ஆறடி நிலம்
இயற்கை
தொட்டு எழுதிய தூரிகையில்
இத்தனைக் குருதியா?

கரையில்
உரசி உரசி உள்ளிழுத்துக்கொண்டது
நுரைத் துகிலா?
சவத் துணியா?

கரையில் ஒதுங்கிய சிப்பிகளைப் போல்
இறைந்து கிடந்தன மனித உடல்கள்...

இயற்கை குடிகாரனின்
மதுக்கோப்பையில் வழிந்த
மரண திரவமாய் சுனாமி...

விறைத்துப் போன பிணங்களின் இதயத்தில்
உறைந்துபோன கனவுகளை
அடையாளம் காணத்தான்
பீறிட்டு எழுந்ததோ எரிமலைக் குழம்பு?

இயற்கையின் பருவநிலைப் பிழையினும்
என்னால் சகிக்க முடியாதது
மனிதனின் சுயநல மொழி!

குட்டிப் பையனையும் குண்டுப் பையனையும்
இன்னும் இறக்கி விடவில்லை
ஹிரோஷிமா!
அதற்குள் ... பூகோள வெடிப்பாய் புகுஷிமா...

வெடித்த அணுவுலையின்
அடிவாரத்தில் அலறிய
சகோதரனின் குரல்
ஓசோனில் எதிரொலிக்கும்

கதிர் வீச்சிலிருந்து
கருணை கசியுமா எனக்
கடவுளிடம் பிரார்த்தனை செய்பவர்கள்
படிக்கட்டும் நிராதரவான இக் கவிதையை

பிணங்களின் மேலிருந்து
கவிதை எழுதுவதை விடவும்
பெரிய சோகம் வேறு என்ன இருந்துவிடப் போகிறது?

கையால் ஆகாதவனின்
கருணை மனுவே இக் கவிதை!

வெடித்துச் சிதறிய அணுவுலையில் இருந்து
எடுக்கப்பட்டவைதான்
இக் கவிதையின் வார்த்தைகள்!

இன்னும் எத்தனை ஹிபாகுஷ்கள்* வேண்டும்
இந்த ஏகாதிபத்தியச் சக்ரவர்த்திகளுக்கு?

மனிதனின் தலைகளில்
இறைவனின் பெயரை எழுதி வைத்தவர்களே
இனி ஒவ்வொரு மண்டையோட்டிலும்
காண முடியும்
அணுவுலை வியாபாரிகளின்
பேராசைப் பெருவெடிப்பு...

மனித குலப் பரப்பு முழுவதும்
அவர்களின் வணிக வளாகம்...

இயற்கையின் பருவநிலைப் பிழையினும்
என்னால் சகிக்க முடியாதது
மனிதனின் சுயநல மொழி!

பிரபஞ்சம் அவர்களுடையதெனத்
தொங்கும் பெயர்ப் பலகை!

"பாதுகாக்கப்பட்டக் குடிநீரில்" இருக்கும்
பன்னாட்டு அரசியல்
தனியாரின்
"பாதுகாப்பான அணுவுலையிலும்"

காற்றில், தண்ணீரில், காய்கறியில்,
கருவில், ஆன்மாவில் எனக்
கதிர் வீச்சு கலக்காத இடமில்லை

கதிர்வீச்சுப் பிணங்களைக்
கண்டெடுப்போம்...

கல்லறைக்குள்ளும் கதிர்வீச்சு நிகழ இருக்கும்
சடலங்களைச் சேகரிப்போம்

அவ்வளவு மோசமில்லை
அணுவுலை வியாபாரிகளின்
அதீத கருணை

அவர்களின் பொருளாதாரச் சிறப்பு மண்டலத்தில்
நிச்சயம் கிட்டும்
அணுக்கதிர் பிணங்களை
அடக்கம் செய்ய ஆறடி நிலம்.


--நா.வே. அருள்


* ஹிபாகுஷ்கள் - ஹிரோஷிமா, நாகசாகியில் கதிர்வீச்சுப் பாதிப்பிற்கு
உள்ளாகி வாழ்ந்து வருபவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்