காதலிக்கும் காதல்
•••••••••••••••••••••••••••
அன்னா தஸ்தயேவ்ஸ்கியின்
”நினைவுக்குறிப்புகள்” வாசித்து முடித்த இந்தத்தருணத்தில் நான் உணர்ச்சிகளின் கொந்தளிப்பால்
மூழ்கடிக்கப்பட்டிருக்கிறேன் என்றுதான் என்னால் சொல்லமுடியும். இந்த நொடியில் எனக்கு
இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது. அன்னா தஸ்தயேவ்ஸ்கி
என்னுடைய இலக்கியத் தாயாகி விட்டாள்.
இந்தப் புத்தகத்தை
வாசிக்காதவர்களுக்கு ஓர் வேண்டுகோள்….இந்த மேற்கோள் வரிகளை ஒருமுறைப் படியுங்கள்.
”….அன்னா, அந்த
ஓவியன் நான்தான் என்று நினைத்துக்கொள்… நான் உன்னிடம் என் காதலைச் சொல்லவும் செய்கிறேன்
எனில், நீ வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பாயா? சொல்… உன் பதில் என்னவாக இருக்கும்?...”
இந்த வாசகத்தை
இப்போது வாசித்துவிட்டீர்கள் அல்லவா?...அந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள். யூமா.வாசுகி அவர்களின் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம்
வெளியிட்டுள்ள அந்து நூலின் எழுபத்தோராம் பக்கத்தில் மீண்டும் மேற்குறித்த வாசகங்களை
நீங்கள் கடக்கிறபோது திணறிப்போவீர்கள் என்பது உறுதி. நான் அழுது கலங்கி அரற்றிய இடம்
அது. துன்பங்களைக் கடந்து இன்பத்தின் கீற்று
தென்படுமா என்று காலமெல்லாம் காத்திருந்த ஒருவனின் ஏக்கம் பொதிந்திருக்கும் இடம்.
அதற்கப்புறம் அன்னாவின்
பதிலைப் படிக்கிறபோது அழுத கண்களுடனான ஆனந்தக் கண்ணீர் உங்கள் மீது தெறித்து உயிர்
கரித்து இனிக்கும்.
இந்த நேரத்தில்
எனக்கு இலக்கியத்தை அறிமுகப்படுத்திய அண்ணன் சோலை இளம்பரிதியை நன்றியுடன் நினைத்துப்
பார்க்கிறேன். நான் கல்லூரியில் எம்.காம் படித்துக்கொண்டிருந்த
காலம். கவிஞர் வெண்மணி ”தெய்வங்கள் எல்லாம்
தேரேறி வந்தன…பொய்தான் தாமென்று புலம்பிப்போயின” என்று அண்ணா அவர்களைப் பற்றிய கவிதையொன்றில்
வைரமுத்து என்கிற ஒருத்தன் எழுதியிருக்கிறான், என்ன எழுத்துயா அது என்று சிலாகித்துச்
சொன்னதாக அண்ணன் சோலை என்னிடம் சொல்லிவிட்டு வைரமுத்துவின் திருத்தி எழுதிய தீர்ப்புகள்
கவிதைத் தொகுப்பைப் படித்துப்பார் என்று சொன்னார். சொன்ன ஒரு சில நாட்களிலேயே அன்றைய
எம்.எல்.ஏ ஹாஸ்டல் வளாகத்திலிருந்த ஒரு தூங்குமூஞ்சி மரத்தின் கீழ் எடுத்த புத்தகத்தைக்
கீழே வைக்காமல் ஒரே மூச்சில் வாசித்து முடித்து இயல்பு நிலைக்குத் திரும்பினேன். திரும்பினேனா
என்று இன்றளவும் தோன்றாத வாசிப்பனுபவம்தான் அது. அந்தத் தொகுப்பு எனக்குள் ஏற்படுத்தியத் தாக்கம்
என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்று.. அவரது வாசகனாகவும் உபாசகனாகவும் ஆகவிட்டிருந்த காலம். அவர் சினிமாவில் வெற்றிபெற்ற கையோடு ஒரு வார ஏட்டில் ”இதுவரை நான்” எழுதிக்கொண்டிருக்க வாரந்தோறும் வெறிபிடித்து
வாசித்துக்கொண்டிருந்தேன்.
எங்கு கேட்டாலும்
”இது ஒரு பொன்மாலைப்பொழுது” திரைப்பாடல்தான்.
இளையராஜாவும் வைரமுத்துவும் ஒருவருக்காக ஒருவரோ என்கிற ரீதியில் என் மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது.
அந்தப்பாடல் பதிவுக்குப் போய் வருகிறார் வைரமுத்து. மகன் பிறந்த சேதி. ஒரே நேரத்தில் இரண்டு பிரசவங்கள் என்று இதுவரை நான்
தொடரில் பதிவி செய்திருப்பார்.
இப்படியெல்லாம்
எப்படி நடக்கிறது என்று விகசித்துப்போயிருக்கிறேன் நான். அதைவிடவும் நான் அதிசயித்துப்போவது வைரமுத்து தம்பதியினரின்
பெயர் பொருத்தம். வைரம் முத்து அவருக்கு. பொன் மணி அந்தம்மாவுக்கு. அவர்கள் இருவரும் இலக்கியத்
தம்பதிகளான ஆச்சரியம். டெல்லியில் சாலை இளந்திரையன் சாலினி இளந்திரையன் தம்பதியரைச்
சந்தித்திருக்கிறேன். தற்போது அண்ணன் பால.இரமணி ஆண்டாள் பிரியதர்ஷினி தம்பதியர்.
இதெல்லாம் ஒன்றுமில்லை
என்றாக்கிவிட்டது. அன்னா மற்றும் தஸ்தயேவ்ஸ்கியின்
காதல் வாழ்க்கை. அந்தக் காதல் கலைஇலக்கிய உலகின் அணையாதீபம். அது ஒரு காவியம். எல்லாவற்றையுமே இழந்த ஒருவன் எல்லாவற்றையுமே திரும்பப்
பெற்றுவிடுகிற மகத்தான சக்தி போதத்தைத் தந்து விடுகிறது காதல்.
ரொம்ப காலத்திற்குப்
பிறகு வெக்கை தீரத்தீர இந்தப் புத்தகத்தைத்தான் வாசிக்கிறேன். வெகு காலத்திற்கு முந்தைய நானா இது
என்று இன்றைக்கு யோசித்துப்பார்க்கிறேன்.
சின்ன வயதில் எனது
ஊர் நாரேரிக்குப்பத்திலிருந்து தினமும் இரண்டு கிலோமீட்டர் தள்ளியுள்ள இரட்டணை வரை
வயல் வரப்புமேலேயே நடந்த படியே தினமும் சிறுவர் நாவலெல்லாம் படித்துச் சென்ற நானா இப்படி
மாறிபோனேன்? எனது கறுப்பு மலர்கள் காமராசனும்
கண்ணீர்ப் பூக்கள் மேத்தாவையும், நந்தனை எரித்த மிச்சம் தமிழன்பனையும் வெள்ளை இருட்டு
இன்குலாப்பையும், ஊசிகள் மீராவையும், பக்தியுடன் படித்த பாரதியையும், காதல் மீதூறப்
படித்த கண்ணதாசனையும் ஏன் காணடித்துக்கொண்டேன்.
அப்புறம் அறிமுகமாகி என் இலக்கிய அனுபவங்களைப் புரட்டிப்போட்ட அறைக்குள் வந்த
ஆப்ரிக்க வானம் (மொழிபெயர்ப்பு), முப்பட்டை நகரம் இந்திரனையும், கல்யாண்ஜியின் கவிதைகள் கல்யாண்ஜியையும்
தொடரமுடியாமல் போனது ஏன்? காரணம் சுய இலக்கிய
வளர்ச்சியை விடவும் முக்கியமான சமூக மாற்றத்திற்கான திசை நோக்கிய தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முக்கியத்துவம்தான். அதில் நான் செய்த அர்ப்பணிப்புள்ள அமைப்புப்பயணம்
எனது இலக்கிய வாசிப்பு நேர பணயம்தான். அது
எனது விருப்பப்பாடம். இரண்டையும் ஒரு சேரச்
செய்யச்சொல்கிறது தமுஎகச. ஒருபுறம் வங்கிப்பணி.
மறுபுறம் தமுஎகச செயல்பாடு அப்புறம் குடும்பம்.
என்னால் தொடரமுடியாமல் போனது வாசிப்பு.
எதையாவது பணயம் வைத்தாக வேண்டும் அல்லவா?
தமுஎகச முன்னணி ஊழியனாக இயங்கியது முழுக்க முழுக்க சோலை அண்ணனின் வழியூறிய எனது
சுய விருப்பம்.
இனியேனும் வாசிப்பதற்கான
தருணங்கள் வாய்க்குமா என் வாழ்க்கையில்? எத்தனையெத்தனைப் புத்தகங்களை வாசிக்கத் தவறியிருக்கிறேன்
என்று எண்ணும்போது வருத்தம் வாயடைத்துவிடுகிறது.
அன்னா தஸ்தயேவ்ஸ்கியின் நினைவுக்குறிப்புகளை என் மடியில் கிடத்தியிருக்கிறேன். அன்னா சந்தித்த தஸ்தயேவ்ஸ்கியின் அடுக்குமாடிக்
குடியிருப்பு ”அலோன்கின் ஹவுஸ்” என் கண்முன்
விரிகிறது. தனது சுருக்கெழுத்து ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கிணங்க
எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கிக்காகச் சுருக்கெழுத்தராக அன்னா குடியிருப்பிற்குள் நுழைகிறாள்.
இரண்டாம் மாடியில் குடியிருப்பு எண் பதின்மூன்றின் அழைப்பு மணியை அழுத்துகிறாள். பணிப்பெண்
அவளை அடுத்த அறைக்கு அழைத்துச் செல்கிறாள்..இரண்டு நிமிடங்கள் கடந்தபோகிறது… பியோதர்
தஸ்தயேவ்ஸ்கி உள்ளே வருகிறார். அவர் அன்னாவைப்
படிப்பறைக்கு அழைத்துச் செல்கிறார். அது இரண்டு
சன்னல்கள் உள்ள விசாலமான அறை. தேவைக்கு அதிகமாக
வெயில் பெருகிய ஒளி நிறைந்த நாளாக இருக்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக
ஒவ்வொரு நாளும் காதலால் ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக நகர்ந்து செல்கிறது.
அன்னா தஸ்தயேவ்ஸ்கியின்
ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அறிந்து வைத்திருக்கிறாள். இப்படித்தான் அவள் அவரது புதினத்திலல்ல…வாழ்க்கையில்
மறக்கமுடியாத கதாபாத்திரமாக ஆகிவிடுகிறாள்,
அப்படியான பல நாள்களைக்
கடந்தபிறகுதான் அன்னாவை நோக்கி தஸ்தயேவ்ஸ்கி இப்படிக் கேட்கிறார்…
”….அன்னா, அந்த
ஓவியன் நான்தான் என்று நினைத்துக்கொள்… நான் உன்னிடம் என் காதலைச் சொல்லவும் செய்கிறேன்
எனில், நீ வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பாயா? சொல்… உன் பதில் என்னவாக இருக்கும்?...”
ஒரு புதினத்தின்
புதிர் ஒன்றை விடுவிப்பதற்காகத்தான் தஸ்தயேவ்ஸ்கி இந்த வினாவைத் தொடுக்கிறார். அன்னாவின் பதில் புதிரினை விடுவிக்கிறதா அல்லது
இன்னொரு புதிராகிவிடுகிறதா என்பதைச் சுவாரசியமாகக் கண்டறிய அந்தப்புத்தகத்தின் எழுபது
பக்கங்களைக் கடக்க மனமில்லாமல் கடந்துதான் ஆகவேண்டும். என்னைப் போலவே.
…ஆதி பெருந்தேவன்
கருத்துகள்
கருத்துரையிடுக