பிடல் காஸ்ட்ரோவைப்
பின்தொடரும் குரல்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
ஒரு சதுரங்கத்தின்
சாயுங்காலம்
ராஜா ராணி
யானை குதிரை
சிப்பாய்
ஒட்டுமொத்தமாக
வெட்டப்படுகிற வேளையில்…
அசரீரியாய் ஒலிக்கிறோம்
ஆட்ட நாயக அகங்கார
ஓங்காரங்கள்.
நாளை வேறு விளையாட்டாகலாம்
அன்றிப் புதிய
சதுரங்கம் புகுத்தப்படலாம்
ஆடுபொருள்களே மாற்றப்படலாம்
சிலர் விளையாடத்
தகுதியற்றவர் என்று
விதிகள் வரலாம்
எதுவும் சாத்தியம்…எங்கள்
விளையாட்டை
யாரறிவார்?
கணிக்கமுடியாத
நிதியின் காட்டாற்று நடனத்தில்
எக்காளமிடும் எங்கள்
கடவுளின்முன் நிகழ்த்தப்படும்
எந்திர தந்திர
காலகால கணினி பூஜைகள்
மானுடம்…மானுடம்…மானுடம்…
யாருக்கு வேண்டும்
உங்கள்
திரிபுகளைச் சுமந்தலையும்
தேய்ந்த ரிகார்ட்
வாசகங்கள்?
ஒவ்வொரு வார்த்தையிலும்
எங்கள் ஊத்தை மெருகேறிய
பற்களின் எனாமல்கள்.
பொழுதுபோக்குப்
பொம்மலாட்டங்களில்
மரணக்கயிறுகளில்
தொங்கும்
மரப்பாச்சி பொம்மைகள்
மேடையில் நிகழ்த்தப்படும்
மரியாதைக்குரிய
ஓநாய்களின் கண்ணீர் நெசவுகளைக்
கண்டடையும் நுட்பம்
கைவரப்போவதில்லை
திரைமறைவில்
அகிம்சைக்கூடங்கள்
என்னும் புனைபெயரில் அலையும்
ஆட்டுமந்தைகளின்
பலிபீடங்கள்
பாட்டாளி சர்வாதிகாரம்
வார்த்தைகளை மட்டும்
பத்திரப் படுத்திக்கொள்ளுங்கள்
இனி முற்றும் முழுசுமாய்….எங்கள்
மூளைகளின் சர்வாதிகாரம்.
ஜனநாயகப்போர்வைகளால்
மூடப்பெறும்
சடலங்களின் நாற்றத்திற்கெனவே
பிரத்தியேகமாய்
நறுமண ஆலைகள்
கம்யூனிசக் காளைகளின்
சர்வதேசியத்தைக்
காயடிக்க
ஒவ்வொருத்தன் கையிலும்
உலகமயக்குறடு
புரட்சி கீதமிசைக்கும்
உங்கள்
புல்லாங்குழல்கள்
புசிக்கவே
காட்டில் உலவும்
கடும்பசியெடுத்த
கானக்குயில்கள்
மனிதர்களை வசியம்செய்யும்
எங்கள் பைடு பைப்பர்களின்
பின்
உங்கள் நடன மயக்க
எலிமந்தைகள்
ஜனநாயகம்
பிருஷ்டங்களால்
நகர்ந்து செல்லும்
பிரும்மாண்ட கேலி
ஜந்து என்பதைப்
புரிந்து கொள்ளவோ
புரியவைக்கவோமாட்டாத
புத்திஜீவிகளே
உங்களுக்குத் தெரியாமலே
உங்கள் லாயக் குதிரைகளின்
கால்களில்
செக்குமாட்டுக்
குளம்புகள்
குரலெடுத்துப்
பாடுங்கள்
கூவுங்கள்
கோஷித்துக் கொக்கரித்துக்
கொள்ளுங்கள்
காற்றில் நிகழும்
கவிதைகளின்
கரப்புணர்ச்சிகளால்
பூமியில் தோன்றப்போவதில்லை
புரட்சி சிசுக்கள்
பீனிக்ஸாய் இருக்கலாம்
உங்கள் பிடல்
நீரோக்களால் ஆன
தேசங்களுக்கெனவே
நவீனமாய்த் தயாரிக்கப்பட்டிருக்கும்
புனைபெயர்களாலான
நவ நவப்பிடில்கள்
பீனிக்ஸாய் இருக்கலாம்
உங்கள் பிடல்
வானம் முழுவதும்
அலைந்து திரியுமெங்கள்
அரூப ராட்சச வாள்கள்
பீனிக்ஸாய் இருக்கலாம்
உங்கள் பிடல்
இனி உருவாகவே முடியாது
நிகழ்கால மார்க்ஸ்,
மாவோ
நிகழ்கால லெனின்,
கிராம்ஸி
எங்களிடமோ
தத்துவத்தைக்கூட
தனிநபராக்கும்
தத்வமஸி
பீனிக்ஸாய் இருக்கலாம்
உங்கள் பிடல்
அறுநூற்று முப்பத்தெட்டு
முறை தோற்றிருக்கலாம்
அறுநூற்று முப்பத்தொன்பது
என்கிற எண்ணை
நீங்கள் அறிய மாட்டீர்கள்
நாங்கள் அறிவோம்….வோம்…வோம்…
கருத்துகள்
கருத்துரையிடுக