ஒரு பத்திராதிபருக்கு என் பாராட்டு மலர்வளையம்
மரணத்தால் விழுங்க முடியாத
மானுட விதை
புகழ்வது என் தொழிலல்ல
புதையல் எடுப்பது என் பொழுதுபோக்கு
அவ்வப்போது சில அபூர்வ புதையல்கள்
அகப்பட்டதுண்டு...
சில சமயங்களில் புலியின் உறுமல்
சிங்கத்தின் கர்ஜனை, யானையின் பிளிறல்
பட்டாம் பூச்சியின் சிறகடிப்பு, மின்மினியின் மினுக்கட்டாம்
கொண்டலாத்தியின் குகுகுகுப்பு
சிலநேரம்
கண்கள் சூடேறக் கண்ட
கனவு சாம்ராஜ்யம்
சிலநேரம்
அடியுரமாகிப்போன
அற்புத மனிதம்
அப்படி என் அகழ்வாராய்ச்சியில்
அகப்பட்ட ஒருவன்தான்
அகிலம் குறித்துக்கொள்ள வேண்டிய
ராமச்சந்திர ஆதித்தன்
நான் ஒரு முட்டாள் கவிஞன்
இதற்குமுன்
ஒருமுறை கூட உன் முகம் பார்த்ததில்லை
நீ உச்சரித்ததில் ஒரு வார்த்தைகூட
என் செவி வந்து சேர்ந்ததில்லை
எனது இதயத்தில் எப்போதும் குடியிருக்கும்
இளவரசன் ஒருத்தனின்
சுட்டுவிரல் காட்டிய
சுடர்க்கோபுரம் நீ....
உன்னையும் என்னையும் இணைத்திருப்பதோ
துண்டிக்கப்பட முடியாத
தொப்புள் கொடி உறவு
ஒருவகையில் நாம் இருவரும் ஒன்று
தாய்மொழிப் பள்ளி நடத்தி
கனவில் தோற்றுப்போனவன் நீ
கவிதையில் தோற்றுப்போனவன் நான்
அதனால்
துண்டிக்கப்பட முடியாதது நம்
தொப்புள் கொடி உறவு....
நாம்
ஒரே கனவின் இருவேறு கண்கள்
கடைக்கோடி மனிதனைக்
கல்வி சென்றடைவதே
நாம் கண்ட கனவு
தாய்மொழிப் பொதுப்பள்ளியே
நம் தாரக மந்திரம்
கலைமகளைத் தங்க பொம்மைகளாகத்
தயாரிக்கத் தொடங்கிவிட்டன
தனியார் பள்ளிகள்
அதனால்...
பணப்பெட்டி வைத்திருப்பவர்கள் மட்டும்
பதுக்கி வைக்கிறார்கள்
கலைமகள்
அனைத்து வீடுகளிலும் தொங்கவேண்டிய
அச்சடிக்கப்பட்ட காலண்டர்!
நன்றாகவே புரிந்துகொண்டோம் நாம்
விழித்துக் கொண்டவர்களின் விளக்குகள்
பொதுமை வெளிச்சம் சிந்தும்
பொய்யா விளக்குகள் அல்ல ...
தூங்கிப்போனவர்களின் முகத்திலிருந்து
தோண்டி எடுத்த நெற்றிக்கண்கள்!
"அகர முதல" கொள்ளை போனதால்
"திருவள்ளுவர்" திருடு போனார்
கலைமகள் வீற்றிருப்பதோ
நன்கொடை பீடம்
அவள் வீணையிலிருந்து
கட்டண ராகம்
தனிநபர்கள் சிலர் சேர்ந்து
சமுதாயத்தைத் தோற்கடிப்பதுதான்
தனியார்மயம்!
கல்வியில் தனியார்மயம் ...
இலவச மின்சாரத்தைத் துண்டித்து
ஏழை வீடுகளை இருட்டாக்குவது...
தெரு விளக்குகளைத் திருடுவது...
மொத்தத்தில்
அனேக வீடுகளில்
அமாவாசை இருட்டு
பால்கனிகளில் மட்டும்
பௌர்ணமி வியாபாரம்!
கடைநிலைக் கல்விக்கும் விலை குறித்தோம்
ஆனால்
இந்தியாவை
இலவசமாய் ஏற்றுமதி செய்கிறோம்
ஓர் அடிமைப் பிரதேசத்தில் தொங்கும்
அங்கங்கும் பூட்டுகள்
புரட்சியின் சந்நிதானத்திலோ ...
.சரஞ்சரமாய் சாவிகள்
அதிலொன்றுதான்...நீ கையிலெடுத்த கல்விச்சாவி !
நாமறிவோம்...
சாதி ஒழிக்க
சம்பந்தியாக வேண்டும்
கல்வி தழைக்க
பொதுப்பள்ளியாக வேண்டும்
ரகசியமாய்ப் புரட்சி செய்த
ராமச்சந்திர ஆதித்தன்..... நீ
பள்ளியை ஒரு பத்திரிகை போலவும்
பத்திரிகையை ஒரு பள்ளி போலவும்
பாடம் நடத்திய பண்பாளன்
பத்திரிகைத் துறையிலிருந்து
பொதுப்பள்ளி கனவு கண்ட
முதல் கண்
நீ அறிந்து வைத்திருந்தாய்
கல்வி கடைச்சரக்கல்ல
கார்ப்பரேட் சரக்குமல்ல
உன் அமைதியான புரட்சிக்கான அஞ்சலி இது
விழுமியங்கள் வீழ்ந்துபோன விதேசிய வீதியில்
சுதேசியப் பத்திராதிபருக்கு
சூடும் மலர்வளையம்!
இது நெஞ்சம் நெகிழ்கிற நினைவேந்தல் விழா
கட்டணமற்ற தாய்மொழிப் பொதுப்பள்ளிக்கான
கால்கோள் விழா
நீ மரணத்தால் விழுங்கமுடியாத
மானுட விதை
இல்லாதவன் என்றொருவன்
இல்லாத தேசத்தில்
எல்லோரும் கல்வி பெறும்
நாளைய பொதுப்பள்ளி நவீன யுகத்தில்
நீ
ஒவ்வொரு மனசிலும் தொங்கப்போகும்
கிழித்தெறிய முடியாத .
கின்னஸ் காலண்டர் !
-----நா.வே.அருள்
சீரிளமைத்திறம் சீரழியவும் சிதைந்துபோகவும் கடைவிரித்த ஆளவந்தார்களின் மேலான கோபமும், கேள்வி கேட்க வக்கற்று செயல் மறந்துபோன சக மனிதர்களின் மீதான சினமும், இனம் காக்க சத்தமின்றி மொழிவேருக்கு நீரூற்றிய மூத்தோரின் மீதான அன்பும் நேயமும் நிரம்பி வழியும் கவிதை...இக்பால்
பதிலளிநீக்குநன்றி இக்பால்.
பதிலளிநீக்குநன்றி இக்பால்.
பதிலளிநீக்கு