கள் எல்லாம் சாலையின் இடதுபுறமாக அணிவகுத்துச் சென்றனர்.  உழுகுடிகள் அனைவரும் வலதுபுறமாகச் சென்றனர்.  நெப்போலியனின் ஆட்சியை ஒட்டித்தான் பிரஞ்சு நாட்டிலும் அவன் கைப்பற்றிய நாடுகளிலும் பெருமளவில் வலதுபுறச் சாலை விதிகள் வந்தன.  கி.பி. 1794 இல் சட்டத்தின் மூலமாக பாரிசில் வலப்புறச் சாலைவிதிகள் அமலுக்கு வந்தன.  அந்தந்த நாட்டின் சௌகரியத்திற்கு ஏற்றவாறும் அதன் முந்தைய வழக்கத்தின்படியும் அந்த நாடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாட்டின் சாலை விதிகளைப் பொறுத்தும் தமக்கு ஏற்ற சாலைவிதைகளைப் பின்பற்றுகின்றன. உலகில் நிலவுகிற வலப்புற இடப்புறச் சாலை விதிகள் நம் நாட்டில் வைணவத்தில் நடந்த வடகலை தென்கலை வரலாற்றுச் சண்டையை ஞாபகமூட்டுகின்றன.
சுவாமி தேசிகனை ஆசானாகக் கொண்டு சில ஐதீகங்களைப் பின்பற்றுபவர்கள் வடகலை என்று அறியப்பட்டார்கள்.  கோயிலில் ஒரு நாளைக்கு நான்கு முறைகள் வழிபாடு செய்யவேண்டும். வைணவக் கோயில்களின் நூற்றியெட்டுத் திவ்ய ஆலயங்களில் முக்கியமானவற்றில் வடகலையைப் பின்பற்றுபவர்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.  வடகலையைப் பின்பற்றுவர்கள் குரங்குக் குட்டி எப்படித் தன் தாயைப் பற்றிக் கொள்கிறதோ அப்படிக் குருவைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்றனர். சமஸ்கிருதம், வேதம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.  காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் வடகலை வழக்காறுதான் பின்பற்றப்படுகிறது. இவர்கள் நெற்றியில் அணியும் நாமம், கால் வைக்காமல் U வடிவத்தில் இருக்கும்.
தென்கலையைப் பின்பற்றுபவர்கள் நாமத்தை Y வடிவத்தில் மூக்குக்கு நேரே கால் வைத்த நாமத்தை இட்டுக்கொள்பவர்கள்.  இவர்கள் லோகாச்சார்யன் அவர்கள் சொன்ன விதத்தைப் பின்பற்றுபவர்கள்.  திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ஸ்ரீராமானுஜர், திருவோணத்தில் பிறந்த ஸ்ரீதேசிகன் ஆகிய இருவரையும் குருவாக ஏற்றுக்கொண்டவர்கள்.  இரண்டு நட்சத்திரங்களும் திரு என்பதை அடையாகக் கொண்டிருப்பதால் இவர்கள் திரு என்பதன் முக்கியத்துவத்தை விதந்தோதுபவர்கள். வைணவ ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சோளிங்கர், மகாபலிபுரம் ஸ்ரீஸ்தல சயனப்பெருமாள் ஆகிய கோயில்கள் தென்கலை பின்பற்றப்படுகிறது. எப்படிப் பூனை தன் குட்டிகளைத் தானே காப்பாற்றுகிறதோ அப்படி கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்கிற கொள்கை இவர்களுடையது.
எந்த வழக்கத்தைப் பின்பற்றவேண்டும் என்பதில் தகராறுகள் தொடர்ந்துவந்தன.  இந்த வடகலை தென்கலை வரலாற்றுச் சண்டை நீதிமன்றம் வரைக்கும் சென்றுவிட்டது.
வைணவத்தில் இது பிரிவினைவாதப் போக்கு என்று அழைத்த நீதியரசர் வைத்தியநாதன் தனது தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு சுட்டிக்காட்டுகிறார்.  “யாரும் வந்து வழிபடுகிற இடம் கோயில்.  ஐயங்கார் சமூகத்தில் நிலவும் துரதிருஷ்டவசமான இந்த வடகலை தென்கலை வழிபாட்டு வேறுபாடுகளுக்கு இன்னும் தீர்வினை எட்ட முடியவில்லை.  விண்வெளியின் ஓடுபாதையில் இந்த உலகம் சுற்றிக்கொண்டிருக்கும் வரை இந்த வேறுபாடுகளுக்குத் தீர்வு காண முடியாது. மனிதர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வதை விட இவர்கள் எப்படி மனிதத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.”
சமூக விதிகள் மற்றும் ஐதீக விதிகளை விடசாலைவிதிகள் இலகுவாகத்தான் இருக்கின்றன. 
                                                         …..பயணிப்போம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்