பூமி 

அம்பேத்கர் அண்ணலுக்கு - சாதி 
      அநியாயம் நடந்த கதை 
இம்மண்ணில் கண்ணீரே - வடிஞ்சி 
     இல்லாமல் போன கதை 

வெளையாட்டு பருவத்துல - அண்ணனோட 
     வெளியூரு போகையிலே 
துளியூண்டு தண்ணி இல்லே - கட்டு 
     சோறு தின்ன வழியுமில்ல 

ஒழக்குத் தண்ணீரை - அங்க 
     ஒரு பயலும் கொடுக்கவில்ல 
கிழக்குச் சூரியனை - எந்தக் 
     கிணறும் ஏற்கவில்ல 

நாய்குடிக்கத்  தண்ணீரை -ஒரு 
     நாலு அண்டா வச்சவனோ 
தீப்பிடிச்ச நாக்கால - அவரைத் 
     துரத்தி அடிச்சுப்புட்டான் 

குட்டையில குடிப்பதற்கு - தண்ணி 
     குவிஞ்ச கையில் எடுக்கையிலே 
வெட்டை மிதந்து வரும் - பத்து 
     வெரலுக்கும் வாந்தி வரும் 

பள்ளியில சமமாக - வகுப்பில் 
     பக்கத்துல  குந்தினாக்கா 
பிள்ளை எல்லாம் தீட்டாச்சாம் - அவரைப் 
     பிரிச்சு வச்சாங்க 

தனி சாக்கில் குந்தவச்சி - ஒரு 
     தனி டம்ளர் ஒதுக்கிவச்சி 
அனிச்சமலர் அண்ணலினை  - எரி 
     அக்கினியில் போட்டாங்க 

வழக்கறிஞர் ஆன பின்னும்  - அவர் 
     வண்டியில போனாக்கா 
அழுக்கு வண்டிக்காரன் 
     அங்கங்கூட தீட்டாச்சாம் 

பூனை நாய்க்கெல்லாம் - ஒரு 
     புகலிடம் தந்தவங்க 
தானைத் தலைவனுக்கு - ஒரு 
     தாழ்வாரம் தரலீங்க 

திருடனைப்போல் ஒளிஞ்சிவாழ - அவரை 
     தெருதெருவா தொரத்தும் தேசம் 
தெருவுக்கொரு சிலையை வச்சி - செய்ஞ்ச 
     தப்புக்கிப்போ தெண் டனிடும் 

அண்ணலுக்கு நேர்ந்துப்புட்ட - அந்த 
     அவமானம் பார்த்தீங்களா 
சொன்ன கதை கேட்டீங்களா - நெஞ்சில் 
     சூடு கொஞ்சம் போட்டீங்களா 

ஊரு ஊரா நட்சத்திரம் - அது 
     ஒவ்வொண்ணும்  கண்சிமிட்டும் 
பேரு தாழ்ந்த நட்சத்திரம் - எதுவும் 
     பிறப்பாலே இல்லையடா 

பாப்பானை மேலவச்சி - ஒசந்த 
     பறையனையே கீழவச்சி 
தாப்பாள யாரு போட்டான் - நம்ம 
     தலைக்குள்ள கூறு போட்டான் 

மீண்டுவர முடியாத - வர்ண 
     கூண்டுக்குள்ள போட்டுவச்சான் 
ஆண்டவனை சாட்சிவச்சி - நம்ம 
     அறிவுக்குள்ள ஓட்டை வச்சான் 

ஆட்டுக்கா மாட்டுக்கா - நாம 
     அப்பனுக்குப் பொறந்தவங்க 
கூட்டு சதி செய்ஞ்சி - மனுவும் 
     குப்புறவே தள்ளிப்புட்டான் 

அடிமனசில் தீயிருக்கு - உள்ளே 
     ஆறாத ரணமிருக்கு 
வடியாத கோபத்தீ - நம்ம 
     வயித்துக்குள் குடியிருக்கு 

மண்ணைப் பெத்த அன்னைங்கடா - நாம 
     மரப்பாச்சி  பொம்மை இல்ல 
எந்திரிச்சு நின்னாக்கா - வேற 
     எவனுக்குமே பூமி இல்ல.

                               --நா. வே. அருள் 

******************************************************
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 
சைதை கிளை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி 
26.04.2013 அன்று நடத்திய நிகழ்வில் வாசித்த கவிதை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்