உயரத்திலிருந்து யோசிக்க வேண்டும் 

சற்றுச் சிந்திக்கத்தான் வேண்டும் 
குழப்பமான சமூகத்தில்தான் 
குடியிருக்கிறோம் நாம் 

குப்பைகள் கிளற கோழிகள் போதும் 
தானிய மணிகளை விதைக்கத் 
தவங்கிடக்கிறோம் 
நாமோ...மனிதர்கள் 

மூச்சு விட்டு மூச்சு விட்டு 
வெறும் காற்றுத் தொந்தியாவதற்கா 
நுரையீரல் ?

அடிமைகளை உருவாக்கும் 
நோய்க்குடுவையா அன்னையின் கருப்பை ?

கர்ஜனைகளை நேசிப்பவன் 
குகைகளை உருவாக்குகிறான் 
கானங்களை நேசிப்பவன் 
குயில்களை....

சற்றுச் சிந்திக்கத்தான் வேண்டும் 
யார் நல்லவரென்றும் எது நல்லதென்றும்  
இன்னும் புரியவில்லை 

பிணங்களை உற்பத்தி செய்கிற 
போலி உயிரா ?
யுகங்களை உயிர்ப்பித்துவிடுகிற 
சாகாத சடலமா ?

அடுத்த நூற்றாண்டின் சிம்மாசனமா ?
போன நூற்றாண்டின் புதைமணலா ?

கரியமில வாயுவா ?
ஓசோன் படலமா ?

சிகரமா ? பள்ளத்தாக்கா ?

சற்றுச் சிந்திக்கத்தான் வேண்டும் 
என்ன செய்யப்  போகிறோம் நாம்?

வேட்டையின் வேட்கையில் 
வில் அம்பில் விரல் பதிப்போமா 
விருட்சக் கனவில் 
விதை ஊன்றுவோமா ...

உருட்டுக் கட்டைகள் ... பெட்ரோல் குண்டுகள் 
கொலைவெறி கோஷம்...
உசுப்பப்பட்ட ஊர்ஜனம்...ஓரிரு லாரிகள் 
இவையா நாகரிகத்தின் வரைபடம் ?

அவசரத்தில் 
மலப்புழையில் ஜனித்தவர்களா 
மனிதர்கள் ?

மரத்தை வெட்டியவன் 
கட்டித்தந்த கூட்டிலா வசிக்கின்றன 
சிட்டுக்குருவிகள் ?

சாதியப் புலியிடம்  கடிபட்டவனுக்குச் 
சடலம்தான் சரணாகதி 

சற்றுச் சிந்திக்கத்தான் வேண்டும் 
சீரணிக்கச் சிரமமாக இருந்தாலும் 
ஒதுக்கிவிட முடியாத சில உண்மைகளை 

யுத்தத்திற்கு 
தவறான தலைவர்களின் தலையிலிருந்து உதிரும் 
ஒரு வார்த்தை போதும் 
ச்மாதானத்திற்க்குத்தான் 
பல சாம்ராஜ்யங்களை இழக்க நேரிடுகிறது 

வண்ணத்துப்பூச்சியாய் மாறிவிடுகிற 
மகத்தான உத்தியை 
ஒரு புழு தெரிந்து வைத்திருக்கிறது 
நாமோ...மனிதர்கள் 

ஒற்றைச்சொல்கொண்டு 
நம் கானகத்தையே அழித்தவர்களுக்குத் தெரியும் 
ஒற்றை விதையில் 
ஒரு கானகத்தையே உருவாக்குபவர்கள் நாம் 

சற்றுச் சிந்திக்கத்தான் வேண்டும் 
சிந்திக்காதவர்களுக்கும் சேர்த்து...

கர்ணனுக்குத்  தேரோட்டியதோடு 
முடிந்துவிட்டது சல்லியனின் சவாரி 
இன்னும் 
பாரெங்கும் தொடர்கிறது 
பார்த்தசாரதிகளின் பயணம் 

கலவரத்தை மூளச் செய்வதற்கு 
போதும் ஒற்றைச் செருப்பு
ஒன்றுபட்ட மானுடத்தை உருவாக்கத்தான் 
யுகங்களின் கால்நடைப் பயணம் 

மனுவின் சாபத்தை வெற்றிகொள்ள 
மானுடனின் வரத்திற்காகக் காத்திருக்கிறது உலகம் 
ஜனிப்போமா ... நாம் ?

                                        -நா. வே. அருள் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்