வானம்
நிலா நட்சத்திரங்கள்
•••••••••••••••••••••••••••••••••••••••
எழுத்து
வேட்டையில் பேசும் புதிய சக்தி
**************************************************************
பேசும்
புதிய சக்தி சமீப காலமாக மிகவும் முக்கியத்துவம் அடைந்து வருவதை உணர முடிகிறது. பல முக்கியமான இலக்கிய ஆளுமைகள் அதில் தங்கள் பங்களிப்பைச்
செய்து வருகின்றனர். கலை விமர்சகர் இந்திரன்,
மூத்த இலக்கிய ஆளுமை கவிஞர் சிற்பி தொடங்கி சா.க என்று செல்லமாக அழைக்கப்படும் சா.கந்தசாமி
வரையிலும் அதில் படைப்புப் பங்களிப்புச் செய்து இருக்கின்றனர். இவர்கள் எழுதுவதாலேயே ஒரு பத்திரிகை முக்கியமானதாகி
விடும் என்கிற அர்த்தமில்லை. பலப்பல புதிய
எழுத்தாளர்களையும் இனங்கண்டு அவர்களுக்குத் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தித் தருவதில்
இந்த இதழ் வெற்றி பெற்று வருகிறது.
தமிழ்
இலக்கிய உலகத்திற்கு மறதி அதிகம். அல்லது கவனிக்க
வேண்டியவர்களைக் கவனிக்காமல் அல்லது கவனிக்க விரும்பாமல் பராக்குப் பார்த்துச் செல்கிற
குணம் உண்டு. இல்லையெனில், தமது மேட்டிமை இலக்கிய
பந்தாவிற்கு இதுவெல்லாம் ஓர் எழுத்தா என்கிற இளக்காரமுண்டு. அந்த வகையில் கலைமகள் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில்
தொடர்ந்து மூன்றாண்டுகள் பரிசு பெற்ற சிறுகதை எழுத்தாளர் ராஜகுரு அவர்களையும் பெரிய
அளவில் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால்
அவரது மகன் ஜெயகாந்தன் அவர்கள் பேசும் புதிய சக்தியில் தனது தந்தையாரின் நினைவாகத்
தொடர்ந்து நினைவுச் சிறுகதைப் போட்டி நடத்தி வருகிறார். தந்தை கொடுத்துச் சென்ற சொத்து இருக்கிறதோ இல்லையோ,
இருக்கிற சொத்தை இலக்கியத்தின் பேரால் இழக்கவும் தயாராகிவிட்ட ஒரு தனயனைப் பார்க்க
முடிகிறது.
இதுவரையிலும்
இவருடனான எனது உரையாடல், நான் அனுப்பிய கவிதை பற்றியதாகச் சுருங்கி இருந்தாலும், இலக்கிய
உலகில் பேசும் புதிய சக்தி உண்மையிலேயே தமிழக எழுத்து உலகில் தடம் பதிக்க வேண்டும்
என்கிற கனவு அவரது பேச்சில் பிடிபடும். இந்தப்
பத்திரிகையை இவர் நடத்துகிற விதம் எனக்கு மறைந்த இலக்கிய ஆளுமை கோமல் சுவாமிநாதனைத்தான்
நினைவுபடுத்தும். பல தளங்களுக்கு ஈடு கொடுக்கிற விதமாக பலரது கருத்துகளுக்கும் இடம்
தருவதாக ஒரு பரந்த மேடையாகத்தான் இந்த இதழைப் பார்க்கிறேன். பலரது படைப்பாக்கங்களின் தொட்டிலாக இருந்தாலும்
எழுத்துகளுக்கு ஊடாக ஒரு தாயின் மனசாட்சி துடித்துக் கொண்டே இருக்கிறது.
நம்பிக்கை
ஏற்படுத்தும் பல நல்ல இளங் கவிஞர்களின், எழுத்தாளர்களின் படைப்புக் களமாகி வருகிறது
பேசும் புதிய சக்தி. பேசும் புதிய சக்தி மட்டுமல்ல. பேசப்படும் புதிய சக்தியாகவும்தான் தோன்றுகிறது
எனக்கு.
நா.வே.அருள்
கருத்துகள்
கருத்துரையிடுக