மனிதனும் கடவுளும்
*******************************
மனிதனுக்கு
மிக நெருக்கமாய்
இருப்பவரும்
மிகத் தொலைவில் இருப்பவரும்
கடவுள்தான்.
ஒரு பொருளே இல்லாதவரும்
மனிதனின் போதை வஸ்துவும்
கடவுள்தான்.
கடவுள் உண்டு என்றால்
கவிதை
கடவுள் இல்லை என்றால்
கட்டுரை
கடவுள் உண்டு இல்லை
என்றால் கதை.
கடவுள் உண்டு என்று
சொன்னால்
அவர்
மனிதனுடன் கால்பந்து
விளையாட
ஒரு குழந்தையைப்
போல ஓடி வருகிறார்.
கடவுள் இல்லை என்று
சொன்னால்
மனிதனின் வீடு வெறிச்சோடிக்
கிடக்கிறது.
மனிதன் வீடற்றவனாகக்
கூட இருக்கலாம்
ஆனால்
மனிதனின் மிகப் பெரிய
சாம்ராஜ்ஜியமே கடவுள்தான்
மனிதனை வாழவைக்க
நினைத்தவர்கள்
அவனது சாம்ராஜ்ஜியத்தைச்
சிதைத்தார்கள்.
மனிதனைச் சிதைக்க
நினைத்தவர்கள்
அவன் சாம்ராஜ்ஜியத்துக்குக்
காவல் நாய்களை வளர்த்தார்கள்.
மனிதன் ஒரு விசித்திரமானவன்
அவனிடம் ஒரு பொம்மையைக்
கொடுத்துவிட்டால்
அவன் குடிசையில்
எந்தப் புகாருமற்றுப்
படுத்துறங்கிவிடுகிறான்.
அவனது ஒரு கனவைச்
சீண்டினால் போதும்
கையளிக்கப்பட்ட அரண்மனையிலிருந்து
காணாமல் போகிறான்.
மனிதன் சூத்திரத்துக்குள்
அடங்காத
எண் இலி கணிதம்.
அவன்
ஒரே நேரத்தில் குகையிலும்
வசிக்கிறான்
வேற்றுக் கிரகத்துக்கு
ஏவுகணையில்
புறப்பட்டும் விடுகிறான்.
மனிதன்
கடவுளுக்குப் பயப்படுகிறான்
என்று சொல்வதைவிட
ஒரு முட்டாள்தனம்
வேறென்ன இருக்க முடியும்.
மனிதன்
கடவுளைத் தன் பக்கத்திலேயே
வைத்துக் கொள்ள விரும்புகிறான்.
அவன் செய்ய இருக்கிற
கொலைக்கான ஆயுதத்தை
முதலில் கடவுளிடம்தான்
கொடுக்கிறான்.
மனிதனின் நம்பிக்கைக்கு
உரியவராக இருக்கிறார் கடவுள்.
மனிதன் செய்யும்
அக்கிரமங்களுக்கு
முதல் துணை
கடவுளாகத்தான் இருக்கிறார்.
கையாலாகதவராக இருந்தாலும்
அவர் மனிதனுக்கு
ஒரு கையாளாக இருக்கிறார்.
கடவுள் இல்லாத வகுப்பறையை
மனிதன் விரும்புவதில்லை.
எந்த இழி செயலுக்கும்
மனிதன் கடவுளை அழைக்காமல்
போவதேயில்லை.
முதல் காரணம்
கடவுள் மனிதனைக்
கண்டிப்பதேயில்லை.
மனிதனுடன் இருப்பது
அவருக்கு ஒரு பொழுதுபோக்கு
அவ்வளவுதான்.
இன்னும் சொல்லப்
போனால்
மனிதன்
“சாமி கண்ணைக் குத்திவிடும்”
என்பதெல்லாம்
ஒரு சம்பிரதாயத்துக்குத்தான்.
மனிதனின் மீன்கூடை
மீன்களால் நிறைந்ததற்கு
ஒரு சின்ன தூண்டில்தான்
காரணமாய் இருந்திருக்கும்.
மனிதன் கடவுள்தான்
மீன்களால் தன் கூடையை
நிரப்பியதாகச் சொல்வான்
ஏனென்றால்
கடவுள் பொய்யை விரும்புகிறார்.
கடவுள்
மனிதனுக்குப்
பந்தைப் போலவும்
பலூனைப் போலவுமிருக்கிறார்.
மனிதன் ஒரு குழந்தையைப்போல
சந்தோஷமாக விளையாடிக்
கொண்டிருக்கிறான்.
மனிதன்
கடவுளைப் பற்றி
ஆராய்ச்சி செய்ய
விரும்புவதேயில்லை.
அட
கடவுள் அநாதை ஆனதுபற்றியும்
மனிதன் அலட்டிக்
கொள்வதில்லை.
இல்லையெனில்
தன் நெஞ்சத்தில்
குடியிருந்த கடவுளைப்
பிடுங்கிச் சென்றது
பற்றிய கவலையே இல்லாமல்
கோயிலுக்குள் போய்க்
கும்பிட்டுக் கொண்டிருப்பானா?
கருத்துகள்
கருத்துரையிடுக