இது நம்ம பூமி
அம்பேத்கர் அண்ணலுக்கு - சாதி
அநியாயம் நடந்த கதை
கண்ணீரே வத்தி வத்தி - வடிஞ்சிக்
காணாமல் போன கதை
வெளையாட்டுப் பருவத்துல - அவர்
வெளியூரு போகையில
துளியூண்டு தண்ணி தர்ல - கட்டு
சோறு தின்ன வழியுமில்ல
ஒழக்குத் தண்ணீரை - அட
ஒசந்த சாதி கொடுக்கவில்ல
கிழக்குச் சூரியனை - சிறு
கெணறு கூட ஏற்கவில்ல
பள்ளியில சமமாக - மத்த
பிள்ளையோட குந்தினாக்கா
பிள்ளையெல்லாம் தீட்டாச்சாம் - தனியா
பிரிச்சாங்க நோய் கணக்கா
தனிசாக்கில் குந்தவச்சி - அழுக்குத்
தனி டம்ளர் ஒதுக்கிவச்சி
அனிச்சமலர் அண்ணலையே - எரி
அக்கினியில் போட்டாங்க
வழக்கறிஞர் ஆனபின்னும் - குந்தின
வண்டிகூட தீட்டச்சாம்
அழுக்கு வண்டிக்காரன் - உயர்சாதி
அம்மணமும் கோட்டாச்சாம்
அண்ணலுக்கு நேர்ந்துப்புட்ட - அந்த
அவமானம் பாத்தீங்களா
சொன்னகதை கேட்டீங்களா - நெஞ்சில்
சூடு கொஞ்சம் போட்டீங்களா
திருடன் போல் துரத்திப்புட்ட - கெட்ட
தேசமிப்போ மண்டியிடும்
தெருத்தெருவா செலை வச்சி - செய்ஞ்ச
தீம்புக்குத் தெண்டனிடும்
'பாப்பார்'னு மேலவச்சி - பல
மட்டத்துல சாதிவச்சி
'பறையன்'னு கீழவச்சி - மனுச
பரம்பரைக்குத் தீயைவச்சான்
கூண்டுக்குள்ள போட்டுவச்சான் - வர்ண
பூட்டு போட்டு பூட்டிவச்சான்
ஆண்டவனை சாட்சிவச்சி - நம்ம
அறிவுக்குள்ள தீட்டு வச்சான்
அடிமனசில் தீயிருக்கு - உள்ளுக்குள்
ஆறாத ரணமிருக்கு
வடியாத கோபத்தீ - நம்ம
வயித்துக்குள்ள குடியிருக்கு
ஆட்டுக்கா மாட்டுக்கா - ஆத்தா
அப்பனுக்குப் பொறந்தமடா
தீட்டுடைக்க பூட்டுடைக்க - நல்ல
கூட்டோட போவமடா
மண்ணைப் பெத்த பிள்ளைங்கடா - நாம
மரப்பாச்சிப் பொம்மை இல்ல
எந்திருச்சி நின்னாக்கா - நாம
இழக்க ஒரு பூமியில்ல !....
--நா.வே.அருள்
கருத்துகள்
கருத்துரையிடுக