தலையில்லாத மனிதனைச் சந்தித்ததிலிருந்து
அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறேன்.
தலையில்லாமல்
அவனது ஒவ்வொரு அசைவும்
சாத்தியமானது எப்படி?
அதுவும் நெரிசல் மிகுந்த நகரத்தில்
சாலை விபத்துகளிலிருந்து
தப்பித்துக் கொள்வது எப்படி?
அவனைப்பார்த்து
ஒருவருமே
துணுக்குறவில்லையா?
அவனைப் பார்த்ததைவிட
அவன் சொன்னதுதான் மேலும் என்னை
உலுக்கிவிட்டது.
கண்களே இல்லாத பார்வைகள் சாத்தியமாகிறபோது
தலையே இல்லாத மனிதனுக்கு
எப்படிச் சாத்தியமில்லை?
இன்னும் அவன் சொன்னான்
“நீங்கள் கண்ணாடியைப் போய்ப் பாருங்கள்”
“உங்கள் தலை எங்கிருக்கிறது என்று
எனக்குத் தெரியும்
ஆனால் சொன்னால் நீங்கள்
நம்ப மாட்டீர்கள்.”
“எனது கவலையே வேறு
தலையில்லாமல் வாழ்வதற்குப் பழக்கியாக வேண்டும்.
என்னுடைய குழந்தைகளுக்கு
விளையாடத் தர
இனி தலையில்லாத பொம்மைகளுக்கு
எங்கு போவேன்?”
சொன்னவன் இறங்கிப் போய்க்கொண்டேயிருந்தான்.
நான் கண்ணாடியைத் தேட ஆரம்பித்தேன்.
--நா.வே.அருள்
20.06.2021 காலை 6.00
கருத்துகள்
கருத்துரையிடுக