ஆசிரியர்கள் இணைந்த போராட்டம் குறித்து சில பரிசீலனைகளும் யோசனைகளும்
********************************************************************
இந்தப் போராட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது என்றாலும் ஒருவிதத்தில் வெற்றியில் முடிந்திருக்கிறது என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது. அரசை வழிநடத்துபவர்கள் யாவர் எனக் கடைநிலை வரையிலும் ஆதாரபூர்வமாகத் தெரிவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எப்படி துக்ளக் குருமூர்த்தி முதல் கிரிஜா வைத்தியநாதன் வரையிலும் ஒரு மகத்தான போராட்டத்தை முறியடிக்கத் துரோகப் பங்காற்றினார்கள் என்பதை அனைத்து ஆசிரியர்களும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். சூழ்ச்சிகளின் ஊற்றுக்கண்கள் எங்கெல்லாம் கசிந்துகொண்டிருக்கின்றன என்பவற்றை மக்கள் கண்டுகொள்ள வேண்டிய காலமாக விரைவில் மாற வேண்டும். ஆசிரியர்கள் எவற்றையெல்லாம் கோரிக்கைகளாக வைத்தார்களோ அந்தத் திசைவழி மக்களுக்குப் போய்ச் சேராமல் பள்ளிகளுக்கு அரசு செய்கிற சீர்கேடுகளை எதிர்த்துப் போராடினார்களா என்று சன் நியூஸ் உள்பட போராட்டத்தை சுயநலக் கோரிக்கைகளுக்கானவை என்று திசைமாற்றி விட்டுவிட்டார்கள். ஒரு மகத்தான போராட்டத்துக்குத் துரோகம் செய்த யாரையும் எதிர்கால தொழிலாள உலகம் மன்னிக்காது. ஊடகங்களின் கார்ப்பரேட் தனம் வெட்ட வெளிச்சத்துக்கு எப்போதோ வெளியில் வந்துவிட்டது. இன்னும் மக்களுக்குச் சரியான விதத்தில் ஊடக கார்ப்பரேட் தனங்களைத் தோலுரித்துக் காட்டியாக வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஓர் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம் பல்வேறு கோரிக்கைகளுக்கு நடுவில் ஊதிய உயர்வுக்காகப் போராடுகிறபோது வேலையில்லாதவர்களைப் பற்றியும், கான்டிராக்ட் ஊழியர்கள் நிலை பற்றியும் பேசுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பயன்படுத்தியும், கான்ட்ராக்ட் ஊழியத்தைச் செயல்படுத்திவரும் கார்ப்பரேட் சதியின் காரணமாகவும் அரசு செய்கிற துரோகத்துக்குப் பலியாடுகள் நியாயமான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகப் போராடும் தொழிலாள வர்க்கம்தானா? இதைவிட ஊடகங்கள் வேறுவிதமாகப் போராட்டங்களைக் கொச்சைப் படுத்தமுடியாது.
இந்தப் போராட்டத்தின் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென்ன என்று பார்க்க வேண்டும். போராட்டங்களை மக்களுக்கு எதிராகத் திசைதிருப்பிவிடுகிற சூழ்ச்சிகளை எப்படி அம்பலப்படுத்த முடியும் என்று யோசிக்க வேண்டும். மாணவர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் ஆசிரியர்கள் என்று தேர்வுகாலக் காரணங்கள் காட்டுகிறபோது நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று யோசிக்க வேண்டும். போராட்ட முறைகளை மாற்றியோசிக்க வேண்டும். சங்கங்களின் ஒற்றுமையைக் கட்டி குறிப்பிட்டவர்கள்தாம் நேர்காணல்களில் பங்குபெற வேண்டும் என்று வரையறுத்துச் செயல்படுத்த வேண்டும். ஒட்டு மொத்த கோரிக்கைகளின் கன பரிமாணத்தைச் சுருக்கிவிட்டு ஏதோ ஊதிய உயர்வுக்கு மட்டும் என்று தனிமைப்படுத்தப் படுவதை எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்க வேண்டும். இன்னும்... இன்னும்...
தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்காகப் போராட வேண்டும் என்கிற கோரிக்கைகள் இருந்தால் அதையும் இந்த அரசும் ஊடகங்களும் எப்படித் திசை திருப்புவார்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களைக் கம்யூனிசத் தொழிற்சங்கங்கள்தாம் தூண்டிவிடுகின்றன என்று அவதூறுகளைக் கிளப்பிவிட எவ்வளவு நேரம் ஆகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக தனியார் பள்ளிகள் எப்படி மக்களின் கொள்ளைக் கூடாரங்களாக மாறிவிட்டன என்பதை மக்களுக்குத் தோலுரித்துக் காட்ட வேண்டும். அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஆசிரியர் பெற்றோர் சங்கங்கள் கவனஈர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். (போராட்ட வடிவங்களில் பெரும் மாறுதல்கள் செய்ய வேண்டும் என்பதில் வெகு கவனமாக இருக்க வேண்டும்). கட்டணமில்லா, அருகமைப் பள்ளிகளான பொதுப் பள்ளிகளுக்கான போராட்டமாக மக்களை இணைத்துக்கொண்டு போராட வேண்டும். இந்தப் போராட்டங்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் தங்கள் முழு ஆதரவைத் தொடர்ந்து தர வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி இரு விருப்ப மொழிப் பாடங்களாகக் கொண்ட தாய்மொழி வழிப் பொதுப் பள்ளிக்கான திட்டத்தை அரசியல் வாக்குறுதிகளாகக் கொண்ட அரசியல் கட்சிகளை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இடது சாரி அரசியலைக் கூர்மையான பார்வையோடு கொண்டுசெல்லும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணியை அமைத்துள்ளதுபோல பொதுப்பள்ளி முன்னணி ஒன்றை அமைக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக நல்லாசிரியர்களை வளர்த்தெடுப்பதில் கறாரான காந்தியத்தனம் வேண்டும். ஆசிரியர் சங்கங்கள், மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைப்பு அமைப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும். அறம் சார்ந்த ஒழுக்கங்களின் உதாரணங்களாக ஒவ்வொரு ஆசிரியரும் திகழ வேண்டும் என்பதில் நாம் உண்மையான அக்கறை காட்ட வேண்டும்.
இப்படியெல்லாம் செய்தால்தான் ஏதோ இந்த சமூகத்திற்காக நாமும் கொஞ்சம் யோசித்திருக்கிறோம் என்று அர்த்தப்படும். இல்லையெனில் நமது முயற்சிகளும் முன்னெடுப்புகளும் பத்தோடு பதினொன்றுதான். இல்லையெனில் மெகா சீரியல்கள் பார்த்துக்கொண்டு வீட்டோடு இருந்துவிடலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்