ஜே.ஜே.அனிட்டாவின் கவிதைத் தவம்

**********************************************************

கவிதைக்கு யோகம் அடித்திருக்கிறது.  கவிஞர்கள் ஒரு கவிதையை முன்வைத்துக் காய்தல் உவத்தல் இன்றி ஒரு கலந்துரையாடல் நிகழ்த்துகிற களம் அல்லது சூழல் சாத்தியமாகியிருக்கிறது. 

அனிட்டா அவர்களின் கவிதையைப் பார்க்கலாம்.

//ஏன் நகர்கிறேன் என்கிறாய்

அசைதலற்று தெளிவுறாத

பிம்பமாய் உனையுறுத்தி

ஒறுத்தலை விடவும்

நகர்தல் நலமே.

கருணைக் கரமுயர்த்தி

உனையழைத்து

எனதிருளைக் கவ்விக் கொண்டு

நடைபயிலச் சொல்லும் கைங்கர்யம் காட்டிலும்

விழி திறந்து அகம் துற

என்பதே மேல்.

ஒரு பிடி நிழல் பிடித்து

ஆறடியை விழுங்கிக் கொள்ளும்

நினைவுச் சாளரம்

விழுங்குதல் பதிலாய்

திறந்த கதவுகளின் நிறம் உடுத்தி

ஓருயிராய் பிரிந்து கிட

என்பதே சரி.

இசைதலும் விசை படர் விழைதலும்

மறத்தலும் நீர்த்த உயிர்த்தலுமாய்

உன்னை அசைவுறாதபடிச் செய்யும்

என் இருத்தலை விடவும்..

மெலிந்து நகர்ந்து

துயருகிறேன் என்பதே

இனிமையான நலம்.

ஏன் நகர்கிறேன் என்கிறாய்..

நகர்தலென்பது

உனையொத்தே நிகழும்

ஓரிடம் நில்லாத என் பயணத் தவம்.

ஜே.ஜே.அனிட்டா

 

கவிஞர் ப்ரியம் ஜே ஜே அனிட்டா அவர்களின் கவிதை குறித்து அற்புதமாக ஓர் அபிப்ராய அறிமுகம் நிகழ்த்துகிறார். 

கவிஞர் ப்ரியத்தின் பதிவு

**************************************

//அனிட்டா அவர்களின் இக்கவிதையில் குறிப்பிடும் நகர்தல் அடுத்தக் கட்டம். யாருக்கோ பதில் சொல்லும் குரல்.

அது யார்?

" இசைதலும் விசை படர்விழைதலும் மறத்தலும் நீர்த்த உயிர்த்தலுமாய் உன்னை அசைவுறாத படிச்செய்யும்

என் இருத்தலை விடவும்

மெலிந்து நகர்ந்து துயருகிறேன்."

பொதுவாக கவிஞர்களுக்கு பால் பேதம் தேவையில்லை என்பது என் எண்ணம்.

ஆனால் இதுபோன்ற கவிதைகளை வாசிக்கும்போது கவிதையைக் கடந்து படைப்பாளியிடம் வந்துவிடுவது பெரும்பாலும் நிகழ்கிறது. இங்கு புரிந்துகொள்ளப்பட வேண்டிய விஷயம் படைப்பாளர் என்ற பொறுப்பு தரிக்கும்போது மட்டுமே இது பொறுந்தும். ஆணுக்கும் அவ்வாறே. ஆணோ பெண்ணோ இயற்கை விதிப்படி அவர்களின் கடமைகளாற்ற வேண்டி உள்ளது. படைப்பின் கணம் பயணிக்கும்போது மட்டுமே இது மாறுபடும். மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்கள் "என்னுள்ளிருக்கும் பெண் பேசும் போது "....என்ற பேச்சின் ஆழம்.

அனி ஒரு காத்திரமான துணிவுடன் எழுதும் ஒரு பெண்கவிஞர். உடனே இது ஆணை நோக்கி எழுதப்பட்டது என்ற அபத்தத்தோன்றல் பலரிடம் தோன்றக்கூடாது என்பதாலேயே மேற்குறிப்பிட்டக் குறிப்பு.

உன்னையே அண்டியிருப்பதைவிட நகர்தல் நலமே எனும் பதிலை குடும்ப உறவுகள் மீது நட்புகள் மீது நான் திணிக்க விரும்பவில்லை.

கவிதையில் முக்கியக் குறிகளை கவனியுங்கள்உன் X என் என்ற முன்னிலை, தன்மையை முன்னிருத்தியே பதில் பயணிக்கிறது.கூர்ந்து கவனித்தால் தன்னையே முன்னிலைப் படுத்திப் படைப்பாளியான மனம் நிறுத்தும் கேள்விகள்.

அப்படியான இரட்டை நிலை அகச் செயல்பாடுகள் படைப்பாளர்களுக்கு உண்டு.ஆனால் சூழல் என்ற நிலைப்பாட்டின் இயங்குதலில் முடங்கிவிடும்

படைப்பாள மனம் தன்னிலிருந்து தன்னை விடுபடச்செய்யும் குரல் தான் இக்கவிதையில் ஒளிந்துள்ளது.

தெரிந்ததா அது யாருக்குச் சொல்லும்

பதிலென்று.

உங்கள் புரிதலில்/ அதிகாரம்/மதம்/ஒடுக்குதல்/.........ஆகியவற்றுக்கு எதிரானக்குரல் எனத் தோன்றலாம்.

தோன்றட்டுமே.

உளச்சிக்கலை வெளிப்படுத்தும் இக்

கவிதையை மொழிபெயர்த்த திருநாவுக்கரசு அவர்களுக்கு நன்றி.

இருவருக்கும் என் வாழ்த்துகள்

ப்ரியம்.

00000

00000

கவிஞர் ப்ரியத்தின் கருதுகோள்கள்

*****************************************************

கவிஞர் ப்ரியம் வைக்கிற கருதுகோள்கள் மிகவும் முக்கியமானவை. படைப்பாளியில் பால் பேதம் பார்க்க வேண்டியதில்லை.  தங்கள் குடும்ப நபர்களுக்குச் சொல்கிற பதில்கள் இல்லை.  ஏன்? இன்னும் ஒரு படி மேலே போய், உன் X என் எதிர்மை கூட படைப்பாளி எதிரிலிருப்பவருடன் நிகழ்த்தும் உரையாடலாக இல்லாமல் படைப்பாளியின் இன்னொரு குரலாக இருக்கலாம் என்கிறார். “அப்படியான இரட்டை நிலை அகச் செயல்பாடுகள் படைப்பாளர்களுக்கு உண்டு. ஆனால் சூழல் என்ற நிலைப்பாட்டின் இயங்குதலில் முடங்கிவிடும் படைப்பாள மனம் தன்னிலிருந்து தன்னை விடுபடச்செய்யும் குரல் தான் இக்கவிதையில் ஒளிந்துள்ளது என்கிறார்.

நிச்சயமாக, அவரது இக் கருதுகோள்கள் பெண் கவிஞர்களுக்கான சுதந்திர வெளியை அதிகரிப்பதற்கு உதவும். 

 

ஜே.ஜே.அனிட்டா அவர்களின் தன்னிலைக் கூற்று:

**************************************************************************** -

கவிதையின் முதல் வரிதான் மூலக் கூறென எனது மூளையில் தங்கி சொற்களை சேகரிக்கத் துவங்கியது.நகர்தலென்பது சற்று ஒதுங்கியிருத்தல் அல்லது தள்ளி நிற்றல் என்பது தான்.ஆனால் நகராத போது என்னவெல்லாம் நிகழும் என்ற கற்பனை நிலைக்குள் நான் என்னை உட்புகுத்தி ஆராய்ந்த போதே இக்கவிதை மலர்ந்தது.

மிகச் சரியான நுட்பமான தெளிந்த உரையினால் கவிதையின் மிகச் செறிவான களம் நோக்கிப் பயணிக்க உதவிய ப்ரியம் சார் அவர்களுக்கு அன்புடன் நன்றி.

 

இந்தக் கவிதையைப் பொறுத்த அளவில் கவிஞர் அனிட்டா அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வாசகர்களாகிறார்கள்.  படைப்பாளியின் எண்ண ஓட்டங்கள் ஒருபுறம் இருக்க, வாசகர்கள் அவரவர்களுக்கான வாசிப்பை நிகழ்த்துகிறார்கள்.  அது படைப்பாளிக்கு ஏற்கிற விதமாகவும் இருக்கிறது.  மேலும் படைப்புப் பயணத்திற்கு உத்வேகம் ஊட்டக்கூடியதாகவும் அமைகிறது. 

 

கவிஞர் அனிட்டா தன் படைப்பின் ரகசிய ஊற்றை வெளிக்காட்டுகிற இடம் மிகவும் முக்கியமானது.  வாசகர்களுடன் தனது படைப்புத் தருணங்களைப் பகிர்கிற இந்த இடம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறேன்.

 

எனது பார்வையில்….

*****************************

உனை உறுத்தி

ஒறுத்தலைவிட

நகர்தலே நலம்

என்று துணிகிறது கவிஞரின் படைப்பு மனம்.

 

“கருணைக் கரமுயர்த்தி, உனையழைத்து, எனதிருளைக் கவ்விக் கொண்டு

நடைபயிலச் சொல்லும் கைங்கர்யம் காட்டிலும், விழி திறந்து அகம் துற

என்பதே மேல்.” என்ற முடிவுக்கு மனம் வருகிறது. 

 

இந்த நினைவு எப்படிப் பட்டது என்று சொல்கிற இடம் அருமை.  “ஒரு பிடி நிழல் பிடித்து ஆறடியை விழுங்கிக் கொள்ளும் நினைவுச் சாளரம்”

இப்படி விழுங்கப் படுதலுக்குப் பதிலாக வெளிச்சத்தை உடுத்தி நகர்ந்துவிட்டால் ஈருயிராய் அவன் படும் அவஸ்தை வேண்டாம்.  ஓருயிராய்ப் பிரிந்து கிடக்கலாம் என்ற நினைப்பு.  அவனுக்கு மட்டுமல்ல.  அது அவளுக்கும் நிம்மதி. 

 

ஏன் நகர்கிறேன் என்கிறது மனம்?  அவனை அசைவுறாமல் செய்துவிடுகிற இருத்தலைவிட நகர்தல் நலம் என்கிறது மனம். தான் அவனுக்குத் தொல்லை தர விரும்பவில்லை.  தானே தண்டனையை ஏற்கத் தயாராகிறது மனம். நகர்தலைச் சொல்கிற விதம் கவித்துவத்தின் உச்சம்.  நகர்தல் என்பது என்ன?  “ஓரிடம் நில்லாத என் பயணத் தவம்”.  இப்படியான ஒற்றை வரிக்காக எத்தனை வரிகளை வேண்டுமானாலும் கடந்து வரலாம் அல்லவா? 

ஒரு பிரதியில் படைப்பாளி இறந்துவிடுகிறார் என்பதுடன் வாசகர்கள் புதிது புதிதாகப் பிறந்தும் விடுகிறார்கள் இல்லையா?

கருத்துகள்

  1. முதலில் கவிதையைக் குறித்த சிறப்பானதொரு கருத்துரையாடலை மேற்கொண்ட ப்ரியம் சார் அவர்களுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்த பொன்னுசாமி ஐயா அவர்களுக்கும் உலகம் யாவையும் என்ற இவ்விலக்கிய தளத்தில் கவிதையையும் அதைக்குறித்த கருத்து பரிமாற்றங்களையும் சிறப்பாக மேற்கொண்டமைக்கு நா.வே.அருள் ஐயா அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.

    நகர்தலுக்கும் பிரிதலுக்குமான வேற்றுமையினின்று சற்றே விலகி ஓர் நல்ல நிகழ்வை அதன் சுவை கெடாதபடி சொற்களால் தள்ளாதபடி எவ்வாறு அணைத்துக் கொண்டே தனித்திருத்தல் இயலுமென்ற சுயஆய்விற்கான விளக்கங்களை முதல் வரி பெற்றுத் தந்தது.இயலாமையினின்று விடுபட இயலாமல் இருத்தலையே ஓர் நகர்வாய் கொணரும்பட்சத்தில் அதை ஓர் பயணத் தவமென ஏன் கொள்ளலாகாது என்ற எனது ஆழ் உணர்வின் தேடல் முடிவே கவிதையாய் உருவானது.

    ஒவ்வொரு வாசகனின் பார்வையிலும் ஒவ்வோர் கருத்தியலாய் நிகழும் இக்கவிதைக்கான முழு பேரின்பம் என்பது இவ்வாறான அற்புத உரையாடலும் கருத்துப் பதிவுகளுமே என்ற நிறைவோடு நன்றி தெரிவிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகம்