நூல்
விமர்சனம் – நா.வே.அருள்
கவிஞர்
ஜெயதேவனின்
“ஒருநாள்
என்பது 24 மணி நேரமல்ல”
ஒரு சுற்று வாழ்க்கை
*********************************
வண்ணதாசனைப்
படையலிலும் வானவில்களைக் கவிதைகளிலும் வைத்திருக்கும் ஒரு கவிதைத் தொகுப்புதான் ஜெயதேவனின்
“ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல”.
கடிகாரமே தலையாகிப்போன ஓர் அழகான கவிதைதான் முன் அட்டைப்படம்.
“ஒரு
நிமிடம் என்று தூக்கி எறியாதீர்…
நிமிடம்
நிமிடங்களால் ஆனதே வாழ்க்கை.”
காலத்தைப்
பற்றிய இந்தக் கவிதைதான் பின் அட்டைப்படம்.
அட்டை முதல் அட்டை வரை மனசில் ஒட்டிக்கொள்ளும் கவிதை அட்டைகள்.
இந்தியா விடுதலையாவதற்கு ஒரு மாதம் முன் பிறந்த மகாதேவன்தான் கவிதையில் ஜெயதேவன்!
“மீன்காரியின் கை வளையொலியில் ஆதி இசை” கேட்கிற செவிகள்; உதிரும் பழுப்பிலையில் மரத்தைக் காண்கிற கண்கள்; உங்கள் மழையும் எனது மழையும் ஒன்றல்ல என்று உணர்கிற ஞானம் என ஜெயதேவன் கவிதைகள் கடற்கரை மணல்வெளியில் குடை ராட்டினம் போலச் சுற்றிச் சுற்றி வருகின்றன. குதிரை, சிங்கம், புலி, மீன், பெட்டி என வித விதமான இருக்கைகளில் ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு விதமாக உட்கார்ந்திருக்கின்றன. அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே பெயர் கவிதை!
இவர் காண விரும்பும் கவிதைப் பட்டியல் கொஞ்சம் சுவாரசியமானதுதான்.
“எருமை
மீது ஏறிச் செல்லும் சிறுவன்
ஓலைக்
காத்தாடி விடும் சிறுமி
காக்கா
எச்சம் விழாத தலைவர் சிலை
எச்சில்
மணலில் அமர்ந்து விசிலடித்துப்
பார்க்க
ஒரே ஒரு டூரிங் டாக்கீஸ்”
காலத்தை
நேசிப்பதில் கிராமத்தில் கபடி ஆடும் இளந்தாரி போலக் கவிதை ‘ரௌண்டு’ கட்டி அடிக்கிறார்
கவிஞர்.
மரணம் எல்லோர்க்குமானதுதான். எல்லோர்க்கும் மரணம் ஒரே மாதிரியானதா என்கிற கேள்வியை எழுப்பிவிடுகிற மனம் கவிதையாய் அலைபாய்கிறது.
அந்த
மனம்தான்
“சற்று
முன் என்னைக் கடந்து போன
அந்த
வாலாட்டிக் குருவி சரியாய்க்
கூட்டை
அடைந்திருக்குமா?”
என்று
கவிஞரைக் கவலைப்பட வைக்கிறது.
இந்த வாழ்க்கை நமக்காக என்ன வைத்திருக்கிறது? இந்த வாழ்க்கைக்காக நாம் என்ன வைத்திருக்கிறோம். கணக்குப் பார்த்தால் கடைசியில் என்ன மிஞ்சும்? கொண்டாடித் தீர்க்க வேண்டியது எது? கூட வருவது எது? “இருப்பதற்காக வருகிறோம். இல்லாமல் போகிறோம்” என்று நகுலன் எப்படி நான்கு வரிகளில் நமது இருப்பை அல்லது இன்மையை கவிதையின் வழியே கண்டடைகிறார்? வயிற்றிலிருந்து மாடு செய்வதைத்தான் வாழ்க்கையிலிருந்து மனிதன் செய்கிறான். அசைபோடுகிறான். எஞ்சிய ஞாபகங்களைத் தவிர வேறெதுவும் மிச்சமில்லை. மனிதன் ஞாபகங்களின் அநாதை! கவிஞனோ ஞாபகங்களின் அகதி.
“கடவுளுக்குப்
பக்கம் வைத்தேன்
கடந்த
ஆண்டு இறந்து போன அம்மா படத்தை….
இது
சாமிக் குத்தம் என செண்பகம் பாட்டி சொன்னார்…
நடு
ஹாலில் மாட்டி விட்டாள் மனைவி.
“தனியாய் இருக்கும் போது நமக்கு
அவர்கள்
நினைவு தேவைப் படுகிறது பேச்சுத் துணைக்காய்…
பேச்சுக்கு
ஆட்கள் வந்தவுடன் அவர்களைக் கழற்றி
விட்டு
விடுகிறோம் நினைவிலிருந்து…
“எப்படியோ ஒரு நாள் நாமும் தொங்குவோம்
எந்த
சஞ்சலமும் இன்றி இவ்வளவையும்
பார்ப்போம்…
குருவி
பறந்து போன கூட்டை ஒரு காய்ந்த மரம்
பார்ப்பது
போல”
காய்ந்து
போன மரத்தின் கூட்டையும் காலக் காற்று அடித்துச் சென்றுவிடுகிறது. அதே காலம்தான் நங்கூரம் இட்டு வைத்த கப்பலைக் கடலுக்கு
இழுத்துச் செல்லும் புயலாகவும் மாறுகிறது.
பனி உதிர்க்கும் ஒரு காலையின் வெவ்வேறு அனுபவங்களைப் பட்டியல் இடுகிறார். பெண்களின் முத்தச் சூடு, மழைத் திவலைகளை உதறிவிடும் சேவலின் சிலிர்ப்பு, வானத்தைப் பறவைகளுக்குத் திறந்துவிடும் தாய்மையாய், புற்களுக்குச் சூரிய கணையாழி சூட்டிவிடும் தந்தைமையாய், மணற்துகளை முந்தானையால் ஒற்றியெடுக்கும் காதலியாய்….
கவிதை மருத்துவராக ஒருநாள் என்னும் நபரை எப்படியெல்லாம் பரிசோதிக்கிறார் பாருங்கள்….
“ஒரு
நாள் என்பது 24 மணி நேரமல்ல
அதற்குள்
இருக்கிறது
ஆதி
மனிதனின் நிர்வாணத்திலிருந்து
போதிமரத்து
புத்தஞானம் வரை.
…………
“ஒரு
வட்டம் சுற்றி முடிப்பதற்குள்
உருவாகி
இருக்கலாம்
எங்கோ
ஒரு ஹிட்லர் அல்லது யூதாஸ்
ஏசுகளுக்கான
சிலுவைகள் அன்றி
நபிகளுக்கான
கற்கள்
………….
“நாள்
என்பது கடிகாரத்திற்கு வெளியே இருக்கிறது
ஆயினும்
சுவர்க்கோழி
போல் கத்திவிட்டு
அடங்கும்
கடிகாரம்
மரணத்தின்
ஊரிலிருந்து வந்தவன்
தட்டும்
கதவு ஒலிதான்.”
ஒரு
நாள் என்பதற்குள்ளாக நொடிகளின் பகுப்பாய்வாக நிறைய நிகழ்வுகளின் அடுக்கு அறைகளாக நமக்குக்
காட்டுகிறார். நெகிழி நாரால் ஆனதுதான் ஒரு
மீன்வலை என்று “சொல்” ஒன்றினால் சுட்டுகிறோம்.
ஆனால் மீன்வலையின் ஒவ்வொரு கண்ணிக்குள்ளும் ஒரு கேமராவை நுழைக்கிறார் கவிஞர். உள்ளே துடிக்கின்றன அயிரை, ஆரால், தேளி, கெண்டை,
கெளுத்தி, மத்தி, குறவை என விதவிதமான மீன்கள். ஒரு நாளுக்குள் என்னென்னவெல்லாம் நிகழ்ந்துவிடுகின்றன
என்று தனது கவிதைப் பதிவுகளின் மூலம் காட்டிவிடுகிறார்.
மனைவி தலை வாருகையில் நரைத்த முடியொன்று காற்றில் பறந்து முகத்தில் மோதுகிறபோது கவிஞருக்கு ஏற்பட்ட நினைவுச் சிலிர்ப்புதான் கூந்தல் பற்றிய முழுநீள முடிக் கவிதை.
பறவையின் முதலிரவை யோசிக்கும் கலவிக்காரக் கவிஞராக இருக்கிறார். அதனால்தான் “கனகா டீச்சர் விசிறி மடிப்பு சேலைக்குள் கள்ளத்தனமாய்க் கவிதைகளைத் தரிசித்திருக்கிறார்”.
சீரியஸாகத் தொடங்கி வேடிக்கையாக முடிந்துவிடுகிற கவிதையும் உண்டு.
“பெண்ணையே
பார்த்திராதவனுக்கு
அவளது
நிர்வாணமும்
குறிகளும்
முலைகளும் ஏது செய்யும்…
கடுகைக்
கூடப் புரட்டிப் போடாது.”
என்கிற
கவிதையில் பார்வையற்றவர்களின் அகஉலகத் தரிசனத்தின் போதாமையை உணர முடிகிறது. சில இடங்களில்
சின்னச் சின்ன முரண்கள்.
மற்றபடி
கவிதை அனுபவங்களால் பக்கங்கள் முழுவதும் பரவச உணர்வுகளால் வழிந்து ததும்பும் ஒரு தொகுப்புதான்.
“நீங்கள் என்னைத் தேடும்போது
நான்
காணாமல் போயிருப்பேன்
சில
கிளிஞ்சல்களை மட்டும்
கரையில்
விட்டுச் செல்லும் அலையைப் போல.
தேநீர் குடிக்க என் குவளை அப்போதுதான்
உங்களுக்குத்
தேவைப்படும்
ஆனால்
நான் உடைந்து போயிருப்பேன் ஒரு
பனித்துளியைப்
போல.
இப்போது தூக்கி எறிந்த என் பாடல்களைக் கேட்க
நினைப்பீர்கள்
காலாதீதத்தில்
கரைந்து போயிருக்கும் காலதேச
வர்த்தமற்ற
அந்த இசை.
எனது ஆறுதல் சொல்லை நீங்கள்
நிராகரித்து
நடந்ததை அறிவேன்
உங்களுக்கான
என் விரல் ஸ்பரிஸத்தை நீங்கள் தேடும்போது
என்
விரல்கள் வெந்திருக்கும்
விறகுக்குள்.”
தன்னை
வாசிக்காத வாசகர்களுக்கு ஒரு கவிஞன் விடுக்கிற மெல்லிய எச்சரிக்கையாகவும் எடுத்துக்
கொள்ளலாம்.
எழுத்துப் பிழைகள் இல்லாத ஒரு கவிதைத் தொகுப்பை வாசிக்க ஆசைப்படும் எனக்கு மிகச் சிறந்த வாசக அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது சந்தியா பதிப்பகத்தின் மிக நேர்த்தியான இந்தத் தயாரிப்பு. நூறு ரூபாய்க்கு நூற்றிநான்கு பக்கங்கள். கணக்குப் பார்க்க முடியாத கவிதை அனுபவங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக