வெள்ளைத்தாமரை
*****************************
கூட்டத்தின் கடைசி வரிசையில் ஏதோ சலசலப்பு. காரணம் புரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தேன். ஐந்தாறு பேர்களைச் சமாதானப்படுத்திவிட்டு வந்த ஆசிரியர் ஒருவர் சொன்னபோதுதான் எனக்குக் காரணம் புரிய ஆரம்பித்தது
நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பள்ளியில் சரஸ்வதி பூஜையையொட்டி ஒரு கலைவிழா நடந்தது.  அந்தப் பள்ளியின் மாணவப்பேச்சாளனாக இருந்ததால் ஆசிரியர்கள் எனக்குப் பேச வாய்ப்பளித்திருந்தனர். அன்றைய எனது பேச்சின் மையக்கருத்து மகாகவி பாரதியின் வெள்ளைத்தாமரை கவிதையாக இருந்தது.
”மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை அன்றாம்.
வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்களெங்கும் பலப்பல பள்ளி
தேடுகல்வி இலாததொரு ஊரைத்
தீயினுக்கிரையாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்”
கலைமகளை பூஜை செய்வதன் அர்த்தம் கல்வியைப் பூஜை செய்ய வேண்டும் என்பது மகாகவியின் கருத்து. வெறும் புத்தகங்களைக் கும்பிடுவது அல்ல.   பதினோராம் வகுப்பு படிக்கிற எனது அண்ணன்களின் கலைமகள் பூஜை நெருங்கிக்கொண்டிருக்கிற முழு ஆண்டுத் தேர்வில் நூறு சதமான வெற்றியாகத்தான் இருக்கும். இவர்களெல்லாம் கலைமகளின் வீணைகள்.  இவர்களால் பள்ளி என்கிற கலைமகள் பெருமை பெறப்போகிறாள் என்றெல்லாம் அன்றைய என் சிற்றறிவுக்கு எட்டியதையெல்லாம் பேசிவிட்டுப் பலத்த கைத்தட்டல்களுடன் கீழே இறங்கினேன். பலத்த பாராட்டு மழை.  கூட்டத்தின் கடைசி வரிசையில் ஏதோ சலசலப்பு. காரணம் புரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தேன். ஐந்தாறு பேர்களைச் சமாதானப்படுத்திவிட்டு வந்த ஆசிரியர் ஒருவர் சொன்னபோதுதான் எனக்குக் காரணம் புரிய ஆரம்பித்தது
கூட்டம் முடிந்ததோ இல்லையோ ”இவன் என்ன எங்களுக்கு அறிவுரை சொல்வது?  இவன் சொல்லித்தான் நாங்கள் பள்ளியின் பெருமையை நிலைநாட்ட வேண்டுமா?...என்று கொதித்துப்போன எனது சீனியர்களை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி இருக்கிறார்கள்.
சரி.  பாடல் வரிகளுக்கு வருவோம்.   இந்தப் பாடலுக்கு விளக்கவுரை தேவையில்லை.  அத்துணை எளிதாக எல்லோர்க்கும் புரியும். எது சரஸ்வதி பூஜை என்பதற்கும் எப்படி கலைமகளைக் கொண்டாட வேண்டும் என்பதற்கும் மகாகவி கொடுக்கிற அற்புதமான கவிதை விளக்கம் இது. 
இன்றைய கல்விக் கொள்கை எதை நோக்கி நமது நாட்டை நகர்த்திக்கொண்டிருக்கிறது?  காசு உள்ளவனுக்கு மட்டும்தான் கல்வியா? வாய்ப்பு உள்ள உயர்சாதியினருக்கு உயர்கல்வி…ஏனையோருக்கு தொழிற்கல்வியா?...
இந்த ஆண்டின் சரஸ்வதி பூஜைக்கு எனது கவிதைப் படையல்
”’நவீன கல்வி”’
”கொடிகட்டிப்பறக்கிறது
குருகுலம்
துல்லியமாய்த் தொடங்குகின்றன
துரோணாச்சாரியரின் வகுப்பறைகள்
கௌரவர்களும் பாண்டவர்களும்
மறுவாசிப்பின் மாணவர்கள்
பாரதத்தில் யாரும் பாடம் கேட்கலாம்
அரண்மனை முரசதிர
அசரீரி ஒலிக்கும்…..
வில் உள்ளவர்களெல்லாம்
வேட்டைக்குப்போகலாம்
விரல் உள்ளவர்களெல்லாம்
வில் எடுத்துக்கொள்ளலாம்
வித்தை கற்கும் விருப்பத்தில்
எல்லா விரல்களையும் இழந்தபின்னும்
வகுப்பறைக்கு வெளியே
ஏக்கம் தின்ற மிச்சமாய்

எட்டிப்பார்க்கும் ஏகலைவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Tamil writers: எழுத்தாளர் நா.வே. அருள்