தீ
          ••

வெண்மணியில் தியாகிகள்
இன்னும்
இந்தியாவில் அடிமைகள்

ஞாபகமிருக்கிறதா
நாற்பத்து நான்கு உயிர்கள்?

ஞாபகமிருக்கிறதா
தஞ்சை ராமையாவின் குடிசை?

ஞாபகமிருக்கிறதா
சாணிப்பால் சவுக்கடி
வாழைமட்டையில் தண்ணீர்

ஞாபகமிருக்கிறதா
கையில் செருப்பு
இடுப்பில் துண்டு,

ஞாபகமிருக்கிறதா
எப்போதும் கைகட்டல்
இரட்டை டம்ளர்

வெண்மணியில் தியாகிகள்
இன்னும்
இந்தியாவில் அடிமைகள்

மாற்றுத்திறனாளிகள்
மன்னிப்பீர்….
இது
இடஒதுக்கீட்டுக்காக ஏங்கும்
ஊனமுற்றோருக்கான
உழவுதேசம்.
ஆனால்
ஒவ்வொரு அரசியல்வாதிக்கும்
செவிடர் தேகம்.

பிராணி வளர்ப்போர் சங்கம்
பிழை பொறுத்தருள்வீர்…
கேவலம் நாய்க்கும்
தன் வால் நிமிர்த்தாத
தன்மானம் இருக்கிறது
மனிதர்கள்தாம்
குனிந்து கிடக்கிறார்கள்.

இழிவு  இழிவு இழிவு

மறதி தேசத்தில்
வரலாற்றுப்பிழைகளே
வாரிசுகள்.

மறதி தேசத்தில்
எதிர்காலம் எப்போதும்
இருண்டகாலம்.

மறதி தேசத்தில்
நெளியாத புழுக்களாய்
மனிதர்கள்.

மறதி தேசத்தில்
கடலின் தீபகற்பமல்ல
கண்ணீரின் தீவு

இழிவு  இழிவு இழிவு

எப்போதும் தேவை
இரண்டாந்தரக் குடியானவர்களெனில்
உண்மையில் இதற்குப் பெயர்
ஒரே இந்தியாவா?

வெண்மணியில் தியாகிகள்
இன்னும்
இந்தியாவில் அடிமைகள்

கவிதையின் நுனிநாக்கிலும்
பசியின் அடிவயிற்றிலும்
உழவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன

இந்தியாவில்தான் இந்த விநோதம்
ஒவ்வொரு அரிசியிலும் திருடனின் பெயர்.

யார் செய்த திருட்டு?
உழவரின் மூச்சிலிருந்து
எத்தனை எத்தனை
நுரையீரல்கள்?

யார் செய்த திருட்டு?
தொழிலாளரின் சடலங்களிலிருந்து
எத்தனை எத்தனை சுடுகாடுகள்?

குத்தங்காலமர்ந்து
எழுந்தால் போதும்
ஆணுறுப்பு அபேஸ்.

மாறாப்பு இல்லாத பெண்டிரே
ஜமீன்தார்களின் ஜானவாசம்.

உழவரின் கோவணங்கள்தாம்
அரசியல்வாதிகள் முக்காடு போட்டுக்கொள்ளவேண்டிய
முழுநீளத்துணிகள்.
தொழிலாளரின் கைக்குட்டைகளே
தேசத்தில் பறக்கவேண்டிய கொடிகள்.

வடிவம் கழுத்துபோல் இருப்பதால்
கயிறு திரிக்கும் அரசியல்வாதிகளுக்குக்
காலமாப்போச்சு…
இந்தியாவைத் தொங்க விடுகிறார்கள்.

வெண்மணியில் தியாகிகள்
இன்னும்
இந்தியாவில் அடிமைகள்

கவிதை பிச்சையெடுக்கின்ற தேசத்தில்
கவிஞர்கள் பணக்காரர்களாயிருக்கிறார்கள்
உழவர்களும் தொழிலாளர்களும்
பலவகைப்பட்டினியின்
படுக்கை நோயாளிகளாய்….

பசியறுத்தல்
வெறும்
கம்யூனிஸ்டுகளின் கர்ப்பவியாதியா?
மொக்கை மனுஷர்களே…
மானுட தர்மமன்றோ?

புரட்சியைப் புடம் போட்டு எடுத்த இடம்
வெண்மணி
ஒன்றுமட்டும் புரியவில்லை
வெண்மணியின் அக்கினிக் குஞ்சினை
ஆங்கொரு பொந்திடை வைத்தும்
வெந்து தணியவில்லை இந்தியக்காடு
இது

விசித்திரமான நாடு..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்