கதிர்பாரதியின் கவிதையுலகம்
நேற்றுப்போல் தோன்றுகிறது...கல்கி அலுவலகத்தில் அப்பொழுது ஆசிரியர் பொறுப்பிலிருந்த திருமதி சீதா ரவி அவர்களின் அழைப்பின் பேரில் மிக நெருக்கமான ஒரு சிறு கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன். அன்றைய விருந்தினராகக் கலந்து கொண்ட இன்னொருவர் கவிதாயினி வைகைச்செல்வி அவர்கள். திரு.மு.மாறனும் திரு.யுவராஜ் அவர்களும் கல்கி அலுவலகத்தில் இருந்த பிற நண்பர்கள். திருமதி சீதா ரவி ஓர் இலக்கியப் பகிர்வுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்நிகழ்வில் பலரும் கவிதை வாசித்தார்கள். ஓர் இளைஞர் வாசித்த கவிதை எனக்குள் ஒரு மின் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது. அன்றைக்கு அவர் அணிந்திருந்தது கறுப்புச் சட்டை என்பதாக என் நினைவு. அவர் வாசித்த கவிதையின் கதைநாயகர் முக்குக்கு முக்கு குந்தவைக்கப்பட்டிருக்கும்பிள் ளையார். அவர் கவிதை வாசிப்பின் போது எங்கள் ஊர் சந்திகாப்பான் (கிராமங்களில் ஒவ்வொரு தெருக்கொடியிலும் ஒரு கல் நடப்பட்டிருக்கும். அந்த "சந்திகாப்பான்" தான் பிள்ளையார் என்பதாக ஐதீகம்) மீது ஒரு நாய் ஒண்ணுக்கடித்துக் கொண்டிருந்தது. என்ன தைரியம் அந்த இளைஞருக்கு. ஒத்தக்காலைத் தூக்கி பிள்ளையார்மீது ஒண்ணுக்குப் பெய்யும் கெடாநாயைப் பற்றித்தான் எழுதியிருந்தார். அதிர்ந்து போனேன். என் அதிர்வைப் பதிவு செய்துவிட்டும் வந்தேன். கவித்துவம் கைகூடியிருந்த கவிதையைச் சிலாகித்துவிட்டு வந்தேன்.
அன்றைக்குக் கவிதை வாசித்த அந்த இளைஞர்தான் இன்று "மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்" கவிதைத் தொகுப்புடன் நம் கண்களை மீறி வளர்ந்திருக்கிறார். யூமா வாசுகியின் கவிச்சுவடுகளைச் சிலாகிக்கும் ஒருவர் வளராதிருந்தால்தான் ஆச்சரியம். அந்த மனிதரைப்போல இயல்பாகவே மானுட எளிமை வாய்த்துவிடுமல்லவா? மனிதனுக்காகக் கசிந்துருகும் மானுட எளிமைதானே கவிதையின் கோபுரம்.
இவர் கவிதையின் ருசிக்கு நாம் எப்படி ஆட்பட்டு விடுகிறோம் என்று யோசித்தபடியே புத்தகத்தைப் புரட்டுகிறபோதுதான் புரிந்தது... "உலக ருசிகளைஎல்லாம் ஒன்று திரட்டி அவர்மனைவி சாந்திபெல்சன் வைக்கும் மீன்குழம்பின் ருசி" . மீன்குழம்பின் ருசிக்கும் கவிதையின் ருசிக்கும், ஏன் காதல் ருசிக்கும் இடையில் கூட எனக்கொன்றும் வேறுபாடு தெரியவில்லை...ஒவ்வொன்றுக்குள் ளும் "கையளவு கடல்".
தொகுப்பில் "குடும்பப் புகைப்படத்"தோடு கதிர்பாரதியின் கவிதைப் புகைப்படம் விரிவடையத் தொடங்குகிறது. தொகுப்பு நெடுக "அறுவடைக்கு நிற்கும் நெல்வயலொன்றில் பரவும் தீ பனியாலான குறுவாளாகவும் குறிபார்க்கிறது". "காலாதிகாலத்தின் தூசி"யில் அவர் எழுப்பும் பிரம்மாண்ட காட்சிப் படிமம் அங்கங்கும் கவிதைகளில் தென்படுவது ஒரு தேர்ந்த கவிஞனுக்குரிய நல்ல அடையாளம். அதனால்தான் கடலை நீலப்பள்ளம் என்று சர்வசாதாரணமாகப் போகிற போக்கில் உதிர்த்துவிட முடிகிறது. அதே சமயத்தில் கண்ணீரைத் துளித் துளிக் கடல்கள் என உருவகிக்கவும் முடிகிறது. நில வரையறைகளை இவரது கவிதை உள்வாங்கிச் செமித்திருப்பதை "சோழக் கடற்கரைப் பிச்சி" யில் உணர்ந்து கொள்ளலாம். காலத்தையும் இடத்தையும் தன் இஷ்டத்துக்கு அங்கும் இங்கும் இழுத்துப்போட்டு ஆலவட்டம் ஆடுவதை "நாளின் பொம்மை"யில் பார்க்கலாம். காலத்தையும் இடத்தையும் மாத்திரமல்ல... மனிதர்கள், இயற்கை, சினைமீன், கடல், பௌர்ணமியைக் கொத்தும் கொக்கு, பறக்கும் நிலவு என சகலத்தையும் தன் மாய கவிச்சுழலில் சிக்க வைத்து விடுகிறார். ஜீவராசிகளையும் காலத்தையும் ஒரு கண்ணியில் சந்திக்கிற சாகசமும் தான் (எ.கா.:காலத்தினாற்செய்த கொலை). விதவிதமான உணர்வலைகளை உருவாக்கிவிடுவதில் "இரண்டாம் உலகம்" திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும், கலை இயக்குனரும் இணைந்த பிறவியாகத்தான் எனக்குக் கதிர்பாரதி காட்சி தருகிறார்.
'சாங்கியம்' என்கிற வார்த்தையைக் கூடத் தன் மொழிக்கிடங்கில் செமித்துவைத்திருக்கிறார். 'நன்னிலம்' என்பது இவரது தஞ்சை நிலம் என்பது வெறும் பாசாங்குதான். "உன் பாசாங்குக்கும் பசப்புகளுக்கும் மயங்கியிருக்கும் நிலத்தை மீட்டாக வேண்டும் என்று இவர் முன்வைக்கும் விஷயம் அரசியலை முன் வைக்கும் நுட்பம் வாய்ந்தது. நெடுஞ்சாலை மிருகத்தை வெறி தணியாமல் வேட்டையாடுவதிலிருந்து இதனைப் புரிந்துகொள்ளலாம். இந்த இடத்திலிருந்துதான் இவரது கவிதைகளை இனம் காண வேண்டும். அதனால்தான் கொலைவெறிக்கு ஆளான கோயில் யானைகளுக்காக இரக்கப்பட்டு ஒரு நெடிய மருந்துச்சீட்டை நெட்டுருவில் எழுதி அவற்றை சுதந்திரத்தோடு பிளிற விடுகிறார். "யானையோடு நேசம்கொள்ளும் முறை" கவிதையின் கடைசி வரிக்கும் முன் வரை இவரது கவிதையின் அழகியல்.ஆசீர்வாதம் வழங்குகிற யானைகளை அடையாளம் காட்டுவதுதான் இவரது கவிதையின் அரசியல்.
எந்த ஒரு வார்த்தையிலிருந்தும் இவர் கவிதையைப் பின்னிவிடுகிறார். ஒண்ணேமுக்கால் வயதான தன் குழந்தை திலீபனுடன் இருபத்தொன்பது வயதான அப்பாவாக ஒலி விளையாட்டை விளையாட முடிந்த ஒரு அப்பாவால் இப்படியான கவிதையை எழுதமுடியும்தான். அதனால்தான், கட்டைவிரலுக்கும் சுண்டுவிரலுக்குமிடையில் அதிவேக ரயில்களும், மிதவேக ரயில்களும் வந்து போய்க்கொண்டிருக்கின்றன! ஒரு கவிஞனுக்கேயுரிய அத்துவான வெளியில் ஒரு கால்பந்தைப்போல கவிதையை இப்படி எத்தி விளையாடும் கவிஞனை சமீபத்தில் தமிழ்க்குரலில் சந்திப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு தேர்ந்த கவிஞனின் லாவகம் இவரது மொழியெங்கும் வியாபித்திருக்கிறது. வாழ்க்கையின் அலைக்கழித்தல்களில் உதிர்ந்த சிறகுகள் நவீன சமூகப் பிரச்சினைகளின் சாயல்களை வானம் முழுதும் வரைந்து செல்கின்றன.
நிறைய மாயங்களை நிகழ்த்திவிடுகிறார். கற்பனையின் உச்சங்களில் ஊஞ்சலாடிக் கதை சொன்னவனின் வண்ண பலூனுக்குள் ஊசி நுழைத்துவிடுகிற உயிர்குடிக்கும் உலகானுபவத்தை அனுபவிக்கலாம். வனத்தின் சல்லி வேர்களோடு சில விதைகளைக் கவ்வி வருகிற பறவையின் பாடலொன்றுக்காகவேனும் கதிர்பாரதியின் கவிதைகளைக் கட்டாயம் வாசிக்கவேண்டும்.
'அத்தனை' வனப்போ என்று ஓரிடத்தில் கவிதையில் இடம்பெறும். 'அத்துணை' என்று அளவுக்குப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் 'அத்தனை' என்று எண்ணிக்கைக்கான வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது தெரியாமல் நடந்திருக்கலாம்.தொகுப்பின் கடைசிக் கவிதையில் கை தொழுவேன் என்று வந்திருக்கலாம். கைத்தொழுவேன் என்று ஒற்று மிக்கு வந்துள்ளது. மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் தரமான கவிதைத்தொகுப்பு. இந்தத் தொகுப்பில் ஒரு கவிதையிலிருந்து மற்றொரு கவிதைக்கு அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது. அற்புதமானத் தொகுப்புக்கு இதுதானே அடையாளம். அற்புதமான கவிதைகள், பிரமாதமான கவிதைகள், மிக நல்ல கவிதைகள், நல்ல கவிதைகள் என நிறைந்த இந்தத் தொகுப்பில் என் அறிவு விளக்கத்துக்கு ஒட்டாத கவிதையாகப் படுவது "சமாதானத் தூதுவர் = ஹிட்லர்".
சரி, "கூச்சத்தைப் பூசிக்கொள்ளும் பிள்ளையார்" எப்படி இருப்பார்?...கதிர்பாரதியின் வார்த்தைகளில்...".....உங்களுக் குத் தெரியாதிருப்பதே நல்லது. ஏனெனில், ஒத்தக்காலைத் தூக்கி அவர்மீது ஒன்னுக்குப் பெய்யும் கெடா நாயைப் பற்றியும் தெரியவந்தால் இன்னும் திடுக்கிட்டுத்தான் போவீர்கள்"
படித்துப்பாருங்கள்...இன்னும் பல கவிதைகளில் பல உணர்வு நிலைகளை அடையத்தான் போகிறீர்கள். ஆனாலொன்று, மெசியாவுக்கு நான்காம் மச்சம் அரும்புவதற்கு முன் முடித்துவிடுங்கள். ஏனெனில் நான்காம் காதலிக்காக மெசியா காத்துக்கொண்டிருக்கிறார்!
--நா.வே.அருள்
கருத்துகள்
கருத்துரையிடுக