இந்திரன்
காலம்
‘ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
“அறைக்குள்
வந்த ஆப்பிரிக்க வானம்” தொகுப்பிலிருந்து லாங்ஸ்டன் ஹ்யூக்ஸின் “கறுப்பு இயேசுநாதர்”
கவிதையை முதன்முதல் வாசித்தபோது பிரமிப்பின் உச்சத்தைத் தரிசித்தேன். அன்றைக்கு அண்ணாந்து
பார்க்க ஆரம்பித்த ஆளுமை அந்தத் தொகுப்பைத் தமிழில் கொண்டுவந்திருந்த இந்திரன். அதைத்
தொடர்ந்து மொழிபெயர்ப்பின் ஊடாகக் காற்றுக்குத் திசையில்லை, பசித்த தலைமுறை, பிணத்தை
எரித்தே வெளிச்சம், கடவுளுக்கு முன் பிறந்தவர்கள், மஞ்சள் வயலில் வெறிபிடித்தத் தும்பிகள்
என்று கவிதைப்புலத்தில் ( + கட்டுரைத் தளத்தில்) காத்திரமான கவிதை மற்றும் இலக்கியப்
போக்குகளை அடையாளப்படுத்தியுள்ளார்.
புதுமையான
இலக்கியப் போக்குகளை அவரது சொந்தப் படைப்புகளான சாம்பல் வார்த்தைகள் முதல் மின்துகள்
பரப்பு வரையிலும் காண இயலும். பத்தாண்டுகளுக்குப் பிறகு அவை ஏற்படுத்தியத் தாக்கத்தைத்
தமிழ்க் கவிதையில், இலக்கியத்தில் ஒரு புதிய போக்கினைத் தரிசிக்க நேர்ந்தது. கவிதையில் மாத்திரமா? கூர்ந்து அவதானிக்கும்போது
அவரது ஒவ்வொரு தொகுப்புமே கவிதையில் ஒரு புதுவிதமானத் திசையினைத் தமிழ்ப் பரப்புக்கு
அறிமுகப் படுத்தியிருப்பதை உணர முடியும். இலக்கிய உலகில் அழகியலையும் அரசியலையும் மிக
அற்புதமாகவும் நுட்பமாகவும் பூடகமாகவும் இணைத்த ஆற்றல் மிகுந்த கண்ணிகள்தான் அவரது
எழுத்துகள். குழப்பம் நிறைந்ததாக கவிதையின் ஜாம்பவான்கள் என்று கங்கணம் கட்டித் திரிந்த
சிலரது விமர்சனங்கள் வந்துகொண்டிருந்த தமிழ்க் கவிதையுலகில் பெரும் நம்பிக்கையை முன்வைத்தும்
கவிதையைப் பற்றிய அப்படியொரு ஆழ அகலமான நீள நேர்மையான புத்தகமாக வந்ததுதான் இவரது “கவிதையின்
அரசியல்”. வெற்று அரசியல் முழக்கங்களிலிருந்து
காத்திரமான அரசியலும் அழகியலும் இணைந்த பெரும் கவிதைப் பாய்ச்சலை முன்வைப்பதாக இருந்தது
இவரது அழகியல் கோட்பாட்டு ரீதியான முன்வைப்புகள்.
தமிழ்
அழகியல் என்கிற பண்பாட்டுக் கோட்பாட்டிற்கும் அதைத் தொடர்ந்த உரையாடலுக்கும் அழுத்தமும்
ஆழமுத் தந்தவர். ஓவியத்தில், கலை இலக்கியச்
செயல்பாடுகளில், களச் செயல்பாடுகளில் என ஓயாமல் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக்
கொண்டவர். தனது அடையாளத்தைச் சமூக வெளிப்பாடாக
மிளிரச் செய்பவர்.
இவருடன்
நடத்தும் உரையாடல்களின் ஒற்றையடிப் பாதை பாறையிலிருந்து
சிலைக்கு என்கிற பயணமாக இருக்கும்.
இவரது
நெடுங்கனவின் ஒரு பகுதியாகத்தான் சமீபத்தில் அவர் முன்னெடுத்திருக்கும் “கவிதை கிராமம்’
என்கிற கருத்துரு. இக்கனவு மெய்ப்படுகிறபோது
இலக்கிய உலகில் இந்திரன் காலம் என்று பரந்த அளவில் பேசப்படும். அது இந்திரன் காலமாக இருக்க வாய்ப்பில்லை. இந்திரனால் இலக்கிய உலகில் தன்னெழுச்சி பெற்றவர்களின்
இலக்கிய காலமாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக