இலக்கியம் என்றால் பாரதி, கண்ணதாசன், வைரமுத்து என்று இருந்த காலத்தில் என் கைப்பிடித்து நடைவண்டி கொடுத்தவர்களை எப்படி மறக்க முடியும்?  அந்த இருவருக்கும் இன்று (14-7-2018) இலக்கியத் திருவிழாக்கள்.

இந்திரனை முன்வைத்து ஓவியக் கண்காட்சி புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் தொடங்குகிறது.  தமுஎகச நிகழ்ச்சியின் காரணமாகப் புதுவை செல்ல இயலவில்லை.

இளையபாரதியின் வ உ சி நூலகத்தின் 21 நூல்கள் வெளியீட்டு விழாவில் கல்யாண்ஜியின் 776 பக்கங்களில் முழுக் கவிதைத் தொகுப்பும் இன்று எம் ஆர் சி நகர் இராஜரத்தினம் அரங்கத்தில் வெளியாகிறது.  எட்டு மணியளவில் உள்ளே நுழைகிறேன். தோழர் டி.கே.ஆர் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள்.  அவருக்கே உரிய புன்சிரிப்புடனும் நிதானத்துடனும் இன்றைய காலக்கட்டத்தில் மார்க்சியத்தின் மேலதிகப் பொருத்தப்பாட்டைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்.

என்னை ஆச்சரியப் படுத்தும் விதமாக முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் குறித்து எளிய முறையில் விளக்கினார்.  முதலாளித்துவம் தனது விதிகளைச் செயல்படுத்துகிறபோது தோற்றுப் போகிறது. சோசலிசம் தனது விதிகளைச் செயல்படுத்தாதபோது தோற்றுப் போகிறது என்று இந்தக் கம்யூனிசத் திருக்குறளை வி.பி.சிந்தன் சொன்னதாகச் சொன்னார். இப்படியோர் எளிய விளக்கம் பழுத்த ஞானத்தின் பரிசளிப்பு. அவரது பேச்சு “எந்த மேடையையும் கம்யூனிஸ்டுகள் தங்களுக்கான மேடையாக ஆக்கிக் கொள்வார்கள்” என்று தொகுப்பாளரைச் சொல்ல வைத்த நறுக்குத் தரித்த கச்சிதமான பேச்சு.

கல்யாண்ஜி ஒலிவாங்கியின் முன் வருகிறார். தொண்டையில் ஒரு கரகரப்பு தொற்றியிருந்தது மாதிரி தோன்றியது.  கவிதைக் கரகரப்பாயிருக்கலாம்.  வார்த்தைக்கு வார்த்தை கவிதை தத்தித் தத்தி நடந்தது. ஒரு முதியவள் பழைய துணியின் கிழிசலை ஊசியை நுழைத்து நூலை வாங்கி வாங்கி தைத்துக் கொண்டிருந்தது மாதிரிபட்டது.  அல்லது ஒரு சிறுமி பரத நாட்டியம் பயில்வது போல.  இசையின் ஞானம் இல்லாத என்னாலும் சுருதி சுத்தத்தை உணர முடிந்தது.

21 சுடலைமாடன் தெருவை ஜி 1 லாயிட்ஸ் காலனியில் தரிசிக்க முடிகிறது.  கல்யாண்ஜி இளைய பாரதியாகிறார்.  தி.க.சிவசங்கரன் தையல்நாயகியாகத் தோற்றம் தருகிறார். நெல்லை கல்யாண்ஜியின் தோட்டத்து முருங்கை சென்னை லாயிட்ஸ் காலனி ஜி 1 முற்றத்தில் செம்பருத்தியாய் அசைந்தாடுகிறது.  இளையபாரதி இல்லாத அன்றைய தினத்தில் அவரது அன்னை தையல்நாயகியின் தோல் சுருங்கிய முதுகுப்புற தரிசனம் வாய்க்கிறது. 

ஒரு சவரக் கத்தியால் செம்பருத்திக் குச்சிகளில் வெண்பூச்சி முட்டைகளைச் சீவிவிடுகிறார்.  கல்யாண்ஜிக்குக் காவேரியைத் தையல்நாயகி தன் கைகளால் கோதிவிடுகிற மாதிரி தெரிகிறது. இப்படியொரு ஏற்புரையைக் கல்யாண்ஜியின் கவிதையாய் நிகழ்த்திக் கொண்டிருக்கிறபோது என் கண்களுக்கு வேறொரு காட்சி விரிந்து கொண்டிருந்தது.  தையல்நாயகி அம்மாளின் கைகள் இளையபாரதியின் தலை முடியைத்தான் அளைந்து கொண்டிருந்தது.  இல்லையென்றால் இளையபாரதியின் கண்களில் கண்ணீர் கசிந்திருக்குமா?

கல்யாண்ஜியின் ஏற்புரையையும் மிஞ்சுகிற சக்தி இளைய பாரதியின் ஒரு சொட்டு கண்ணீர்த் துளிக்கு இருக்குமா?  அது தையல் நாயகி அம்மாவின் விரல்களில் பட்டுத் தெறித்ததல்லவா?

கருத்துகள்