கவிதை

http://kungumamthozhi.wordpress.com

எந்திர வாசல் 

ஒரு பெண்தான்  
வேட்டையைத் தொடங்கிவைத்தவள் 
தன் பிள்ளைகளுக்காக. 

குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய காலத்தை 
எட்டிப்பார்க்கட்டும் இதயம் உள்ள எல்லோரும் 
தெறிக்கும் உண்மை. 

இது பட்டாக்கத்தியுடன் அலையும் 
ரவுடி அறியாத ராகுல ரகசியம்*
அதனால்தான் இன்றும்…
தாய்க்கோழி தன்  சிறகுகளைப்  
பட்டாக் கத்திகளாய்ப் படபடத்து விரிக்க   
குஞ்சுகளைக் கொத்தவரும் பருந்து
பயந்து திரும்பும். 

கல்வியும் கருணையும் கவிதையும் 
கைவிடப்பட்ட உலகில் 
துயரங்கள் பெருக அலைகின்றன துன்மார்கங்கள். 

இதயங்கள் புறக்கணித்து 
எந்திரங்களில் வழியும் பணத்தாள்களில் 
சமூகத்தின் சவக் களை. 

இதயம் பொருத்தப்படாத ஏடிஎம் எந்திரம் 
நிகழ்ந்ததைப் பார்த்து  நினைவிழக்க…
சுயபார்வையற்ற கேமரா 
தன் ஒற்றைக் கண்ணால் 
உதிரம் அதிரும் காட்சிகளை 
உள்விழுங்கத் திணற…
கத்தி பார்த்து உயிர் உறைய 
சரிந்து சாய்கிறாள் பெண் ஒருத்தி. 

வழியும் குருதி வழித்தெறிந்து 
சாவகாசமாய்த் துணியில் துடைத்து 
கத்தியைப் பையில் திணித்து 
குற்ற உணர்ச்சியற்று வெளியேறுகிறான் 
கொலையாளி. 

பிள்ளைகளின் பசித்தீ தணிக்க 
ஆயுதக் கல்லோடு புறப்பட்ட 
நம் அன்னையின் சொரூபத்தை அறிவதில்லை 
போக்கிரி ஒருத்தனின் 
விலங்கறுக்கும் வேட்டைக்கத்தி. 

மரத்துப்போன பிழைமனிதன் பார்த்து 
எழுந்தோட நினைக்கும் ஏடிஎம் எந்திரம்…
ஷட்டரை சாத்தி விட்டுப்போனான் 
சாகசப் போக்கிரி! 

- நா.வே.அருள்
*ராகுல ரகசியம் – ஆதியில்  ஒரு  பெண்தான் சமூகத்தை வழி நடத்தியவள் என்றும், வேட்டைச் சமூகத்தில் பெண்தான் தலைவியாய்த் திகழ்ந்திருக்கிறாள் என்பதை ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய “வால்காவிலிருந்து கங்கை வரை” நூல் மூலம் அறிகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்