வெறி
********
வெட்டரிவா ஜெயிக்குது
சுவருகட்டி மனுஷனையே
துண்டு துண்டா பிரிக்குது
பெத்தமகளை வெட்டுது
பேத்தி தலையை அறுக்குது
கத்தியாலே மருமகனைக்
கண்டதுண்டமாக்குது
அப்பனையே ஆளுவச்சி
அறுத்துப்போட வைக்குது
அப்புராணி தங்கச்சிய
காய்கறியா நறுக்குது
உத்தபுரம் விழுப்புரம்னு
ஊருஊரா அலையுது
செத்தப்புறமும் பழிமினுங்க
சேரியெல்லபாம் எரியுது
ஊருரெண்டா போகுது
உசுரு துண்டா ஆகுது
யாரு தந்த நோய்இது
என்வயிறு எரியுது
காதல்கிளிங்க கழுத்தறுக்க
கத்திய எதுக்கொடுத்தது
வீதியில வெட்டிப்போட
வெறிய எது வளத்தது
"மனு" கொடுத்த நோய்இதுக்கு
மருந்து யாரு எடுத்தது?
மருந்திருந்தும் எடுத்துக்கொள்ள
மக்கள்மனம் தடுத்தது
சின்னக்கட்சி பெரியகட்சி
சேந்துதான வளக்குது
சின்னம் காட்டித் தேர்தலுல
தில்லுமுல்லு முளைக்குது
சாதிபேரில் கொல நடந்தா
சட்டசபையைக் கலைக்கணும்
சாதிபெருமை பீத்தினாலே
ஆயுள்தண்டனை கொடுக்கணும்
சாதிமாறிக் காதலிச்சா
வேலை அரசு கொடுக்கணும்
முதலமைச்சர் பாதுகாப்புல
முழுக்குடும்பம் இருக்கணும்
இப்படி உறுதி கொடுக்கும் கட்சி
இந்தத்தேர்தலில் ஜெயிக்குமா?
இப்படி நெனச்சி மக்கள்மனசு
எழவுஜாதியை ஒழிக்குமா?
கருத்துகள்
கருத்துரையிடுக