#பேசும் புதிய சக்தி நன்றி.... ஆகஸ்டு இதழில் எனது கட்டுரை.
கவிஞர் சிற்பியின் “முகந்து தீராக் கடல்”
கவிதைத் தொகுப்பின் நூல் விமர்சனம்
காட்டில் யானை; கடலில் திமிங்கலம்
**********************************************************
“காலம் பல கண்ட
கதவின் கீல்கள்
என் முழங்கால்கள்”
காலம் முழுவதும் கவிதைப் பயணம் நடத்திய கவிஞர் சிற்பியின் வாழ்விலிருந்து கசியும் வார்த்தைகள். ஆனால், எவ்வளவு காலம்தான் நடந்திருந்தாலும், எத்தனை பயணங்கள் நிகழ்த்தியிருந்தாலும் ஒரு கவிஞனின் கவிதை முட்டிகள் தேய்ந்துவிடுவதில்லை. கவிதையுலகம் வித்தியாசமானது. வயதாக ஆகத்தான் வலிமை கூடும் போலும். ஊன்றுகோல் எழுதுகோலை வெல்ல முடிவதில்லை.
மரபில் ஊறிய மாபெரும் கவிஞனுக்கு அன்று புதுக்கவிதை ஒரு புதிய திசைதான். திரும்பிப் பார்க்கையில் திசைகளதிரும் தீர்மானமான பயணங்கள்! கவிதையுலகில் கவிஞர் சிற்பி, ஆயுதம் தாங்கிய போராளி போல கவிதை தாங்கிய இலக்கியத் தீவிரவாதி! இந்த “வானம்பாடி”யின் வாழ்க்கைச் சூட்டில் வார்த்தைகள் தகிக்கின்றன. கலையமைதியின் கர்ப்பத்தில் சிற்பி ஒரு சீற்றம் கொண்ட கவிதைச் சிலை.
“சர்ப்பயாக”த்தில் நெளியத் தொடங்கிய கவிதை நாகங்கள் “முகந்து தீராக் கடல்” இல் சுறாக்களாகச் சுழன்றடிக்கின்றன. புறப்பாடு ஒரு பூகம்பம்தான். வந்தடைந்ததோ ஒரு புதிய புவியியல் நிலப்பரப்பு.
சமூகச் செயல்பாட்டுக்கான கவிதைகள் காட்டெருமைகள் போல; நாகங்களின் நெளிதலும் சுறாக்களின் பசியும் ஒரு சேர நிகழ்ந்தால்தான் கவிதைகள் கருக்கொள்ளும்.. சிற்பி ஒரு கானக வேட்டைக்காரர். கவிதை வேட்டையில் அவர் ஒரு மூர்க்கம் கொண்ட மூப்பன். இந்த வானம்பாடியின் வயிற்றில் ஒரு காடு கர்ப்பம் தரித்திருக்கிறது.
“முகந்து தீராக் கடல்” காலம் தன் அனுபவங்களை எழுதிவைத்த கவிதைக் கடல். இந்தக் கடலில், காதலில் பிளந்துகொண்ட டைட்டானிக் கப்பல் உண்டு. ஆனால், கவிழ்ந்து எண்ணெய் சிந்திய கப்பல் ஒன்று கூட இல்லை. இது உப்புகளின் உறைவிடம். உணர்ச்சிகளின் புகலிடம். ‘முகந்து தீராக் கடல்’ முழுவதும் அனுபவங்களின் அலைகள். ஆனால், நடுக்கடலிலும் அலைகள் எழும்பும் நவீன கடல்!
நடப்புலகம் ஒரு குழந்தையின் கனவுலகத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இது ஒரு கணக்கு உலகமாகிவிட்டது. வரவு செலவு மட்டும்தான் வாழ்க்கை! இலாப நட்டம் மட்டுமே லௌகீகம்! மாயத் திரைபோட்டு மூடிய மனிதர்களின் விசித்திர உலகத்தில் குழந்தை மனமும் இல்லை; குதூகலமும் இல்லை.
பாப்பா வானத்தில் பலூனைப் பிடித்தபடி பறக்கிறாள். மேகம் அவளைச் சுமக்கிறது. கவலையே இல்லாமல் காட்டுக்குள் இறங்குகிறது பாப்பா. காட்டு முயலும், காட்டுக் குருவிகளும் ஐஸ் கிரீமும், மயில் பீலியும் கொடுத்து அரவணைக்கின்றன. கிளிகள் பழங்கள் கொடுக்கின்றன. வண்டுகள் தேன் மிட்டாய் கொடுக்கின்றன. பலாச் சுளைகளைத் தரும் குரங்குக் குட்டிகள். விளையாட வரச்சொல்லும் புலிக்குட்டிகள். ஆனால் குழந்தையின் அம்மா?....“பள்ளி வேன் வந்துடுமேடி மூதேவி” என்று ஓங்காரமிட்டு முதுகில் அறை கொடுக்கிறாள். கவிழ்ந்து போனது பாப்பாவின் கனவு ரதம் என்று முடிகிறது “பாவம் பாப்பா” கவிதை.
வயது கவிதை சவாரிக்குப் பக்குவத்தைக் கூட்டிவிடுகிறது. குழந்தையின் குதிரையில் கவிதை நான்கு கால் பாய்ச்சலிடுகிறது. தாத்தாதான் பேத்திக்குப் பிரியமான பொம்மை. கவிஞன் ஒரு சித்திரம் தீட்டுகிறான்….. ஆடும் நாற்காலி அசையவில்லை. மொழி மறந்து உறைந்து போய் நிற்கிறது ஊஞ்சல். மாடிப்படிகள் செவிடாகிவிடுகின்றன. பாட்டியின் தூக்கம் பறிபோய்விடுகிறது. கவிஞனின் பேனாக்கள் நகராமல் மரத்துப்போகின்றன. காரணம்…
.“ஆதிரைப் பாப்பா
ஊருக்குப் போயிருக்கிறாள்”.
காலை நடை போகிறவர்களுக்குத்தான் கஷ்டம் தெரியும். நாய்கள் அனுமதித்தால்தான் நடைப்பயிற்சி கைகூடும். கடித்துவிடுமே என்று கவனமாகப் போனால் கண்டுகொள்ளாமல் படுத்திருக்கும். படுத்துக் கொண்டிருக்கிறதே என்று பாரா முகமாய்ப் போனால் பாய்ந்து கவ்வும். நம்ப முடியாத நாய்கள். “வேட்டைக்குத் தப்பிய முயலாய் வீடிருக்கும் சந்தில் திரும்பு”கிறார் கவிஞர். மணல் மேட்டின் பின்னால் மறைந்திருந்த நாய் அவர்மேல் பாய்கிறது. பக்கத்தில் இருக்கிற பெண் குரல் கொடுத்து குரைப்பை அடக்குகிறாள்…. “தே…. சும்மா கிட”. கவிதை இப்படி முடிகிறது….
“என் வீட்டு வாசலில்
எட்டிப் பார்க்கும் மருமகளின்
பார்வையிலும் அதே குரல்
“தே…. சும்மா கிட”
கவிதையின் தலைப்பு ‘கால்நடை’. கவிதை கேட்காமல் கேட்கிறது ஒரு கேள்வி…. “யார் கால்நடை?”
பாவனைகளால் ஆனதுதான் வாழ்க்கையோ? ஒவ்வொரு பாவனையும் ஒரு பறவையோ? பரவசப் படுகிறபோது உவகை. தனிமையில் அலைவுறும்போது துக்கம். நடுக்கடலில் தவிக்கிறபோது கரையேற்ற நீளும் கை. இத்தனையும் போதாவென்று
“கொட்டிய தானியங்களைக்
கொத்தி முடித்து
இன்னும் என்று தலையைத் தூக்கும்
என் இதயம் என்கிற
நீலப் பறவை”.
பறந்து முடியாத பரந்த வானம்தானே வாழ்க்கை?
மனசின் மர்மப் பிரதேசங்கள் கனவில்தான் கட்டவிழ்கின்றன. கனவுகள் உறக்கத்தின் விழிப்புநிலை.. மலர்ச் செண்டுகளாக…. மன விகாரங்களாக… அடைய முடியாதவற்றின் அணைப்புகளாக…. துய்க்க நினைத்தவற்றின் தொடுதல்களாக…. கனவுகள் மனக் கண்களின் மயக்க ஆக்டோபஸ்கள். கனவுகள்….மர்மங்கள் நிறைந்த ஃபிராய்டுப் பிரதேசங்கள். கனவுகள் உறக்கத்தின் உபகாரங்களா? உபத்திரவங்களா? மனிதன் தர்க்கங்களாலும் தவிசுகளாலும் சிந்தனை ஆடைகளால் மனசின் நிர்வாணத்தை மறைத்து வைக்கிறான்; கனவுகள் துகிலுரிகின்றன. மனிதன் மனசுக்குள் மனம் கட்டிவைக்கிற மர்மக் கோட்டைக்குக் கனவுகள்தாம் கள்ளச் சாவிகள்.
“மதிப்பு மிக்க முதுமையில்
கட்டிளம் பெண்
கட்டிப் பிடித்து
ஆண்மைக்குச்
சோதனை செய்யும்
கனவுகள்”
என்கிறான் கவிஞன். ஒவ்வொரு இரவிலும் கவிஞன் கனவுக்காக, “ஒரு முயலைப் போல வேட்டைக்கு இரையாகும் வருத்தத்துடன் இருக்கிறான்…. ஆனால் அந்த உயிர் இறும் வருத்தத்திற்காகக் காத்திருக்கிறான்! இது ஒருவகையில் முதுமை முரண்.
““வலி தராத ரப்பர் கால்கள்
கச்சிதமான ராணுவ ஒத்திகை நிகழ்த்த
நகரும் பூச்சி”யை மரவட்டை என்று சொல்ல மனம் வருமா? கண்களின் விரல்கள் பட்டாலும் சுருண்டு கொள்ளாத கவிதை மரவட்டை!“
என உருண்டு திரண்ட உவமைகளுடனும்
“மின் விசிறியின் இறக்கைகள்
வெட்டிக் கொண்டே இருந்தன
காற்றை…
உதிர்ந்து என்மேல்
விழுந்து கொண்டிருந்தது
காற்றா? காலமா?”
எனத் தத்துவார்த்த நீரோட்ட தரிசனங்களுடனும் கவிதைகள் நம்மை ஆட்கொள்கின்றன..
“வா வால்மீகி” யில் பழைய விஷயங்கள் இருந்தாலும் கவிதையைப் புதுசாக்கி விடுகின்றன கடைசி நான்கு வரிகள். ‘முக்குறும்பு’ கவிதையின் படிமப் பயன்பாடு “பழைய பொம்மைகள்.”
எழுபத்திரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் இடிப்பதைக் கைவிடாத ஒரு கோயில் என்று மகாத்மாவைக் குறிப்பிடுவது எத்துணை எள்ளல்! பாயும் அம்பாகிறது பகடி!
காலத்தை மீறிக் கனவு காணும் கவிதையாய்….
“அணுயுகம் இப்போதில்லை
கணினியின் யுகமும் போச்சு
மின்னணு யுகம் கடந்து
நேனோவின் காலம்” என்று நவீனத் தொழில் நுட்பம் நோக்கி நகரும் கவிதை.
நவீன முயற்சிகளாய்…. ஈரம் கசிந்த பாலைவனம், காடு, என் உறவுப் பறவை, மாய உலகம், இறக்கை மனிதன், தீராப் புதிர், ஓர் அசுரக் கற்பனை, கடைசி மனிதன், தெளிவு, புத்தகம், நடந்த கதை, கொடுங்கனவு, மேற்குத் தொடர்ச்சி மலை, சாய்வு நாற்காலி போன்ற கவிதைகள். அரங்கக் கவிதைகளாய்…. பாரதி பற்றிய இரண்டு கவிதைகள்.
காலையில் புறப்படும்போதே சாவியைக் கதவில் விட்டுவிட்டுபோனவன் எங்கெங்கோ சாவியைத் தேடுகிற மனச் சலனங்கள், மணியம் செல்வன், மருது, அமுதோன் மாதிரி படமும் வரைவீங்களா? என்ற கேள்விக்கு “அவிங்க செய்யறது வேற வித்தை, நாங்க செய்யறது அசுர வித்தை” என்று பின்னிப் பெடலெடுக்கும் பதில் சொல்லிக் காலரைத் தூக்கிவிட்டுப் போன பெயிண்டர் முத்துசாமி!, நெடில் எழுத்துகளைப் பூமியில் எழுதும் பருவ மழை, மர்ம நினைவாய் இன்றும் நிலைத்துப்போன மருதூர் அன்னை, நினைத்தவாறு எந்தப் பொருளையும் நிறங்கள் மாற்றும் தேவதை, கவிஞனின் சர்ப்ப யாகத்தில் நாய்க்குடையாக வந்த கவிதை நவீன தொனியில் கவிதையாகியுள்ள கடைசி மனிதன் என இந்தத் தொகுப்பின் கவிதையுலக வரைபடம் குழந்தையுலகம் முதல் அறிவியல் வரை அகலமானது; அதிக ஆழமானது. ஆனாலும் இந்த இயற்கை உபாசகனின் மனம் விழுந்து புரளும் இடம் இயற்கையின் மடி. .
இயற்கையில் காடுதான் கவித்துவமானது. ‘காடு’ என்கிற கவிதைதான் கவிஞர் சிற்பியின் தனித்துவமான கவிதையுலகம். மரங்களைப் பற்றிய வரலாறு எழுதும் மற்றொரு கவிதை. அவனால்தான் சீறிப் பாயும் பசுவின் வாலில் தொங்குகிற காட்டினைக் காண முடியும். அடர் வனம் அறிந்தவன் யார் என்று ஒரு காட்டுப் பூ ஏளனம் புரிவதைக் காணமுடியும். காட்டுப் பன்றியின் மூதாதை யானை என்று கண்டுபிடிக்க முடியும். அதனால்தான் கலைவிமர்சகர் கவிஞர் இந்திரன் தனது உரையில் மிகச் சரியாகச் சுட்டியிருக்கிறார்….“முகநூலில் நீரருந்தும் கொம்பன் யானை”. இது காட்டில் யானை; கடலில் திமிங்கலம்.
நா.வே.அருள்
கருத்துகள்
கருத்துரையிடுக