திரைப்பட விமர்சனம்

******************************** 

எட்டுத் திக்கும் பறக்க ஒரு சிந்தனைச் சிறகு
********************************************************************
பற என்று முதலில் தலைப்புச் சூட்டப்பட்டு, அது ஒரு சாதியைக் குறிப்பிடுவதாக இருக்கிறதென்று கூறித் தணிக்கைக் குழுவால் நிராகரிக்கப்பட்டது என்று கேள்விப்பட்ட போதே பெயர்மாற்றம் பெற்ற “எட்டுத் திக்கும் பற” திரைப்படம் எனது ஆவலைத் தூண்டிவிட்டது.  சாதிய ஆணவ எதிர்ப்புக் கதையாகப் படம் சிறகு விரிப்பதைக் கண்டபோது அந்த ஆவல் நிறைவேறியது.

அடித்தட்டுச் சென்னை மக்கள் குடியிருக்க முடியாமல் அலைக்கழிக்கப்படுகிற எதார்த்தமான நடைபாதை வாழ்க்கை.   தினமும் ஒவ்வொரு இரவையும் நடைபாதை வாசிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிற அதிர்ச்சி நிறைந்த மணித்துளிகள்.  இருட்டை விட பயத்தைத் தருகிற, சைரன் அலறல்களுடன் ரோந்து வரும் வாகனங்களில் காக்கி உடைகளின் கெடுபிடி.  மிகைப் படுத்தலற்ற காட்சிகளிலிருந்து தொடங்குகிற ஒரு காதல் ஜோடியின் அவதி சமூக உறுத்தலை ஏற்படுத்தக் கூடியது. நடைபாதை வாழ்க்கையில் இளம்பெண்கள் சந்திக்க வேண்டிய சதைப் பாதுகாப்புச் சவால்களில்,. மானம் காத்துக் கொள்ளவாவது குடியிருக்க ஒரு வீடு வேண்டும் என்கிற எளிய கனவின் நியாயம் கண்ணீரை வரவழைக்கிறது.  கவனத்தை ஈர்க்கிறார்கள் நித்திஸ் வீரா, சவந்திகா.  

திருமணத்திற்காக அவர்கள் வைத்திருந்த பணத்தை மருத்துவ மனையில் உயிருக்காகப் போராடும் ஒரே மகனுக்காகத் திருடிச் செல்கிறான் கேளிக்கை விடுதியின் கோமாளி ஆட்டக்காரன்.  திருட்டுப் பணத்தில் மகனுக்கு சிகிச்சை வேண்டாம் என்று நிர்தாட்சண்யமாக நிராகரிக்கிறாள் மனைவி. அந்தக் கோமாளியாக முனிஸ்காந்த் நம் அருகில் அமர்ந்து கொள்கிறார். எதிர்பாராத இடத்திலிருந்து நீளம் உதவிக்கரம் எளிய மனிதர்களின் மனசாட்சிக் குறியீடு. 

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்ட மகன் ஊரில் தனது  ‘விதவன்’ தந்தை குடியிருக்கும் வீட்டை விற்கச் சொல்கிற அவசரமும், இவர் ஏதோ சொல்ல வர, ஒரு வார்த்தையைக் கூட கேட்கத் தயாரில்லாத வக்கற்ற அலட்சியமும், இணையவழி உரையாடலில்  சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் தவிக்கிற தந்தையின் தவிப்பும் மனதை உறைய வைக்கின்றன.  அவருக்கும் சமவயது  முஸ்லிம் பெண்ணுக்கும் இடையே மலர்ந்த அழகான அறுபதின் காதல் ஒரு கவிதை.  இந்த இணையராக குமரேசன் (ஆம், தீக்கதிர் குமரேசன்தான்), கவிஞர் நாச்சியாள் சுகந்தி இருவரும் நேர்த்தியான நடப்பிற்காக நம் கைக்குலுக்கலைப் பெறுகிறார்கள்.

படத்தின் மையச் சரடாகப் பின்னப்பட்டிருக்கிற கதை வன்மம் மிகுந்த சாதியத்தின் வேர்கள் ஆழமாகப் பரவியிருக்கிற ஒரு கிராமத்திலிருந்து தொடங்குகிறது.  அவ் வேர்களுக்குக் குருதிநீர் பாய்ச்சுகிற அரசியல் வாதியின் சூழ்ச்சி கிராமத்தின் ஒற்றுமையைக் கூறு போடுகிறது.  அடியாட்கள் சகிதம் உருட்டுக் கட்டை உபகரணங்களுடன் வாக்கு வங்கிக்காக வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.  செய்திகள் இங்கே திரைக்காட்சி நடப்பாகின்றன.    
பெற்றோர்கள் ஒத்துப் போனபின்பும் பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தி உசுப்பேற்றுகிற சில ஊராரையும், அரசியல் உள்நோக்கமும் கலந்த சொந்தக்காரர்களின் உண்மை முகங்களையும் அம்பலப்படுத்தியுள்ள விதம்  படத்தின் முக்கிய பலம்.  சாஜுமோன், சாந்தினி தமிழரசன் இருவரும் ஏற்றுள்ள அக்கதாபாத்திரங்களுக்காகப் பார்வையாளர்களின் மனம் துடிக்கிறது.

போராளிகளின் நிழலாக இயங்குகிறார் வழக்குரைஞர் அம்பேத் (சமுத்திரக்கனி). தங்கள் மகனை இழந்தும் மக்களுக்காக வாதாடுகிறவர்கள் அவரும் அவரது இணையரும். அவர் எதிர்கொள்கிற அடியாள் ஆபத்துகள் சமூகத்தின் மற்றொரு இருண்ட பக்கம். பொருத்தமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியின் இயல்பான நடிப்பு, இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் அவருக்காக உருவாக்கப் படுகின்றனவா அல்லது அவர் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்கிறாரா என்று யோசிக்க வைக்கிறது.

அரசியல், சமூகச் சிந்தனைகளைத் தாண்டி படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன நெகிழ்ச்சியான நிகழ்வுகள்.  ஆயினும், சமூகச் சாட்டையாகச் சுழன்று, காதலர்களின் புகலிடத்திற்கெல்லாம் ஏற்பாடு செய்தபின் சாதியத்தின் ஆபத்தை விளக்கி, ஊருக்குத் திரும்பக் கூறும் அம்பேத்தின் பேச்சு செயற்கை. காதலர்களின் மன உறுதியை அறிவதற்காக அப்படிப் பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம் என்றால், அது தெளிவாக வெளிப்படவில்லை.

காதலர்களைப் பிடிக்கவும், வழக்குரைஞரை ஒடுக்கவும் கும்பலை அனுப்பும் அரசியல்வாதி வில்லனை இவ்வளவு அப்பட்டமாக அல்லாமல் நுட்பமாக அமைத்திருக்கலாம்.  ஆனால் சாதிப் பெருமையின் பெயரால் குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு எதிரான அணித்திரட்சி பற்றிய காட்சி கச்சிதம். 

பதிவு அலுவலக வளாக மோதலின் இறுதியில் நடைபாதைக் காதலன் அனியாயமாய் உயிரிழக்கிறான்.  பிரச்சினையில் நெரடியாகத் தொடர்பில்லாதவர்களும் வன்முறைகளில் பாதிக்கப்படுவது நடந்துகொண்டுதானே இருக்கிறது.  ஆனால், அத்தனை ஏற்பாடுகளுக்குப் பிறகு கடைசியில் அந்தக் கிராதமத்துக் காதலன் வதைக்கப்படுவது வலிந்த சோகத் திணிப்பாக இருக்கிறது.  மாற்றத்திற்கான ஒரு கலைப்படைப்பு மாற்றத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டாமா?  கிராமத்தின் வேற்றுச் சாதிக் காதலர்களக்கு இப்படிப்பட்ட அபாயகரமான சவால் நிலைமைகளில் என்ன கதி ஏற்படுமோ என்று ஊகிக்கிற சுதந்திரத்தைப் பர்வையாளர்களிடம் விட்டிருக்கலோமோ?  எப்படி இருந்தாலும் ஆணவக் கொலைக்கு எதிராகப் பார்வையாளர்களின் மனசையும் சேர்ந்து பதற வைப்பதற்கான நேர்மையான யத்தனம் தெரிகிறது. 

அடித்தட்டு மக்களின் உளவியலையும் வாழ்க்கையின் சிக்கல்களையும் கதையாக்கிக் கலைநேர்த்தியுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கீரா.  சமுதாய இழிவாகிய சாதிய ஆணவத்துக்கு எதிரான படைப்பாளிகள் அணிவகுப்பில் இவரும் இணைகிறார்.  நள்ளிரவில் தொடங்கி மறுநாள் மாலையில் முடிவடையும் கதையோட்டத்திற்கான காட்சித் துடிப்பைத் தருகிறது சிபின் சிவன் ஒளிப்பதிவு.  விறுவிறுப்பைக் கோர்த்திருக்கிறது சாபு ஜோசப் தொகுப்பு.  சிநேகன், உமாதேவி, சாவீ, அல்பேன், ஞான் பாடல்கள் கதையின் பயணத்துக்குத் துணை.  எம்.எஸ்.ஸ்ரீகாந்த், அமரர் விமல்ராஜ் இசையமைப்பு அந்தப் பாடல்களுக்குத் துணை.  “பற பற பற – பப்பரப்பற பற” பாடல் கதை நோக்கத்தின் சாறு. 

மனசாட்சியுள்ள சமூகம் தன்னை மேம்படுத்திக் கொள்ள மனசாட்சியுள்ள இத்தகைய கலையாக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளும்.
                                              நா.வே.அருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்