ஓர் எழுத்தாளனை நாம் ஏன் கொண்டாடுகிறோம்?  அந்த எழுத்தாளன் எப்படிப் பட்டவனாக இருப்பதால் கொண்டாடுகிறோம்?  அவனிடம் நமது கனவுகளை ஏற்றி வைத்துவிடுகிறோம். நமது துயரங்களை அவன் சுமக்க முடியாமல் சுமந்து செல்கிறான். அவன் நாம் நடந்துசெல்லும் வழித்தடத்தை – ஒற்றையடிப்பாதையை – உருவாக்கித் தருகிறான்.  வழியில் நிழல் தரும் மரங்களை வளர்த்துச் சுனைகள் எங்கிருக்கின்றன என்று சொல்லித் தருகிறான். தோழர் எஸ்.ஏ.பெருமாளின் வார்த்தைகளில் எழுத்தாளர் சமூகத்தின் பெரிய வாத்தியார்.  அவருக்குச் சொல்லிக் கொடுக்க இந்த உலகில் ஏராளம் இருக்கின்றன.  சரியான ஆசிரியர் யார் என்று கண்டுபிடிப்பதில் நமக்குத்தான் இன்று ஏராளமான குழப்பங்கள்.  குழப்பங்கள் வேண்டுமென்றே உருவாக்கப்படுகின்றன. இதையெல்லாம் மீறி மக்கு மாணவர்களையும் ஆசிரியர் சரியாகவே அடையாளம் கண்டுகொள்வார்.  அப்படிப்பட்ட ஒருவர்தான் எழுத்தாளர் பிரபஞ்சன்.

காயங்கள் எப்படி ஏற்பட்டதென்பதையும் அறியாமல் கசிந்துகொண்டிருக்கும் குருதியைத் துடைத்துக்கொண்டே இருக்கும் நோயாளிகளுக்கு எழுத்தாளன்தான் காயங்களின் ரிஷிமூலத்தை ஆராய்ந்து காயங்களிலிருந்து எப்படித் தப்பிப்பது என்கிற சூட்சுமத்தையும் சொல்லித் தருகிறான்.

பாரதிதாசனால் எப்போதும் விட்டுத் தரப்படாதவரும், ஐயர் ஐயர் என்று ஆசையோடு உச்சரிக்கப்பட்டவருமான பாரதியார்தான் அவர் காலத்தில் வேறெவரையும் விட சமூகத்தை ஊடுருவிப் பார்த்தவர். காயங்கள் அகற்றும் மாயங்கள் சொன்னவர்

//கஞ்சி குடிப்பதற்கிலார் – அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்//  என்றும்
//எண்ணிலா நோயுடையார் – இவர்
எழுந்து நடப்பதற்கு வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள்போல் – பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள்வார்//
பாரதியும் பாரதிதாசனும் கவிதையில் மாயங்கள் செய்தபிறகுதான் புதுவையிலிருந்து  பிரபஞ்சன் உரைநடையில் சில மாயங்கள் செய்திருக்கிறார். கவிதையின் வழியே இலக்கியப் பிரவேசம் செய்திருந்தாலும் அவருக்குப் பிடித்தது சிறுகதை இலக்கியம் என்பார்.

வானம் வசப்படும்  புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது.  மானுடம் வெல்லும் என்னும் மகத்தான படைப்பையும் அவர் வழங்கியிருக்கிறார்.  250 சிறுகதைகள், 300 கட்டுரைகள், 10 புதினங்கள், 2 நாடகங்கள் என்று வெறும் எண்ணிக்கையில் அடங்கிவிடுவதல்ல அவரது படைப்புகள்.  மானுடப் படைப்புகளின் மனங்களில் ஊடுருவி செயற்படும் அவற்றின் சக்திக்கு ஈடு இணை எதுவுமேயில்லை. 

நாம் போகவேண்டிய தூரத்திற்கு அவரது படைப்புத் துணிச்சல்தான் நமக்குப் படைக்கலன். சூரியனைப் பொடித்துப்போட்ட எழுத்துகளை அளித்தவனை அவன் வார்த்தைகளாலேயே நினைவு கூர்வோம்…..
//உங்களைக் குற்றம் சொல்வது என் நோக்கம் அல்லமாறாக, உங்களைச் சிந்திக்கச் செய்வதே என் நோக்கம்என் பணிஎன் எழுத்து. என் வியர்வைஎன் இலட்சியம்என் கதைகள் உங்களின் இன்றைய ஸ்திதியைக் கேள்விக்குள்ளாக்குவதும், உங்களைச் சங்கடப் படுத்துவதும் நோக்கமாகக் கொண்டவைஅடைப்படையில் நான் ஒரு கலகக்காரன்சிறுமைத் தனங்களுடன் கை கோர்க்க முடியாத கலகக்காரன்உங்கள் பார்வையில் நான் பௌதிய சுகங்களை இழந்தவன், இருக்கட்டும்அதனால் எனக்கு ஒரு கேடும் இல்லைஎனக்குள் நான் வாழும் வாழ்வு மிக மேன்மையானது என்று எனக்குத் தெரியும்உங்கள் வாழ்வு மேம்பாடடைதல் மட்டுமே என்குறி.//
                                                                           -- பிரபஞ்சன்
ஒரு மனுஷிசிறுகதைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்