ஒரு முடிவுறாத கடிதம்
ஆதி பெருந்தேவன்
உங்கள் திறமையும் பேச்சாற்றலும் உலகறிந்த உண்மை. பொய்யைப் பற்றி உண்மை அறிந்து இருக்கிறதோ இல்லையோ... உண்மையைப் பற்றி நிறையவே பொய் தெரிந்து வைத்திருக்கும். பொய் இன்னொன்றையும் புரிந்து வைத்திருக்கிறது... அதாவது மக்களுக்கு மறதி அதிகம். நம்புவதற்கு ஒரு நாடே இருக்கிறபோது நாக்கு கூச்சத்தை மறந்து விடுகிறது.
டாக்டர் கோயபல்ஸ் அவர்களே...உலகில் நாசிசம் பரப்பிய ஹிட்லர் கட்சியின் பெயர்: "தேசிய சமுதாய தொழிலாளர் கட்சி". பெயரில் என்ன இருக்கிறது என்று நினைக்கலாம்... பெயரில் எவ்வளவோ இருக்கிறது!...உங்கள் முதல் பொய் பெயரில்தான் தொடங்கி இருக்கிறது! ஜெர்மானிய சமத்துவக் கட்சி மற்றும் ஜெர்மானிய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்களை உங்கள் பக்கம் இழுக்க "பொய்" துறையின் அமைச்சராகவே ஆகிவிட்டீர்கள்! அமைச்சர் ஆனவுடன் நீங்கள் செய்த முதல் வேலை புத்தகங்களை எரித்ததுதான்....1938 இல் "உடைந்த கண்ணாடி இரவு" என்று வர்ணிக்கப்பட்ட ஒரு இரவில்தான் யூத மக்களின் உயிர்கள் சில்லு சில்லாக சிதறி முற்றாக எரிந்து சாம்பலாகின.
இப்போது உலகமே உங்களின் தாக்கத்தில்...பொய் சொல்லுவதற்குப் புள்ளி விவரங்கள் துணை புரிகின்றன...சரி அது கிடக்கட்டும். லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவிப்பதற்கு உறுதுணையாக இருந்த ஒரு வெற்றியாளனுக்கு எங்கள் நாட்டைப்பற்றித் தெரிந்துகொள்ளவும் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது.
எங்கள் அன்புக்குரிய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகள் 100 பேருக்கு 11 பேர் மட்டும்தான். கிராமத்தில் ஏழைகள் விகிதம் 100 பேருக்கு 15 பேர் என்றால், நகரத்தில் 7 பேர்தான் ஏழைகள்! 2004-05 ஆம் ஆண்டில் 40 கோடி; 2011-12 ஆம் ஆண்டில் 27 கோடிதான்; ஏழைகளின் எண்ணிக்கை எப்படி குறைந்து விட்டது பார்த்தீர்களா? ஒரு டெண்டுல்கர் கிரிக்கெட்டில் சதம் என்றால் ஒரு டெண்டுல்கர் புள்ளி விவரத்தில் சதம். இது டெண்டுல்கர் கணிப்பு முறையாம்! நகர்ப்புறத்தில் மாதத்திற்கு தலா ரூபாய் 1000 சம்பாதித்தால் போதும்; கிராமத்தில் மாதத்திற்கு ரூபாய் 816! எல்லோரும் வறுமைக்கோட்டுக்கு வெளியே வந்து விழுந்துவிடுகிறார்கள்...16 வயதினிலே ரஜினியின் "இது எப்படி இருக்கு?" தான்.
டெண்டுல்கர் கணிப்பு முறை என்பது வெறும் உணவுப்பொருள் கணிப்புமுறைதான் ! இது சரியல்ல என்று எல்லோராலும் சொல்லப்பட்டு ரங்கராஜன் தலைமையிலான ஒரு குழுவை நியமித்தாகிவிட்டது. ஆனாலும் அந்த முயற்சி கிடப்பில் கிடக்கிறது... அதாவது ஏழைகள் வறுமைக்கோட்டில் தொங்கிக்கொண்டு கிடப்பதைப்போல...தொங்கலில் கிடக்கிறது!
வறுமைக்கோட்டுக் கணிப்பு முறையில் வெறும் உணவை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் (கையேந்தி பவனில் சாப்பிட்டால் கூட, காசு பத்தாதே...) தங்குகிற இடத்துக்கு வாடகை யார் கொடுப்பது?... படிக்கிற பிள்ளைக்கு யார் கட்டணம் கட்டுவது? (கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகளை யார் தட்டிக் கேட்பது?). சுகாதாரம் இல்லாத சூழலில் வாழச் சபிக்கப்பட்ட மக்களின் டெங்குக் காய்ச்சல் முதல் மஞ்சள் காமாலை வரை எப்படி சிகிச்சை பெற்றுக்கொள்வது? அட, முடி வெட்டிக்கொள்ள, முகச்சவரம் செய்துகொள்ள, யார் காசு கொடுப்பது? அதற்காக தாடி வைத்துக்கொண்டு தலைமுடியை வளர்க்க முடியுமா? (எண்ணைக்கு எங்கே போவது?) அல்லது தலைப்பாகைதான் கட்டிக்கொள்ள முடியுமா? (சோப்பு எப்படி வாங்குவது?). அது மட்டுமல்ல...ஒரு நபரின் குறைந்தபட்ச உணவுத் தேவை அளவு 2100 கலோரிகள்! இதற்கு கிராமத்திலும், நகரத்திலும் எவ்வளவு செலவு ஆகும்?...இன்னபிற குறைந்தபட்ச செலவுகளுக்கு எவ்வளவு ஆகும் என்று எங்கள் ஊர் கிளி ஜோசியக்காரன் கூட சொல்லிவிடுவான்...ஆனால் அரசாங்க ஜோசியக்காரர்கள் தப்புத் தப்பாகக் கணக்குப் போடுகிறார்கள்! இந்தக் கணக்குப் போட பொருளாதார நிபுணர் தேவையில்லை; பிரதமர் பதவி தேவையில்லை... இதெல்லாம் அவரவரின் தனிப்பட்ட பிரச்சினைகள்...அரசாங்கம் என்ன செய்யும் என்பது அன்புள்ள அரசாங்கத்தின் மௌனமான பதில்.
உணவுப் பொருள்கள் தவிர அனைத்து செலவுகள், குறைந்தபட்ச சத்துள்ள உணவு ஆகியவற்றுக்கு மாதம்தோறும் எவ்வளவு பணம் வேண்டும் என்று ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய கணக்கெடுப்பில் கண்டு கொள்ளலாம். ஆனால், அரசு இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த (1973-74)வரையறையைத்தான் வைத்திருக்கிறார்கள்...1973-74 இல் நகரத்தில் ரூபாய் 49/-, கிராமத்தில் ரூபாய் 56/-. இந்த அடிப்படையைத்தான் வைத்துக் கணக்கெடுத்திருக்கிறது டெண்டுல்கர் குழு. மீண்டும் பதினாறு வயதினிலே ரஜினி ஸ்டைலில்தான் கேட்க வேண்டி இருக்கிறது..." இது எப்படி இருக்கு?" அதிக அதிகமாக மாணவர்களைத் தேர்ச்சி அடைய வைக்க ஒவ்வொரு ஆண்டும் மதிப்பெண்களைக் குறைத்துக்கொண்டே போனால் என்னாகும்?..
மதிப்பிற்கும், மாண்பிற்கும் உரிய பொய்த் துறை அமைச்சர் கோயபல்ஸ் அவர்களே... இவர்கள் எதற்காக இந்த பொய் புள்ளி விவரங்களைக் கொடுக்கிறார்கள் என்று உங்கள் பொய் கூறும் அனுபவத்திலிருந்து சொல்ல முடியுமா?.. முடியாது... உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றால் இந்த வறுமை ஒழிப்பு நடந்ததாக நிரூபிக்க முயல்கிறார்கள்.. அந்நிய பெரும் பெரும் கார்ப்ப்பரேட் நிறுவனங்களை நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்யவிட்டு கொள்ளை கொள்ளையாக லாபம் சம்பாதிக்க அனுமதிக்கவும் நடத்துகிற நாடகம்தான் இது (இதனால் யாருக்கு என்ன லாபம் என்பது உங்கள் கடவுள் ஹிட்லருக்குத்தான் வெளிச்சம்!)
ம.மா.உ.பொ .து.அ . கோயபல்ஸ் அவர்களே... உங்கள் எதிரிகள் யூதர்கள்; எங்கள் அன்புள்ள அரசுக்கோ மக்கள். (குறிப்பாக வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்கள்). உங்களிடம் இருந்ததோ பொய்ப் பிரச்சாரம் மற்றும் ஆயுதங்கள். எங்கள் அரசிடமோ பொய்ப் பிரச்சாரம் மற்றும் பொய்ப் புள்ளி விவரங்கள். உங்களிடம் இருந்ததோ வதை முகாம்கள்; எங்கள் நாட்டிலோ பொருளாதார சிறப்பு மண்டலங்கள். நீங்களும் இடது சாரிக் கொள்கைகளை ஆதரித்த மக்களை ஈர்க்க கட்சியின் பெயரில் தொழிலாளர்களைச் சேர்த்துக்கொண்டீர்கள்; இவர்களும் இவர்களின் கொள்கையில் "வறுமையை ஒழிப்போம்" முழக்கம்.
நீங்கள் 1938 இல் "உடைந்த கண்ணாடி இரவு" என்ற முழக்கத்தின் பேரில் யூதர்களைக் கொன்று குவித்தீர்கள். எவர்கள் 2013 இல் "டெண்டுல்கர் கணிப்பு முறை" வறுமைக் கோட்டு விளக்கத்தின் மூலம் மக்களைப் பட்டினி போட்டுக் கொல்ல இருக்கிறார்கள். உங்கள் கொலை முறை வேறு... மக்கள் ரணமாகி ரத்தம் சிந்துவார்கள்; இவர்கள் மகாத்மாவின் அஹிம்சையைப் பின்பற்றுகிறார்கள். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம். கொலைப்பட்டினி போட்டுக் கொன்று விடுவது...மரண ஓலம் வெளியில் வராது. அனாவசியமாக வெளி உலகக் கவனம் பெறாது. அமெரிக்காவின் ஆசியும் அனுபவமும் இருக்கிறது!
ம.மா.உ.பொ .து.அ . கோயபல்ஸ் அவர்களே...ஒன்று மட்டும்தான் எனக்கு உறுத்துகிறது..ஆள நினைத்த நீங்கள் அநியாயமாகப் போய்விட்டீர்களே... அத்தனை பேர்களைக் கொன்று குவித்த நீங்கள்...
உலகம் உங்களைக் கைவிட்டு விட்டது. நீங்கள் நேசித்த ஹிட்லர் தற்கொலை புரிந்து கொண்டார். நீங்கள் உங்கள் மனைவியுடனும், ஆறு சின்னஞ் சிறு குழந்தைகளுடனும் எரிந்து போனீர்கள்... அதுவும் பாதி வெந்த சதை சடலங்களாக...பிரபஞ்சத்தையே ஆள நினைத்த உங்களை எரித்துக்கொள்ள பெட்ரோல் போதவில்லை....
இதற்கு மேல் எழுத ஏதுமில்லை....
கருத்துகள்
கருத்துரையிடுக