மரணத்திற்கு ஏன்
இத்தனை கை கால்கள்?
ஆக்டோபஸைப் போல
அறைந்து கவ்வுகிறதே….
மரணத்திற்கு ஏன்
இத்தனை வாய்கள்?
ஒவ்வொருவராகப் புசித்துக் கொண்டேயிருக்கிறதே….
மரணத்திற்கு ஏன்
இத்தனை வேகம்?
குதிரைப் படையில் சவாரி செய்கிறதே
மரணத்திற்கு ஏன்
இத்தனை ஆவேசம்?
பசியடங்காமல் புவியைப் புசிக்கிறதே
அவசர அவசரமாகக்
காரியமாற்ற
ஆணை இடுவதாக எண்ணித்தான்
ஒரு தோழன்
ஒவ்வொரு ஆண்டும் கலைஇரவு நடத்திக்
கலாச்சாரம் உயர்த்தினான்.
அதற்குள் செய்தாக வேண்டுமென்றுதான்
ஒரு தோழன்
ஆழமான அரசியலை
அள்ளியள்ளி ஊட்டினான்.
நேரமிருக்காது என்று எண்ணித்தான்
ஒரு தோழி
கவிதைகளில் தோழமையைக் கட்டி எழுப்பினாள்.
ஒரு பொன்னுலகத்திற்கான பாதையில்
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாகப்
பயணித்துக் கொண்டேயிருந்தார்கள்.
மரணமே
உன்னை நானறிவேன்….
உன்னால் முடிந்ததெல்லாம்
உயர்ந்த மனிதர்களையும்
செயலற்றுப் போகச் செய்வதுதான்.
ஏற்கெனவே அவர்கள்
செய்து முடித்த செயல்களை
உன்னால் நெருங்கவே முடியாது
உன்னால் நெருங்கவே முடியாது.
நா.வே.அருள்
03.05.2021
கருத்துகள்
கருத்துரையிடுக