ஆதியிலிருந்து அந்தம் வரை
பாடம்
********
இல்லையெனில் ஆதியில் தோன்றிய மனிதர்கள் இன்னும் காட்டுமிராண்டிகளாய்க் கம்பும் கல்லுமாய் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டிருக்கலாம்
தாய் தன் பிள்ளைக்குச் சைகை மொழியைத் தத்தளித்தாள் அல்லவா? அதுதான் மூலத்தாய்மொழி. அதிலிருந்து கிளைத்ததுதான் அநேக மொழிகள். மொழிக்கு இப்படி. காலப்போக்கில் கணக்கற்ற கலைகள்.
ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு ஓர்மை. சொல் எழுத்துக்குத் தாவியதும், கலை, இலக்கியமாய் உருவெடுக்கவும் காலம் எத்தனை ஆசிரியர்களைக் கணக்கற்று ்ஈன்றெடுத்திருக்குமோ? .ஒரு வகையில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு ஆசிரியர்தான்.
கொஞ்சம் நினைவுகளைப்பின்துரத்திப் பார்க்கிறேன். என் சின்ன வயசில் எனக்கொரு பைத்தியக்காரப் பழக்கமாென்றிருந்தது. அதாவது எனக்குக் கருத்து தெரிந்த அந்த சிறுபருவத்தில் பேசுவதையே ஒரு பாட்டைப்போல ராகமெடுத்துப்பாடுகிற பாவனையில் சொற்களை உருட்டிக்கொண்டிருப்பேன். அப்போது எத்தனை வயசிருக்கும் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
செஞ்சிக்குப்பக்கத்தில் அவியூர்தான் என் பாட்டி ஊர். அன்று பக்கத்தில் இருந்தவர் என் அம்மாவைப் பெற்ற பாட்டி. பெயர் பெருந்தேவி.
ஓடு போட்ட வீடு. அந்த ஊரிலேயே மிகப் பிரம்மாண்டமாய் சிற்ப வேலைப்பாடு அமைந்த தள்ளுவதற்கே பளுவாகத் தோன்றிய கதவு அது ஒன்றாகத்தான் இருக்கும். அந்த வீட்டின் நடைப்பகுதியிலிருந்து உள்ளறைக்கு அவசரஅவசரமாய் ஏதோ ஒரு ஏனத்தைக் கையில் ஏந்தியபடி நுழையப்போன பாட்டியின் சேலையைப் பிடித்திழுத்தபடி
அவர்களை நான் கேட்டது இன்னும் என் நெஞ்சில் நிழலடிக்கிறது. "பாட்டி பாட்டி இப்ப பெரிய பெரிய புலவர்களா இருக்கிறவங்கள்ளாம் என்னை மாதிரி சின்ன வயசுல பாடிக் கிட்டே இருந்திருப்பாங்களா?"
நிச்சயம் இதை வாசிக்க நேர்ந்த உங்களுக்கெல்லாம் இது ஒரு பைத்தயக்காரச் சிந்தனையாகத் தோன்றலாம். இது அப்படித்தான் அன்று நடந்தது.
பெரிய பெரிய புலவருங்கள்ளாம்..என்ற விஷயம் எனக்குள் எப்படிப் போனது...சொற்களையே இழுத்திழுத்துச் சொன்னால் பாட்டென்று யார் எனக்கு உணர்த்தியது. யாரோ சொல்லி இருக்கிறார்கள். எதையோ கேள்விப்பட்டிருக்கிறேன். எப்படியோ எனக்குள் நுழைந்திருக்கிறது.
"ஆமாண்டா கண்ணு" என்று அன்றைக்குச் சொன்ன பெருந்தேவிப் பாட்டி எனக்கு முக்கியமான ஆசிரியராகப்படுகிறார். "அடச் சீ போடா" என்று அவர் அவசரத்தில் கத்தியிருந்தால் என்னாகியிருக்கும் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்.
கவிதையையே சகலமும் என்று கனவில் மிதக்கும் என்னைப் பொருத்தவரை பெருந்தேவிப் பாட்டிதான் என் முதல் ஆசிரியர்.
வால்பகுதி-
"ஆசான்களால் ஆனதிந்த உலகம்"
என்று தொடங்கிய இந்தக்கட்டுரையை "ஆசிரியர்களால் ஆனதிந்த உலகம்". என்று மாற்றியிருக்கிறேன். ஆசான் என்கிறபோது ஆண்பாலைமட்டுமே குறிக்கிறது. அதுவும் ஒரு பெண்பால் பற்றிய என் கட்டுரை எப்படி அமையவிருந்தது பார்த்தீர்களா?
பிறகு பலர்பாலைக் குறிக்கும் ஆசிரியர் என்று மாற்றி எழுத ஆரம்பித்தேன்.
சமீபத்தில் (20,2,2016) ஆனந்தாயி கலை இலக்கியப் பயிலகத்தின் இலக்கிய நிகழ்வு ஒன்றிற்கு வந்திருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொருளாளர் தோழர் தீபா, மொழியில் ஆணாதிக்க மனோபாவம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்று விளக்கங்களுடன் விவாதித்திருந்தார். இந்தக் கட்டுரையில் ஆசான் ஆசிரியர் ஆனதற்கும் தொடர்ந்து இந்தக் கட்டுரையில் பொதுச் சொல்லாடலாகப் பயன்படுத்துகிற போது பலர்பால் பயன்படுத்தியதற்கும் எனக்குச் சமீபத்திய ஆசிரியராக விளங்குகிறவர் தோழர் தீபா.
கருத்துகள்
கருத்துரையிடுக