பயணக் குறிப்புகள்
மனம் ஒரு கோவேறு கழுதை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நா,வே.அருள்
~~~~~~~~~~~~~~
உலக வரைபடத்தில் பார்த்துக்கொண்டிருந்த வெளிநாடு ஒன்றில்
நேரடியாகக் கால்வைக்க முடியும் என்று கனவுகூட கண்டதில்லை. நம் வாழ்வின் சக்கரங்கள் ஒரு புதைமணலில் சிக்கிக்
கொண்டிருக்கும்போது ஆகாயத்துப் பறவைகளை அண்ணாந்து பார்க்க முடிவதில்லை. அதுவும் ஓர் அலுமினியப் பறவை மூலம் பறந்து அண்டை
நாட்டுக்குப் போவதென்பது அத்துணை எளிதானதல்ல.
ஏதோ என் வாழ்விலும் நிகழ்ந்துவிட்டது.
கனடாவின் வான்கூவர் நகரை அடைகிற போது ஒருமுறை மீண்டும் மனம்
சென்னையிலிருந்து விமானத்தில் வந்த தருணங்களை அசைபோட ஆரம்பித்தது. சென்னையில் விமானத்துக்குள் ஏறியதும் கைச்சுமைகளைத்
தலைக்குமேல் இருக்கும் தாங்கு பெட்டிகளில் வைத்து அடைத்துவிட்டோம். ஒவ்வொரு இருக்கைக்கு
எதிரேயும் ஒரு மின்திரை ஒளிர்ந்து கொண்டிருந்தது.
காதில் கேட்கும் கருவிகளைப் பொருத்திக் கொண்டு விமானத்தின் பறத்தலைக் கவனிக்கலாம். பருவ மாற்றங்களைப் பார்த்துக் கொண்டு வரலாம். இசையை ரசித்துக்கொண்டு வரலாம். சினிமாக்களைத் திரையிட்டுக் கொள்ளலாம். நான் கிளின்ட் ஈஸ்ட்வுட் இன் மியூல் (கோவேறு கழுதை)
பார்த்து முடித்திருந்தேன். அது ஒரு டிரக்
ஓட்டுநரின் கதை. அவன் எப்படி போதைப் பொருள்களுடன்
டிரக் ஓட்ட நேர்கிறது என்று சொல்லப் பட்டிருக்கும். அவன் குடும்பத்தினரின் கனவையோ, விருப்பு வெறுப்புகள்
பற்றிய சிந்தனை இல்லாமல் அவனே அவனுக்கான வாழ்க்கையை வாழ்வான். கடைசியில் அவன் வழக்கைச் சந்திக்க வேண்டிவரும். அவன் குற்றவாளிக் கூண்டில் வைத்து விசாரிக்கப் படுவான்.
வாழ்க்கையில் அவரவரும் ஏதோ ஒரு சுமையைக் கோவேறு கழுதையைப் போலவே சுமக்க ஆரம்பித்துவிடுகிறோம். ஆகாயத்துக் கோவேறு கழுதைதான் ஆகாய விமானம். விமானத்தைவிட்டு
இறங்கிவிட்டோம். ஆனால் இன்னும் என் மனம் விமானத்தையே
சுமந்து கொண்டிருந்தது.
விமானத்தைவிட்டு இறங்கி நிலையத்திற்குள் காலடிவைப்பது ஒரு
கனவினை மெல்லத் தீண்டுவது போல இருந்தது. மனிதர்கள்
எல்லோரும் வெள்ளை வெள்ளையாக இருந்தார்கள். பெண்கள் அரை டரவுசர் போட்டுக் கொண்டு அங்கும்
இங்கும் சுதந்திரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். நிலையத்திற்குள் இருந்த கடைகள் எல்லாம் மிகவும் நவீனமாக
இருந்தன. பொதுவாக கூட்டம் அதிகமிருந்தால் நம்மூர்க்
கடைகளில் மொய்த்துக் கொண்டு முண்டியடித்து நிற்பதுதான் வழக்கம். அங்கே வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். சென்னை
நகரத்து நெரிசலைப் பார்த்துப் பார்த்து –நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த என் மனதுக்கு
அவர்களின் நிதானம் ஆச்சரியத்தைத் தந்தது.
விமான நிலையத்தைவிட்டு வெளியே வருவதற்கு முன்பு ஒருமுறை கழிவறைக்குப் போய்வரலாம் என்று நினைத்தேன். நுழைந்தால் வெளியே வருவதற்கு மனம் வராது. அப்படியொரு சுத்தம். வெள்ளை வெளேரென்று உள்தரைகள் முதல் கழிவறைப் பீங்கான்கள்
வரை பளபளத்துக் கொண்டிருக்கும். அதைச் சுத்தம் செய்கிற சிப்பந்திகள் கட்டு செட்டாக
உடையணிந்திருந்தார்கள். தொழில் ரீதியான மட்டப்படுத்தல்கள்
தென்படவில்லை. சிறுநீர் கழிப்பதில் பிரச்சினையில்லை. வயிற்றைக் காலி செய்ய நேர்ந்தால்தான் கால் கழுவ
ஏற்பாடு இருக்காது. எல்லாம் சுருள்தாள்கள்தான். துடைத்து எறிந்துவிட வேண்டியதுதான். ஏதோ நாம் அசுத்தமாகக் கால் கழுவாமல் வருவதுமாதிரியிருக்கும். எல்லா இடங்களிலும் இப்படித்தான் என்பதை அறியநேர்ந்தது. முதலில் கஷ்டமாக இருக்கும். அப்புறம் கஷ்டம் பழகிவிடும் என்கிற கதைதான். கழிவறைக்கு வெளியே ஓய்வு அறை என்று மின்னெழுத்துகள்
பளபளத்துக் கொண்டிருந்தன. எழுத்துக்கு எழுத்து அப்படியே எடுத்துக் கொள்ளலாம். அது ஒரு ஓய்வறையைப்போலத்தான் சுத்தமாக இருந்தது.
டிம் ஹார்ட்டின், ஸ்டார் பக்ஸ், ஸப் வே என்று வரிசையாக இருந்தன. அங்கு டாலர்கள் காபிகளாகவும், பேகன்களாகவும், பேகல்களாகவும்,
பீட்சாக்களாகவும் உருமாற்றம் அடைந்து கொண்டிருந்தன.
விமான நிலையத்திலிருந்து வெளிவருவதற்கு முன் குடியேற்ற முறைகளைப்
(Immigration formalities) பின்பற்றவென்று
நிலையத்துத் தாழ்வாரத்தில் நூற்றுக் கணக்கான கணினிகள். ஒவ்வொருவருக்கும் உதவி செய்ய அங்கங்கே சிப்பந்திகள். இதை ஒரு தன்னார்வத் தொண்டாக மேற்கொள்ளும் முதியவர்கள்
பலரை அங்கு பார்க்க முடிந்தது. எங்களுக்கு
உதவி செய்ய ஒரு சேர நன்னாட்டிளம் பெண்மணி இருந்தாள். அவளது தமிழ் கலந்த மலையாளம் ஒரு
தலைக் கிறுக்கைக் கொடுக்கத்தான் செய்தது. எடுத்து
வருகிற பொருள் விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
பயறு வகைகளில் எல்லாவற்றையும் குறிப்பிட்டுவிட்டால் ஆபத்துகளும் உண்டு. விதைகளாகும் வாய்ப்புள்ள எந்தப் பொருளும் தடைசெய்யப்
பட்டிருக்கிறது. வெளிநாட்டிலிருந்து ஒரு புதிய மரம் வேரூன்றிவிடக் கூடாது என்கிற கவனமாக
இருக்கலாம். நம்மூரில் வீட்டின் அறைகளுக்குள்ளேயே
எட்டிப் பார்க்கும் வேலிக் காத்தான்கள்தான் என் ஞாபகத்துக்கு வந்தன. அந்த வேலிக் கருவைகள் அடுப்புக்கு விறகாகின்றன என்று
சிலர் சொன்னாலும்கூட அவை எத்தனை விளைநிலங்களைப் பாழ்படுத்தியிருக்கின்றன என்பதை நினைத்தால்
மனம் கனத்துப் போய்விடுகிறது. அவை தரைமேல் வளரும் ஹைட்ரோ கார்பன் ஆபத்துகள் அல்லாமல்
வேறென்ன? ஒரு காலத்தில் அமெரிக்கக்காரன் வேலிக்கருவை விதைகளை ஹெலிகாப்டரில் விதைத்துப்போனதாக
ஊர்ப் பெரியவர்கள் சிலர் சொல்லக் கேட்டதுண்டு.
இங்கிலாந்துக்காரன் மனிதர்களை மரங்களாக்கிச் சென்றான். அமெரிக்கக்காரன் மரங்களை முட்செடிகளாக்கி வேடிக்கை
பார்க்கிறான். வெளிநாட்டுக் காரர்கள் அவர்கள்
நாட்டின் இயற்கையைப் பாதுகாக்க எந்தளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்று
நினைத்துக்கொண்டே நிலையத்தின் வாயிலைக் கடந்தோம்.
வாயிலைக் கடக்கிறபோதே ஒரு சித்திரம் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. டாக்சியைப் பிடிப்பதற்குள் ஒரு சின்ன உள்நாட்டு
யுத்தம் நடத்தியாக வேண்டுமே என்று எண்ணிக்கொண்டேன். அங்கு மொய்க்க இருக்கிற எந்த ஓட்டுநர் பேரத்துக்குப்
படிகிற ஓட்டுநராக இருப்பார் என்று நமது அனைத்து உளவியல் தந்திரத்தை உபயோகிக்க வேண்டுமே
என்று அயர்வாக இருந்தது. ஆனால் அங்கு நான்
கண்ட காட்சி ஆச்சிரியத்தைத் தந்தது. அவரவரும்
ஒரு வரிசை முறையில் வந்து கொண்டிருந்தார்கள்.
பேரத்திற்குப் பேச்சில்லை. அங்கிருந்த
ஓட்டுநர்களில் ஆகப் பெரும்பாலானவர்கள் இந்தியர்களாக இருந்தார்கள். அதிகபட்சமாகப் பஞ்சாபிகள். அடுத்ததாகத் தமிழர்கள். இந்தியர்கள் வெளிநாட்டுக்கு வந்தால் வேறுமாதிரி
ஆகிவிடுகிறார்களோ? வாழ்நிலையும் சூழ்நிலையும் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிடுகின்றன?
வாடகை வாகனத்தில் பறக்க ஆரம்பித்தோம். ஓடுதளத்தில் ஓடும் விமானத்தைப்போலத்தான் இருந்தது
அந்த மகிழுந்து. ஆனால் வாகனங்கள் எல்லாம் சாலைகளில் வலதுபுறத்தில் சென்றுகொண்டிருந்தன.
இந்தியாவில் இடதுபுறம். கனடாவில் ஏன் வலதுபுறம்?
இந்தக் கேள்விக்கு விடையைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
….பயணிப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக