Madhusudan Rajkamal அவர்களின் பதிவு
******************************************************
பின்நவீனத்துவ பித்துக்குளிகளும் அர்த்தமற்ற பிழைப்புவாதிகளும்!
வரவர இந்த பின்நவீனத்துவ பித்துக்குளிகளின் அட்டகாசங்கள் சகிக்கக்கூடியதாக இல்லை.ஒரு பிரச்சனையை கோட்பாட்டு ரீதியாக விவாதிப்பதற்கு மறுத்து அல்லது திராணியற்று மார்க்சியம் சாதி குறித்து டீப்பா.... ஆய்வு செய்யவில்லை.அம்பேத்கர் அளவுக்கு நுனுக்கமாக ஆய்வுசெய்யவில்லை என்று கதா காலட்சேபம் செய்ய துவங்கிவிடுகிறார்கள்.சரி அண்ணல் அளவிற்கு சாதியின் பன்முகத்தை இடதுசாரிகள் பார்க்க துணியவில்லை அல்லது முரண்டுபிடிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.அதில் நமக்கு மாற்று கருத்தில்லை.ஆனாலும் அப்படி டீப்பா..... ஆய்வே செய்யவில்லை என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்.அது பச்சை பொய் என்று உங்களுக்கே தெரியாதா.பி.டி ரணதிவே,இ.எம்.எஸ்,இன்னும் முகம் அறியாத பல மார்க்சிய ஆய்வாளர்களின் சாதி குறித்த ஆய்வுகளை எல்லாம் அப்படியே நீங்க கரைச்சி குடிச்சிட்டீங்களா.இங்கு பிரச்சினை மார்க்சியமும் அம்பேத்கரும் சாதியை எப்படி அனுகினார்கள் என்பது தான் பிரதானமே தவிர ஆய்வே செய்யவில்லை என்பது சுத்த அபத்தம். விழித்துக்கொண்டே தூங்குபவனின் பகல் கனவுகளைப்போன்று புழுக்கமானது இந்தப்பொய் என்பதை ஊரறியும்.
இப்படி அம்பேத்கர் பக்கம் கையை காட்டிவிட்டு புடலங்காயை புடங்கவில்லை,புல்லை அருக்கவில்லை என்று சொல்லும் நீங்கள்.உங்களது அபாரமான குழப்பவாத பின்நவீனத்துவ தத்துவத்துவத்தின் வழி அப்படி எதைத்தான் இந்த சாதிய பிரச்சனைக்கு தீர்வாக முன்வைத்துவிட்டீர்கள் கொஞ்சம் சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறோம்.மார்க்சியம் 19நூற்றாண்டு தத்துவம் அதன் காலம் ஒழிந்து விட்டது.இது பின்நவீனத்துவ புடுங்கும் காலம் என்று பீற்றிக்கொள்ளும் நீங்கள் அல்லது உங்களது பின்னைய பின்னைய.... தத்துவம் எதைத்தான் தீர்வாக வைத்துவிட்டது.அதுசரியில்லை இதுசரியல்லை என்பதெல்லாம் சரி.எது சரி யென்று சொல்லவேண்டுமா இல்லையா.இப்படி அம்பேத்கர் பக்கம் கையை காட்டிவிட்டு ஒளிந்து கொள்வது தான் உங்களது பூர்வாங்க மரபுவழி தத்துவத்தும் சேவியத் வீழ்ச்சியில் இருந்து கற்றுக்கொடுத்த பாடமா.குறைந்தபட்சம் அம்பேத்கரிடத்தில் சாதிய பிரச்சனைக்கு தீர்க்கமான விடையுண்டு.ஆனால் உங்களது பின்நவீனத்துவத்தில் அப்படியென்ன புன்னாக்கு தான் இருக்கிறது.அதை சொல்லித்தான் தொலையுங்களேன்.ஊறும் உலகமும் தெரிந்துகொள்ளட்டும்.
மரபுவழி மார்க்சியர்கள் அதிலிருந்து விலகி அம்பேத்கர் பெரியார் என திசை திரும்பி விட்டார்களாம்.இது என்ன புதுக்கூத்தா இருக்குது.தத்துவத்திற்கும் நடைமுறைக்குமான பிரச்சனைப்பாடுகளில்,இந்திய மண்ணின் பிரத்தியேக உட்காரணிகளின் சிக்கல்களை கருத்தில் கொண்டு,இந்த சமூக வலைப்பின்னல்களில் ஊடுபாவ அம்பேத்கரும் பெரியாரும் தேவைப்படுகிறார்களே ஒழிய,அது மார்க்சியத்தின் போதாமையல்ல!அதற்கு வேறொரு பெயர் உண்டு.அது தான் 'மண்ணுக்கேற்ற மார்க்சியம்' என்கிற மெய்நிகர் சொல்லாடல்.
'வரலாற்றில் தனிநபர் பாத்திரம்' என்கிற ஆகச்சிறந்த வரலாற்று ஆய்வை முன்வைத்தவரும் சோவியத் ஒன்றியத்தின் முழுமுதல் மார்க்சிய அறிஞரான பிளஹொனவ் சாதிக்கமுடியாத சோவியத் புரட்சியை அவரைவிட மிகமிக இளையவரான லெனினால் ஏப்படி சாதித்து காட்டமுடிந்தது.அதன் பயனால் ஏன் உலகம் முழுக்க முதலாளித்துவ நாடுகளிலேயே கூட மக்கள் நல அரசுகள் உருவாக்கியது.அதற்கான நிர்பந்தம் சோவியத்தால் ஏன் நிகழ்ந்தது.பின்னாளில் ஹிட்லரே கூட தொழிலாளர் கட்சி என்று பெயர் மாற்றுவதற்கான சூழல் ஏன் ஏற்பட்டது.இது அத்தனைக்கும் லெனின் முன்னெடுத்த புரட்சிகர அரசின் செயல்பாடுகள் தான் காரணம்.அதற்கு அவர் மார்க்சியத்தை அனுகிய விதம் தான் காரணமே ஒழிய மற்றபடி அது பிளஹானவின் தவறு அல்ல.ஒரே விஷயத்தை இருவர் வேறு விதமாக அனுகுவது.அது எந்த அளவிற்க்கு குறிப்பிட்ட அந்த சமூகச்சூழலோடு பொருந்திவரும் என விரிவான கள அனுபவத்தின் வழி ஆய்வுசெய்வது என நீளும்.
அந்தந்த சூழலுக்கு ஏற்றார் போல் பொருத்துவதில் தான் சிக்கல்கள் தொடர்கிறதே தவிர அது பொருந்தாது தோற்றுவிட்டது என்பதல்ல.பின்னாட்களில் மூன்றாம் உலக நாடுகளின் விடுதலைக்கு லெனின் முன்னெடுத்த,அவர் அனுகிய அந்த பிரத்தியேகமான மார்க்சிய செயல் முறை தான் வழிவகுத்ததே அன்றி மற்றபடி கோர் மார்க்சியத்தால் அல்ல.மாவோ உட்பட அந்தந்த சமூகங்களின் சில புராதன கூறுகளின் முற்போக்கு அம்சங்களை அதன் சாதகமான சாத்தியப்பாடுகளை உள்வாங்கித்தான் சீனத்தில் புரட்சியை சாதித்தார்கள்.அப்படித்தான் வியட்நாமிலும் கியூபா,அர்ஜென்டினா,பொலிவியா போன்ற லத்தின் அமெரிக்க நாடுகளில் புரட்சிகர அரசுகளை அமைக்க முடிந்தது.அது அவர்கள் அம்மண்ணின் பிரத்தியேக கூறுகளை உள்வாங்கியதன் விளைவு.ஆனால் இந்தியாவில் அதில் இன்னும் சிக்கல் தொடரவே செய்கிறது.உன் உழைப்பு சுரண்டப்படுகிறது.உனக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது என்று உண்மையை கூறினால் முன்வராதவன் சாதி,மதம்,இனம்,மொழி என்றால் அத்தனை பாகுபாடுகளையும் களைந்துவிட்டு ஒன்றுபடுகிறவன்.உரிமைக்கு ஒன்றுபடுவதில்லை.சரி இனமாக ஒன்றுபடுகிறான் என்றால் அங்கேயும் தானே சாதி துரித்துக்கொண்டு நிர்க்கிறது.ஈழத்தமிழர்கள் தங்களோடு சாதியையும் தானே உலகப்பரப்பிற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.ஆக ஒற்றுமை என்பது இடதுசாரி தத்துவத்தால் தான் சாத்தியப்படும்.அங்கு தான் அனைவரும் வேறுபாடுகள் களைந்து ஒன்றினைய முடியும்.இந்த தளம் தான் ஒடுக்குமுறைகளை ஒழித்துக்கட்டும்.அது மற்ற கருத்தியல்களால் முக்கினாலும் முடியாது என்பதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள்.சமீபத்தில் ஒரு தலித் தலைவர் எழுதிய புத்தகத்தில் சொல்கிறார்.இன ஒற்றுமை என்று வருகிறபோது சாதிய வேற்றுமைகள் அல்லது சாதி எதிர்ப்பு போராட்டங்கள் பின்னுக்கு சென்றுவிடுமாம்.அப்படியானால் தமிழ்தேசியத்தில் சாதி ஆதிக்கத்திற்கு இடம் மில்லை என்று சொல்கிறாரா.ஒருவேலை அவர் சொல்வதைப்போல் தமிழ்தேசிய வெற்றி சாத்தியமான பிறகு சாதிவேற்றுமை இருக்காதா அல்ல அப்புறமாக அடித்துக்கொள்ளலாம் என்கிறாரா.தமிழ்தேசியம் பேசுவோர்களில் எத்தனைபேர் சாதிமறுப்பு திருமணம் செய்துகொள்கிறார்கள்.அதை எந்தளவிற்கு அவர்களது இயக்கம் முன்னெடுக்கிறது அல்லது ஊக்குவிக்கிறது.எல்லாம் பேசுவது ஒன்று செய்வது வேறொன்று தானே.
ஆனால் மார்க்சிய இயக்கங்கள் சாதிக்காத சாதி மறுப்பு திருமணங்களை உங்களால் என்னிப்பார்க்க முடியுமா அல்லது மார்க்சிய இயக்கம் கையாண்ட எத்தனையெத்தனை சமூக பொருளாதார பிரச்சனைகளை திராவிட இயக்கங்களும் அம்பேத்கரிய இயக்கங்களும் கையாண்டிருக்கிறது.இதுவரை அவர்கள் அதற்கு முக்கியத்துவமாவது கொடுத்திருக்கிறார்களா.அல்லது எதைத்தான் உருப்படியாக சாதித்திருக்கிறார்கள்.ஒரு பட்டியல் கொடுங்களேன் பார்ப்போம்.மார்க்சிய இயக்கங்கள் 90க்கு முன்பும் சரி அடையாள அரசியலின் எழுச்சிக்கு பிறகாக இன்றுவரையிலும் சரி அவை கண்ட களம் எத்தனையெத்தனை.மண்டை உடைப்புகள், துப்பாக்கி சூடுகள்,சிறைவாசங்கள்,உயிர் இழப்புகள்,ஆலய நுழைவுப் போராட்டங்கள்,ஆவணக் கொலை பிரச்சனைகள்,ஆதிக்க சாதிகளின் ஆணவத்திமிருக்கு எதிராக எத்தனை எத்தனை களங்கள் இன்றைய பஞ்சமி நில மீட்புவரை எத்தனை நீண்ட பெரிய வரலாறு அது.சுதந்திர போராட்ட காலத்திலேயே தீண்டாமை ஒளிப்பு போராட்டத்தையும் இனைத்து களம் கண்டவர்கள் இடதுசாரிகள்.இடதுசாரி இயக்கங்கள் முன்னெடுத்த இந்த நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் பத்து சதவீதம் கூட தேராத திராவிட இயக்கங்களையும் அம்பேத்கரிய இயக்கங்களையும் கைகாட்டுவது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா.
அம்பேத்கரையும் பெரியாரையும் உட்செறித்துக்கொள்வதில் இடதுசாரி இயக்கங்களுக்கு சில விதண்டாவாதங்கள் இருக்கத்தான் செய்கிறது.அது தத்துவார்த்த பிரச்சனையே தவிர புறக்கணிப்பு அல்ல.என்றாலும் 90களுக்கு பிறகாக கணிசமான அளவில் இன்று அவர்களை பற்றி பேசவும் எழுதவும் போராட்ட முறைகளில் கையாளவும் துவங்கி அனேகமாக கால்நூற்றாண்டை நெருங்கி விட்டது.அப்படி இருந்தும் இங்கே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக எந்த சமூக மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை ஏன்.இது மார்க்சியத்தின் கோளாறா அல்லது பெரியாரிய அம்பேத்கரியத்தின் கோளாறா.இங்கு தொடரும் சிக்கல் அமல்படுத்துவதில் இருக்கிறதே ஒழிய கோட்பாடுகளில் இல்லை.சமையலைப்போல் இந்திய சமூக பிரச்சனைக்கான தீர்வு சூடாக அடுத்த கணமே கையில் இருக்கவேண்டும் என்றால் அது உங்கள் அறிவு முதிர்ச்சியின்மையையும் வாசிப்பு போதாமையுமே புலப்படுத்துகிறது.வாசிப்பு என்பது நேர்கோட்டில் மட்டும் புரிந்துகொள்வதல்ல.அல்லது கோட்டேஷன்களில் முடிந்துவிடுவதல்ல.அது எழுத்தை கடந்து சமூக அசைவியக்கத்தோடு பொருந்தி நிற்பது.இடத்திற்கும் கால மாற்றத்திற்கும் ஏற்றாற்போல் பொருத்திப்பார்த்து புரிந்துகொள்வது.ஒரு வகையான வாசிப்பனுபவமே சரியானது என்று முடிவிற்கு வந்துவிடுவது சமுக சிக்கலில் தான் கொண்டு போய் நிருத்தம்.பின்பு அது அஜீரணமாக இப்படித்தான் ஏடாகூடமான வாதங்களாக வெளிப்படும்.
சாதி ஒழிப்பு என்பது தலித்துகளே கூடி தலித்துகளே செய்துகொள்ளும் புத்தபூர்ணிமா நிகழ்ச்சி அல்ல.அது சமூகத்தின் மேல்கீழ் என அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து முன்னெடுக்கவேண்டிய நீண்ட நெடிய போராட்ட வடிவம்.அதைத்தான் அம்பேத்கரும் சொல்கிறார்.மார்க்சியமும் செல்கிறது.அது மருந்தல்ல உட்கொண்ட உடனே சரியாவதற்கு. அது மனித சிந்தனைகளில் செயல்களில் நீக்கமற நிறைந்து கிடக்கிறது.முற்போக்கு பேசுபவர்களே கூட சில நேரங்களில் சாதிய வாதத்திற்கு ஆளாகக்கூடிய அபாயங்கள் இருக்கிறது.அது நாளடைவில் சுய பரிசோதனையின் வழியாகவும் சாதிமறுப்பு திருமணங்களின் வழியாகவும் தான் அதன் வீரியத்தை குறைக்க முடியுமே தவிர ஒழிக்க முடியாது.இது பௌதக மாற்றமாய் பற்றிப்படரும் போது அதன் பயண் நம்காலத்தில் சாத்தியமாகவில்லை என்றாலும் அடுத்த தலைமுறையின் காலத்திலேனும் சாத்தியப்படும்.இந்த லாக்டவுன் காலத்திலேயே 50க்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகள் இந்தியா முழுக்க நடந்திருக்கிறது.தமிழகத்தில் மட்டும் எனக்கு தெரிந்து 3கொலைகள்.எனவே ஹைடோஸ் மருந்து மாதிரி சாதியை ஒழிக்கவெல்லம் முடியாது.கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதன் வீரியத்தை குறைக்க முடியும் அதைத்தான் சாதி ஒழிப்பு தீர்வாக மார்க்சியம் முன்வைக்கிறது.
இடதுசாரி இயக்கங்களுக்கு வகுப்பெடுக்க வருவதற்கு முன்னால் சமூக அசைவியக்கத்தை புரிந்து கொண்டு விவாதிக்க வாருங்கள்.உங்களது பிழைப்பு வாதத்திற்காக மார்க்சியத்தின் மீது அவதூறு பொழியாதீர்கள். மார்க்சியம் மானுடத்தின் மனசாட்சி. காலகாலத்திற்கும் தன்னை தகவமைத்துக்கொள்ளும் சமூகவிஞ்ஞானம்.ஆயிரமாயிரம் கருத்துகள் தோன்றி மறைந்தாலும் மார்க்சியமே என்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கும் அருமருந்து.இந்த கொரோனா பேரிழப்புகளின் பொரும்விளைவுக்கு பின்னால் பொதுசுகாதாரமும் உற்பத்தியும் சோசலிச மயமாக்கப்படவேண்டும் இல்லையென்றால் உலகம் பெரும் இழப்புகளை சந்திக்கவேண்டி இருக்கும் என மேலைய ஆய்வாளர்கள் டேவிட் ஹார்வி துவங்கி இந்தியாவின் பிரபாத்பட்நாயக் வரையிலான உலக பொருளாதார அறிஞர்கள் எல்லாம் சோசலிச மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் மார்க்சியம் செத்துப்போச்சு,கவுந்துபோச்சின்னு உளறிக்கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது.உலகமே இதுவரை போற்றிப் புகழ்ந்த முதலாளித்து கட்டமைப்புகள் கொண்ட நாடுகள் எல்லாம் பேரிடரை எதிர்கொள்ள திராணியற்று மார்க்ஸ் சொன்னதைப்போல் தன் மரணத்துக்கான சவக்குழியை தானே தோண்டிக்கொண்டிருக்கும் கண்கூடான காலத்திலும் எக்ஸ்பெயரி ஆயிடுச்சுன்னு கதவிடுறவங்கள என்னதான் பன்றது.
ஊருக்கு போக வழி கேட்பவர்களிடம் பாண்டிச்சேரியில் சரக்கு நல்லா இருக்குமாமே என்று சிலாகிப்பவர்களை என்னதான் செய்யமுடியும்.பின்நவீனத்துவம் இலக்கியத்திற்கு வேண்டுமானால் அழகியல் கூறுகளை அளிக்கலாமே தவிர அரசியலுக்கும் சமூக விடுதலைக்கும் அதனால் ஒரு சிகையை கூட பிடுங்கி போட முடியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக