தும்பிக்கை இல்லாத சின்ன யானை



உனது வால்குழைப்பில் கதும்பும் அன்பில்
குரலடைத்துப்போகும் எனக்கு.

ஏன் இவ்வளவு நேரம் என்று
இப்படிக் கேட்க முடிந்ததேயில்லை 
வீட்டில் யாருக்கும்.

என்னுடன் தெருவில் நடந்துவர
எத்தனை எதிரிகளை எதிர்கொண்டாய் நீ.

அதிகமாய்ச் செய்ததில்லை உனக்கு.
மீன்கள் எங்களுக்கு
மீந்த முள் உனக்கு.
பிஸ்கட் எங்களுக்கு
பொரை உனக்கு.

துரத்தியும் போகாமல்
நாங்கள் பேருந்து ஏறியபிறகுதான்
வீட்டுக்குத் திரும்புவாய் நீ.

சங்கிலி போட்டுக் கட்டிவைத்ததே இல்லை
கடைசி வரைக்கும்.

தீராத ஏக்கம்ஒன்றிருந்தது எனக்கு
சட்டென்று யானையாய் மாறி 
நடந்துவரவேண்டும் நீ.

ஓயாத உன் குரைப்பொலி கேட்ட ஒவ்வொரு இரவும்
நன்றாகத் துாங்கியிருக்கிறேன்
நீ இல்லாமல் போனஇந்த நிசப்த இரவில்
உற்ங்க முடியவில்லை என்னால்.

                         (கல்கி 23 நவம்பர் 2014)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்