ஆர்.கே நகர் இடைத் தேர்தல் வாக்காளர்களுக்கு அன்புத் தமிழன் எழுதும் அரசியல் கடிதம்.

நீங்கள் பணம் வாங்கி ஓட்டுப்போட்டதாக ஒவ்வொருவரும் பேசிக்கொள்கிறார்கள். யார் வாங்கினீர்கள் யார் வாங்கவில்லை என்பது உங்கள் மனசாட்சிக்குத்தான் வெளிச்சம்.

இருக்கலாம். ஓரிரண்டு நாட்களுக்காவது இலவசமாய்ச் சித்தித்த புது குக்கரில் சமையல் செய்து பார்க்கலாம் என்று உங்கள் பசி உங்கள் கௌவரவத்தைச் சமாதானப் படுத்தியிருக்கலாம்.  எப்படியெல்லாம் சம்பாதித்த பணம் மக்களுக்கு வந்தாலென்ன என்ற எண்ணமாகவும் இருக்கலாம். பொதுவாகவே வாக்குச்சாவடி முகவர்களுக்குக் கொடுக்கிறபோது நமக்குக் கொடுத்தாலென்ன என்று நீங்கள் நமத்துப்போகத் தொடங்கிய தீக்குச்சிகளாகிவிட்டீர்கள்.  எதுவானாலும் சரி, பணம் வாங்குகிற எண்ணம் சரியானதா?  ஊழலின் ஊற்றுக்கண் உங்களிடமிருந்து தொடங்க நீங்கள் அனுமதிக்கிறீர்களா?  இலக்கு எவ்வளவு நியாயமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு வழிமுறையும் நேர்மையானதாக இருக்கவேண்டுமென்று மகாத்மா காந்தியின் வார்த்தைகள் கொஞ்சம்கூட உங்களைச் சலனப்படுத்தவில்லையா?

பணம் வாங்கி வாக்களிக்கிற ஒரு காரணத்தாலேயே உங்களின் கூர்த்த மதி வேறுமாதிரி புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறதே அது புரியவில்லையா? 

மத்திய அரசின் கணினி எலியாகவே மாறிப்போன மாநில அரசின் மீது உங்களுக்கு இருந்த கோபம் இந்தத் தேர்தல் என்று எல்லோரும் புரிந்துகொண்டார்களா?

கொஞ்ச நாட்களுக்கு முன் கலைஞர் கைகளின் மீது தனது கைகளை வைத்துத் தடவிவிட்டுப்போன பிரதமர் செயலைக் கண்ட கோபத்தினாலும் திமுகவின் வாக்குகள் சரிந்ததெனப் புரிந்துகொண்டார்களா?

மக்கள்நலக் கூட்டணி என்று ஒரு மாபெரும் மெகா கூட்டணியை அமைத்தவர்களும் அமைப்பாளரோடு சேர்ந்து கொஞ்சம் கூட பொறுத்திருந்து கூட்டணியைப் பலப்படுத்தாமல் திமுக வுடன் மேடையேறுவதை – அதுவும் கலைஞரைப் பிரதமர் சந்தித்துவிட்டுச் சென்ற சூழலில் -  நம்பகத்தன்மையின் துரோகம் என்பதை ஆணித்தரமாகத் தெரிவிக்க முடிந்ததா?  இதற்கு முன்பு நடந்த தேர்தலிலேயே நம்பகத்தன்மை போய்விட்டதென்பதைத் தெரிவிக்க இருந்த வாய்ப்பை இப்படி உங்களை நீங்களே விற்றுக்கொண்டதன் மூலம் இழந்து விட்டீர்கள் என்பதை இப்போதேனும் புரிந்துகொள்வீர்களா?

தில்லித் தலைநகரில் விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் கண்களில் கட்டிவைத்தக் கறுப்புத் துணியாக ஒரு மாநில அரசா?  மத்திய அரசின் ஊதுகுழலா? அனிதாவின் மரணம் வெறும் அஞ்சலியோடு முடிந்துபோனதற்கு யார் காரணம்?  ஒக்கிப் புயலில் குமுறிக் கொண்டிருந்தவனின் குமரி ரத்த விசிறலில் ஆர் கே நகரிலும் ஒரு துளி தெறித்திருக்கும் அல்லவா?  மீனவர்களின் பிணங்களை எந்தச் சலனமும் இல்லாமல் தாண்டி கோட்டைக்குச் சென்ற கால்களை வேறு எப்படி வாரி விடுவது?

இந்தச் சூழலில் உங்கள் கண்ணுக்குப் பட்ட எதிர் முகமொன்றைத் தேர்ந்தெடுக்க விரும்பினீர்கள்.  …இரட்டை இலைச் சின்னத்தை விடுங்கள்… ஏற்கெனவே கொடுத்த தொப்பியைக்கூடத் திருப்பித் தரக்கூடாதா என்று உங்கள் மனதின் ஓரத்தில் இருந்த சின்ன ஈரம்தான் இதற்குக் காரணம் என்பதை உலகுக்குத் தெரியப்படுத்துமுன் உங்கள் கைகளில் விழுந்த கரன்சி நோட்டுகள் மறைத்துவிட்டன சகோதரர்களே.

தமிழர்கள் பச்சாதாபப் படக்கூடியவர்கள்.  காசு வாங்கிவிட்டால் விசுவாசமாக ஓட்டளிப்பவர்கள்.  இதைத்தான் உங்கள் எதிரிகள் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் தந்தை பெரியாரால் கட்டி எழுப்பப்பபட்ட தன்மான எஃகுக் கோட்டையை ஒரு மண்பானைகளைப் போலப் பெருச்சாளிகள் சரித்துப்போடுகிறபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சர்க்கஸ்  யானைகளுக்கு எதிராக உங்கள் கர்ஜனை என்பதை எப்படிச் சொல்லமுடியும்?  யானைகள்தான் பணத்துக்கும் பாகனின் கட்டளைக்கும் சரளைக் கல்லுக்குக்கூட சலாம் போட்டனவே.

இனி ஒரு தேர்தல் வந்தால் உங்கள் வியூகத்தை மாற்றியாக வேண்டும்.  எந்தக் கொள்கைக்காக காலம் முழுவதும் காத்திருந்து ஏமாந்தீர்களோ மீண்டும் ஆள்மாற்றி ஏமாந்து போவதற்கு உங்களை நீங்களே அனுமதித்துக் கொள்ளாதீர்கள். இந்தத் தேசமே பெரிய பெரிய கார்ப்பரேட்டுகளின் சித்து விளையாட்டாக மாறிவிட்டிருக்கிறது.  உங்கள் மைதானத்தில் யார் யாரோ பந்து விளையடுகிறார்கள். உலகமயத்தில் நீங்கள் வெறும் மரப்பாச்சி பொம்மைகள் என்பதை மறந்துவிடாதீர்கள். மூலதனத்துக்கு எதிராக எந்த மூளைத்தனம் சரிவரும்?

உங்கள் கண்ணாடியில் உங்கள் முகம் தெரியவில்லையே…உங்கள் எதிரிகளின் அலங்காரங்களுக்காகவா ஆளுயரக் கண்ணாடிகள்?  பொய் பிம்பங்களைப் போட்டு உடையுங்கள்.  அவரவர் கொள்கைகளை அலசி ஆராயுங்கள்.  அவசரப்பட்டுக் குறுகிய முட்டு சந்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.  உங்கள் ஒற்றையடிப்பாதையில் முள் விதைக்காதவர்களின் சர்வதேச நெடுஞ்சாலையைச் சந்தித்துப் பாருங்கள்.  கொள்கை கோட்பாடு தத்துவம்…என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்.  கொஞ்சம் அரசியல் பயிலுங்கள்.  வரலாற்றைத் திரிப்பவர்கள் நம்மைப் புதைகுழிகளுக்கு அழைத்துச் செல்பவர்கள்-  வரலாற்றை வாசிக்காத நாம்தான் வேஷதாரிகளின்  தற்கொலைப் படைகளாகிவிடுவோம்.

உங்களுக்குப் பணம் கொடுத்து வாக்கு கேட்பதென்பது உங்கள் தன்மானத்தின் மீது எச்சில் துப்புகிறவர்கள்.  உங்கள் நேர்மையான ரௌத்ரத்தைக் கொசுக்கடியாக்குகிற குயுக்தித்தனம்.  அரசியல்வாதிகளின் தேர்தல்நேரப் பணிகளில் மனதைப் பறிகொடுக்காதீர்கள்.  நிரந்தரமான செயல்பாடுகளை நினைத்துப்பாருங்கள். ஊழலில் யார் யார் தண்டிக்கப் பட்டிருக்கிளறார்கள்?  ஏன் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? பிம்பங்களைத் தாண்டி யோசித்துப் பாருங்கள்.

சதுரங்கப் பலகையில் நீங்கள் வெறுமனே சிப்பாயாக இருக்கப்போகிறீர்களா?
ஆட்டநாயகனாக ஆகப் போகிறீர்களா?  நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

இப்படிக்கு
உங்கள் இதய வாக்குச்சாவடியில்
என்றைக்குமான
அன்பு வாக்காளன்


நா.வே.அருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்