லெனின் பாரதியின்
“மேற்குத் தொடர்ச்சி மலை”

மேற்குத் தொடர்ச்சி மலை ஆரவாரமில்லாத எளிமையின் அழகு பொருந்திய  திரைப்படம். நவீன காலத்து இயக்குநர்களில் நம்பிக்கைக்கு உரியவராகத் தன் இருப்பினைத் தனக்கே உரிய இயல்பான முறையில் தக்கவைத்துக் கொள்கிறார் புதிய இயக்குநர் லெனின் பாரதி. அடிவாரத்திலிருந்து ஏறிச் செல்வதற்கு அவ்வளவு இலகுவாக இல்லாத ஒரு மலைக்கிராமத்தை ரத்தமும் சதையுமாக எந்தவிதமான சினிமாத்தனமும் இல்லாமல் படக்காட்சிகளில் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

வேறு ஊரிலிருந்து பஞ்சம் பிழைக்கவந்த ஒருவன் எப்படி எப்படியெல்லாம் அந்த மக்களோடு ஒன்றித் தன் பேச்சினைத் தகவமைத்துக்கொள்கிறான்,  வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்கிறான் என்பதெல்லாம் கூர்ந்து நோக்கத் தக்கது. கடைசியில் அவன் வெளிநாட்டுக்காரனுடன் இணைந்து எப்படி உள்ளூர் நிலங்களை வளைத்துப் போடுகிறான், அவனது நவீனக் கந்துவட்டித்தனம் என்பதெல்லாம் அருமையாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. லோகு ரியல் எஸ்டேட், லோகு கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்றெல்லாம் வளர்ந்து பிரம்மாண்டமாகிவிட்டான் என்பதை அவனுடைய பிரேஸ்லெட்டின் மூலமும், வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை சகிதம் இயக்குநர் அற்புதமாக நிறுவிவிடுகிறார். ஒரு வெளிநாட்டுக்காரனுடன் உள்ளூர் மூலதனம் இணைந்து எப்படியெல்லாம் செயலாற்றும் என்பதும் புலனாகிறது.

ஏலக்காய் ஜமீன்தாரின் சூழ்ச்சிகளுக்கும் சுரண்டலுக்கும் எதிராகச் சங்கம் கட்டிப் போராடும் -- வயதான பெற்றோரின் இயல்பான எதிர்பார்ப்பினைக்கூடப் பூர்த்தி செய்யாமல் தனது திருமணத்தைவிடவும் சமூகத்துக்குத் தான் ஆற்றவேண்டிய பங்கு மகத்தானது என்ற புரிதலுடன் இயங்கும் -- இளம் கம்யூனிஸ்டின் பாத்திரப் படைப்புப் பாராட்டுதற்குரியது.

நகைச்சுவையாகக் கதையை நகர்த்துவதற்குச் செய்கிற ( நான் சொல்வது வணிகத்தனமான வழமையான ) எந்த யத்தனமும்  கிராமத்து இயல்பான தன்மையைப் பாழாக்கிவிடும் என்று மிக கவனமாகத் தேர்ந்த சிற்பி செதுக்கிய அச்சு அசலான ஒரு கிராமத்துச் சிற்பம்தான் மேற்குத் தொடர்ச்சி மலை.

ஏலக்காய் ஜமீனையும் அவனுடன் கள்ள உறவு வைத்துக்கொண்ட கம்யூனிசப் போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு கள்ளனையும் வன்முறை மூலம் அகற்றிவிடுகிற இளம் கம்யூனிஸ்டின் ரௌத்திரத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்குத் திரைக்கதை நேர்த்தியாக அமைந்திருக்கிறது. ஆனால் அந்த ஏலக்காய் ஜமீனுடன் முடிந்துவிடுகிறதா இயக்குநர் எடுத்துக்கொண்ட ‘அகன்ற திரைச்சீலை’ (wide canvas).  படத்தின் நிறைவில் உலகமயத் தாக்காத்தால் உருவானதாகக் காட்டப்படுவதை ஒரு தார்ச்சாலையின் உருவகத்தால் உணர்ந்துகொள்ள முடிகிறதல்லவா?  உள்ளூர் அரசியலை உலக அரசியலுடன் இணைக்கும் வலுவற்றவனாகத் தெரியவில்லையே அந்த இளம் கம்யூனிஸ்டு? எய்தவனிருக்க அம்பை நோகிற கதையாக ஏனந்த அவசரக் கொலைகள்? ஏலக்காய் ஜமீனின் பக்கம் ரௌத்ரம் திருப்பிவிடப்படுவதால் பெரு முதலாளியை எதிர்க்கும் கண்ணி பலவீனமாகிவிடுகிறது. இயக்குநரின் திட்டமிட்டக் கண்ணோட்டமாக இதை நான் பார்க்கவில்லை.  மாறாக காலகாலமாக முதலாளித்துவம் செய்கிற கருத்துத் துவம்சம் பற்றித்தான் எனது கவலை.  என் பார்வை இயக்குநரின் பார்வையாக இருக்க வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை.  என் சிறு வயதில் கம்யூனிசத்தை நக்சலிசத்துடன் ஒன்றுக்கொன்றாகப் பார்க்கவைத்த பார்வை இன்னும் தொடர்கிறது.  கம்யூனிஸ்டுங்க கொலைகாரங்க என்கிற மாதிரியான கருத்துகள் திட்டமிட்டு எளிய தெரு சமூகத்தில் திட்டமிட்டு விதைக்கப்படும் கருத்தோட்டத்திற்கு நாமே பலியாகும் வாய்ப்பு இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.      

கம்யூனிசத்தின் மீது காலகாலமாக எத்தனையோவிதமான பொய்க் கட்டுக்கதைகள் கட்டிவிடப்பட்டிருக்கின்றன.  அதிலொன்றுதான் லோக்கல் சாதாரணப் பணக்காரனையும் அம்பானி, அதானி, டாட்டா, பிர்லா, லஷ்மி மிட்டல்களையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்கிற பார்வை.  ஏணியின் முதல் அல்லது இரண்டாம் படியில் இருப்பவனைக் கொன்றுவிடுகிற அவசரத்தில் ஏணியின் உச்சியில் உட்கார்ந்து காலாட்டிக்கொண்டிருப்பவன் தப்பித்துக்கொள்ள ஏதுவாகிறது. எனது இந்தப் புரிதல் உணர்த்தப்படவேண்டிய அளவுக்கு நுட்பம் குறைந்தவர் அல்ல இயக்குநர்.  அதே நேரத்தில் ஒரு மூத்த கம்யூனிஸ்டு தோழரை இப்படிச் சித்தரித்திருப்பது குறித்துப் பலரின் எதிர்மறையான விமர்சனத்துக்கு நான் உடன்படவில்லை.  மார்க்ஸ், லெனின் பிறந்த இந்த பூமியில்தானே எல்ஸ்டினும் கோர்பச்சேவும் பிறந்திருக்கிறார்கள். கம்யூனிச சித்தாந்தத்துக்குத் துரோகம் செய்பவர் மூத்தவராயிருந்தால் என்ன? இளையவராய் இருந்தால் என்ன?  நாம் பார்க்க வேண்டியது நல்லவரா? அல்லது கெட்டவரா?

மற்றபடி மேற்குத் தொடர்ச்சி மலை வீழ்ந்து கிடக்கும் சமூகத்தை எழுப்பிவிடுகிற அக்கறையுடன் அமைந்திருக்கும் மானுடத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்விற்கான மனிதத் தொடர்ச்சி மலை என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்