பெருஞ்சோகக் குமிழி
••••••••••••••••••••••••••••••
அகன்று பரந்து
விரிந்த
ஆலமரம் போன்ற வேம்பினடியில்
இலைகளையெல்லாம்
எண்ணிமுடித்து
அலைபேசி வழியே
சில பல சுயபடங்கள் சுட்டு முடித்து
நாலைந்து நாழிகைகளே
முடிந்திருக்கும்
அதற்குள்
எப்படியும் வந்துவிடுவான்
காதலனென
ஏதேதோ எண்ணிக்கிடந்தாள்.
பக்கத்தில் .ஓடியும்
ஓடாமலும் தேங்கிக் கிடந்தது
நகரின் பாவமென
நலிந்த நதி கூவம்
வழியெங்கும் பொருக்குப்
பொருக்காய்க்
காய்ந்து ஏடாகியிருந்தன
நாலைந்து நாட்களான
நரகல் கொத்துகள்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
ஈர மூத்திரத் திட்டுகள்
இதையெல்லாம் தாண்டி
எப்படியும் வந்துவிடுவான்
இருசக்கர எந்திரத்
தேரேறி எந்த நேரத்திலுமென்று
எதிர்பார்ப்பை
வழி நெடுக மலர்களென தூவி
இன்னுமவள் காத்திருந்தாள்.
வேலையில்லாக்காரணங்காட்டியும்
ஊதாரித்தனமும்
உல்லாசமுமாய் உலாவித்திரியும்
சோம்பல் கனவின்
சுகவாசியென
ஊரில் பலர் அலர்மொழி
உரைத்தது சொல்லியும்
எதிர்த்த வீட்டாருக்கென்ன
தெரியுமென எற்றி இகழ்ந்த
தடிப்பேறிய தனது
பேச்சுகளே
மரத்தைச் சுற்றிச்சுற்றியோடின
அவளின்
மரத்துப்போன மலரும்
நினைவுகளாய்…
மறக்க முடியாமல்
தவித்த அவளின் மனநிலை அளக்கக்
காதற்கணினி கண்டார்
யாருமிலர்
வேம்பினருகில்
கொய்யா மரத்தில்
அங்கங்கும் தொங்கின
அணில் கடித்த பழங்கள்
பார்க்க ஒண்ணாமல்
பார்வையைத் திருப்பிய
அதிர்ச்சி நிறைந்த
அந்தக் கணங்களில்தான்
பேரிரைச்சலுடன்
திடுமென வந்திறங்கினான்
பேதலித்து நின்றிருந்தாள்
பின்னால் ஒருத்தி
.
சட்டென்று…
யாருமற்ற தருணங்களில்
தனித்திருந்தவளை அணைத்து
முலைகளிலேற்றிய
முத்தங்களின் பித்தம்
காம்புகள் அரித்த
காமத்தின் காரம்
சட்டென்று… திரண்டது
கண்களின் ஓரம்..
நா.வே.அருள்
கருத்துகள்
கருத்துரையிடுக