எல்லா மனிதரும் மனிதர் அல்லர்.
**************************************************** 
ஒரு மிகச் சாதாரணமான மனிதனிடம் என்ன எதிர்பார்த்துவிட முடியும்.  அலோ என்பதான சில வார்த்தைகளும் கேட்டதற்கு வழிப்போக்கனைப்போல ஒரு பதிலும் தவிர.  வங்கி ஊழியன் என்று வருகிற வாடிக்கையாளருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்.  மற்றபடி எனக்கென்று ஒரு பிராபல்யமும் கிடையாது.  நீண்ட நாட்களாக அங்கும் இங்கும் பார்த்தபடியால் சில எழுத்தாளர், கவிஞர் படைத்தளபதிகள் என்னை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று சிநேகபாவச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுப் போவார்கள்.  அன்றைய இலக்கிய முக்தி அடைந்துவிட்டதாக நானும் தலையை ஆட்டியபடி வீடு வந்து சேர்ந்திருப்பேன்.

இப்படியான ஒரு பிரகிருதிக்கு ஒரு இலக்கியவாதி நண்பராக வந்து சேர்கிறார்.  பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநர்.  ஐந்து சிறுகதைத் தொகுப்புகள். ஒரு மொழிபெயர்ப்பு நூல். சிறுவர் வரலாற்று நாவல். சிறுவர் கதை நூல். சிறுவர் நாடக நூல். வாழ்க்கை வரலாற்று நூல்கள்.  ஏராளமான நூல்களுடன் சேர்த்து ஏராளமான பரிசுகள், விருதுகள்.  அவர்தான் ஆனந்த விகடன் குழுமத்தில் தலைமை உதவி ஆசிரியர்.  பண்பாளர் பாலு சத்யா.
மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்… இப்படியான ஒரு பிரகிருதிக்கு விடிந்தும் விடியாத ஒரு பொழுதில் வீட்டைத் தேடி வந்து தான் எழுதிய ஒரு புத்தகத்தைக் கொடுக்கிறார் என்றால் அவரது பண்பு பற்றிச் சொல்ல வேறு என்ன இருக்கிறது?

இவர் சமீபத்தில் எழுதிய தொடர் ஒன்றை விகடன் பிரசுரம் “எல்லா உணவும் உணவல்ல” என்கிற தலைப்பில் நூலாக்கி இருக்கிறது. 

உணவில் ருசி மட்டுமல்ல, ஏராளமான விஷயங்களும் இருக்கின்றன என்பதைப் புரிய வைக்கிற புத்தகம். 

பிரியாணியுடன் கத்திரிக்காய் தொக்கு மாதிரி ஒன்று வைப்பார்களே அது சொலேனம் ஃபேமிலியைச் சேர்ந்ததாம். பிரியாணியை விடச் சுவை மிகுந்ததாக இருக்கிறது பிரியாணியின் வரலாறு. தைமூரிலிருந்து தாஜ் மகால் வரை நீண்டிருக்கிறது இதன் வாசனை.

வீச்சு, கைமா, கொத்து, சில்லி, சிக்கன், மட்டன், சிலோன், கேரளா, இதெல்லாம் என்னங்க?  பரோட்டாக்களின் வகைகளாம்.  மைதாவில் கலக்கும் அல்லோக்ஸான் இரசாயனம் சர்க்கரை நோயை வரவழைக்குமாம்.

பரோட்டாவிலிருந்து பழைய சோற்றுக்குத் தாவுகிறது புத்தகம்.  பழைய சோற்றின் நன்மைகளை அமெரிக்கன் நியுட்ரிஷியன் அசோசியஷேன் பட்டியலிட்டிருக்கிறது.  நம் ஊர் வெல்லத்தை அயல்நாட்டு ஈக்கள் மொய்த்த பிறகுதான் வெல்லம் இனிக்கும் என்னும் விஷயமே புரிகிறது. இது நம்ம சொந்த ஊரின் சோகக்கதை. அதை விடுவோம்.

சமஸ்கிருதத்தில் கட்டக்கா, பெங்காலியில் ஷிங்காரா, உஸ்பெக்கிஸ்தானில் சொம்சா, அரபியில்  சம்புசாக், பர்மிய மொழியில் சமோஷா…இவையெல்லாம் தினமும் நாம் ருசிக்கிற சமோசாதாங்க. பத்தாம் நூற்றாண்டிலேயே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து நம் ஊர்க் கடைகளை நோக்கிப் படையெடுத்து இருக்கிறது இந்த சமோசா.

சிக்கன் 65 என்பதை நோய்கள் 65 என்று மாற்றி வாசிக்கச் சொல்கிற எச்சரிக்கை.  இட்லி இந்தியாவுக்குள் படையெடுத்ததாய்க் கருதப்படும் காலம் கி.பி 800 முதல் கி.பி 1200 வரை. எவ்வளவு மோசமாக ஒருவரைத் திட்டப் பயன்பட்டாலும் இட்லிக்கு இன்றைக்கும் பொருத்தமான சைடு டிஷ் சாம்பார்தானாம். (ஜெமினி கணேசன் மன்னிப்பாராக).

அல்வா நம் நாட்டுக்குள் வந்ததென்னவோ பல அரிய உணவுகளை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய முகலாயர்களின்  மூலமாகத்தானாம்.  சர்க்கரையை வெற்று கலோரி எனலாம். (சர்க்கரையின் புனைபெயர் என்று வைத்துக் கொள்ளுங்களேன்).

ஆதி மனிதன் மாமிசப் பட்சிணி.  (மாட்டிறைச்சி எதிர்ப்பாளர்கள் கவனிக்கவும்).  பழம் பெருமை வாய்ந்த கருவாட்டு மார்க்கெட்டுக்குப் போக வேண்டுமா?  பேசின் பிரிட்ஜ் பாலத்துக்குக் கீழே இருக்கிறது.

சீனாவில் யாங்ச்சௌ, ஜப்பானில் சாஹான், கொரியாவில் போக்கியம் பேப், தாய்லாந்தில் காவோ பாட், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியாவில் நாசி கோரெங் இதுதான் நம்மூரில் ஃபிரைடு ரைஸ்.  நம்மூரில் மாப்பிள்ளை, மணப்பெண் இல்லாமல் கூட கல்யாணம் நடந்துவிடக்கூடும்.  ஆனால் ஃபிரைடு ரைஸ், அல்லது பிரிஞ்சி இல்லாமல் கல்யாணம் நடக்க முடியுமா?

இன்று இலவசத்துக்காக இந்தியாவையே இழக்கத் தயாராய் இருக்கும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் ஒரிசாவின் ரேவன்ஷா பல்கலைக் கழகம் பற்றிய பதிவு. இலவசக் கஞ்சித்தொட்டியை நிராகரித்த அன்றைய தன்மானச் சின்னங்கள் வாழ்க.

கூழ், சூப், புட்டு, கஞ்சி போன்ற எளியவை. ஆனால் உடலுக்கு மிகவும் அரிதான ஆரோக்கியத்தைத் தர வல்லவை.  
பொதுவாக திருப்பதி லட்டு என்றாலே தனி ருசிதான் என்று பிரசாதத்தை சாதத்தைப்போல சாப்பிடுவதுதான் வழக்கம்.  அதில் அஸ்தானம், கல்யாணோத்சவம், புரோக்தம் என மூன்று வகைகள் இருக்கிறதாம். 

1930 களில் உலகப் பொருளாதார வீழ்ச்சியின்போது உலகத்தில் கிடைத்த விலைகுறைந்த நொறுக்குத் தீனி பாப்கார்ன்தானாம்.  சமீபத்தில் வணிக வளாகத்திலிருக்கும் சினிமா அரங்கில் இருநூறு ரூபாய் கொடுத்து பாப்பார்ன் வாங்க நேர்ந்தது ஞாபகம் வருகிறது.  இன்றைய விலையுயர்ந்த நொறுக்குத் தீனி இதுவாகத்தான் இருக்கும்போல.
போண்டாவா…வேண்டாமே…சிக்கல் இடியாப்பம் சிக்கலை ஏற்படுத்தாது
போன்ற தலைப்புகளின் சுவாரசியம்.  அம்பலப்புழா கிருஷ்ணன் கோயிலில் பாயசம் வழங்கும் புராணக் கதையின் வாய்வழி வரலாறு என்று மிக சுவாரசியமாகப் பல விஷயங்கள் கொண்ட ருசித்துப் பார்க்க வேண்டிய சுவையான புத்தகம் இது. பல மருத்துவர்களின் ஆலோசனைகள் கூடுதல் சிறப்பு.

“எது கெடாத உணவோ, அது கெட்ட உணவு.  குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு ஒருவித வாசனையுடன் கெட்டுப்போன தன்மையை வெளிப்படுத்தும் உணவுகளே நல்ல உணவுகள்”  இந்த நூலின் பன்ச் டையலாக்கே இதுவாகத்தான் இருக்கும்.  (ரஜினி கோபித்துக் கொள்ளாதிருப்பாராக).

வீட்டில் செய்த பண்டங்கள், அளவோடு எடுத்துக்கொள்ளுதல், உணவை விருந்து போலல்லாமல், மருந்து போல உட்கொள்ளுதல் ஆகிய டிப்ஸ்களை  ஆசிரியர் ஒவ்வொரு கட்டுரையின் இறுதியில் தருவது அலுப்பூட்டும் விஷயம்.  (தொடரில் எழுத வேண்டிய நிர்ப்பந்தம்.  நூலில் எடிட் செய்திருக்கலாம்).


நமக்குச் செரிமான சக்தியைத் தருகிற ஒரு நல்ல புத்தகம்.  எனது வாசிப்பு மேசை உணவு மேசையாகக் காட்சி தருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்