கவிச்
சக்கரவர்த்திகள்
**********************************
கவிதைக்குள்ளிருந்த
ரசாயனப்புட்டி
கவிழ்த்துக்கொள்ள
மாளிகை
தீப்பிடித்துக்கொண்டது
கவிஞர்கள்
இறந்துகிடந்தார்கள்
கவிதைகள்
ஐரோப்பியப்
புதைசேற்றில்
அமிழ்ந்து
கிடந்தன.
அப்போது
அலகுகளில்
மெகா
ஃபோனைச் செருகி
வனங்களில்
கீதங்களுடன் வந்தன
வானம்பாடிகள்.
இதயத்தில்
வாழ்ந்தவர்கள்
இரைப்பைகளின்
பாலைவனத்தில்
பனைமரங்கள்
நட்டவர்கள்
சிறகுகளால்
நடந்தவர்கள்
கால்களால்
பறந்தவர்கள்
காற்றில்
நீந்திய மீன்கள்
தலைமுறை
ரௌத்ரத்தின்
தாயாதிகள்
காளியின்
நாக்கில்
கவிதையை
எழுதியவர்கள்.
தலையணைக்குள்
மூளைகள்
முளைத்தன.
ஒருவன்
ஒவ்வொரு
புல்லுக்கும் பெயர் சூட்டியவன்
இன்னொருவன்
சகாராவைத்
தாண்டாத ஒட்டகம்
மற்றொருவன்
பால்வீதியின்
பித்தன்
ஒருவன்
கவிதையின்
நெற்றியில் ஆயுதம் வைத்தவன்
இன்னொருவன்
கவிதையின்
நெற்றியில் கனவுகள் பூசியவன்
மற்றொருவன்
கவிதையின்
நெற்றியில் பிறையைச் சூடியவன்
ஒருவன்
புழுதித்தடங்களில்
போர்வாள் செய்தவன்
இன்னொருவன்
அரச
விருந்தினில் நஞ்சுண்டு கிடந்தவன்
மற்றொருவன்
தலைவன்
மயக்கத்தில் தத்துவம் பயின்றவன்.
ஒருவன்
தீச்சட்டியில்
நெருப்புகள் நெய்தவன்
இன்னொருவன்
கனவுப்
புதர்களில் கானங்கள் பெய்தவன்.
மற்றொருவன்
தத்துவங்களில்
தவம் செய்தவன்
ஒருவன்
அட்சயப்பாத்திரத்தில்
பருக்கை
இன்னொருவன்
முத்துச்
சிப்பிக்குள் முத்து
மற்றொருவன்
கடுங்கோடையில்
வானவில்.
ஒருவனிடம்
மானுடத்தின்
திறவுகோல்
இன்னொருவனிடம்
வார்த்தைகளின்
மந்திரக்கோல்
மற்றொருவனிடம்
தத்துவத்தின்
துலாக்கோல்
மூவருமே
அலகில்லாப்
பறவைகளுக்காகப்
பாட்டெழுதியவர்கள்
அவர்கள்
பறந்த நிழல்
ருசியின்
காடுகள்
ஒன்று
அக்கினியாலும்
எரிமலைகளாலும் ஆனது
இன்னொன்று
தண்ணீராலும்
திமிங்கிலங்களாலும் ஆனது
மற்றொன்று
தத்துவங்களாலும்
தாவீதுகளாலும் ஆனது
இவர்களின்
நாக்குகள்
ஈரப்
புத்தகங்கள்
அவற்றில்
புதையுண்டுபோன
ஒரு
புராதன பிரதேசத்தில்தான்
தற்போது
நீங்களும்
நானும் வசித்துக்கொண்டிருக்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக