or enthira idayanukku
ஓர் எந்திர இதயனுக்கு
அன்புள்ள எந்திராதிபதி கலாநிதி மாறன் அவர்களுக்கு
ஒரு சின்னத்தயாரிப்பாளர் சிக்கமாட்டாரா என்று காலம் பூராவும் ஒன்லைன்களைச் சொன்னபடி காத்துக்கொண்டிருக்கும் ஓர் உதவி இயக்குநர் எழுதிக்கொள்ளும் மடல்.
எந்திரனின் வெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த கடிதத்தை வாசிக்க நேரம் கிடைக்காமல் போகலாம். மிகப்பெரிய கலைச்சேவை செய்த்தாகத் தமிழகத்தைப் (பொய்) பேச வைத்திருக்கும் உங்களுக்கு இந்தக்கடிதம் சங்கடத்தைக் கொடுக்கலாம். ஒரு கதையை வைத்துக்கொண்டு தயாரிப்பாளர்களின் வாசல்களில் மீனுக்குக் காத்துக்கொண்டிருக்கும் கொக்குபோல கோடம்பாக்கத்து பிரம்மச்சாரி விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடியே ஏதாவது துரிதஉணவகம் ஒன்றில் ஒன்றும் பாதியுமாக வயிற்றை ரொப்பிக்கொண்டு ஒன்பது வருஷங்களாகக் குடியிருக்கும் ஒரு உதவி இயக்குநருக்கு உங்களிடம் சொல்ல ஏராளம் இருக்கிறது.
ஆடியோ கேசட் வெளியீடு மலேசியாவில் நடந்தபோதே கோடிக்கணக்கில் பணம் பார்த்துவிட்டதாகத் தகவல். இதுவரையில் வேறுயாரும் டிரெய்லருக்கு டிக்கட் போட்டு பணம் வசூல் பண்ணதாகத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஏறக்குறைய தமிழகத்தின் எல்லா தியேட்டர்களிலும் ஓரிரண்டு வாரங்கள் எந்திரனை மட்டுமே திரையிடவிட்ட உங்கள் பலம் இதுவரை தமிழகத்தில் யாரும் பிரயோகிக்காதது.
உங்களுக்குத் தெரியுமா? எத்தனைப் படங்கள் எந்திரனை முன்னிட்டு முன்கூட்டியே தியேட்டர்களிலிருந்து குண்டுக்கட்டாகத் து க்கப்பட்டது, தியேட்டர்களுக்கு வரவேண்டிய படங்கள் வராமலேயே நின்றுபோனது. சின்னச் சின்னத் தயாரிப்பாளர்கள் மென்றுமுழுங்கிய பொருமல்களும், இயலாமைகளும்தான் இந்தக்கடிதத்தின் வார்த்தைகளும் வாசகங்களும். ஆனால் உங்களை நோக்கி எந்தவொரு சின்ன விரல்காட்டல் கூட நிகழ்ந்துவிடாது. நீங்கள் நின்றிருக்கிற நிழல் அப்படி? ஆகாயத்தைப்போல அகன்று விரிந்திருக்கும் உங்கள் அரசியல் செல்வாக்கு என்ன? திசைகளைப்போல விரிந்து பரவியிருக்கும் வியாபார விஸ்தீரணம் என்ன? உங்களுக்காகவே விசுவாசமாக இருந்து பத்திரிகை அலுவலகத்தில் திகுதிகுவென பற்றி எரிந்துபோன உங்கள் பத்திரிகை ஊழியர்கள் பாவம், விவரம் அறியாதவர்கள். அந்த மதுரை தினகரன் அலுவலகத்தில் மரித்துப்போனவர்களின் ஆவிகள் அலைந்து திரிந்து அனைவரையும் பயமுறுத்திவிட்டதால் தமிழகமே இன்று ‘கப் சிப்’. வந்தாரை வரவேற்கும் தமிழகம் இங்கே காலம் காலமாக வாழநினைத்துத் திட்டம் தீட்டியிருக்கும் குடும்பங்களை என்ன செய்துவிடமுடியும்?
உங்களுக்கும் உங்கள் வம்சத்துக்காகவுமே தமிழகம் ஒரு சட்டம் நிறைவேற்றியிருப்பதை தமிழக மக்கள் அறிந்திருக்க நியாயமில்லை. அறிந்து கொள்ளாமல் இருப்பதற்காகவே நீங்களும் உங்கள் தாத்தாவும் சேனல்சேவைகளை ஆரம்பித்திருக்கிறீர்கள் அல்லவா? ஆனால் தாத்தா தமிழகம் நிறைவேற்றியுள்ள சட்டம் பேரன் தமிழகத்துக்குப் புரியாதா என்ன? இதுதொடர்பாகத் தினமணி தலையங்கத்தில் வந்த வாசகங்களை அப்படியே தருகிறேன்- “விஷம்போல ஒரு சலுகையையும் தமிழகஅரசு அறிவித்தது. முதல் இரண்டு வாரங்களுக்குத் திரையரங்குகள் கூட்டத்துக்கு ஏற்ப கட்டணத்தை, வணிகவரி அதிகாரிகளின் அனுமதியுடன் உயர்த்தலாம் என்பதுதான் அது. தமிழ்நாட்டில் எத்தனை படம் ஒரு வாரம் முழுதாக ஓடுகிறது? ஆகவே, 2007 ஜனவரி முதலாக, உயர்த்தப்பட்ட நுழைவுக்கட்டணம் குறித்து ‘சி’ படிவம் கொடுத்தால் போதும் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனால் திரையரங்குகளில் விருப்பம்போல கட்டணத்தை நிர்ண்யிக்கிறார்கள். அதனால்தான் எந்திரன் படத்துக்கு வெளிப்படையாகவே ரு 200, ரு 300 என்று அறிவித்தார்கள்.” உங்கள் தாத்தாவின் தீர்க்கதரிசனத்தை என்னென்று சொல்வது? உங்கள் அரசியல் செல்வாக்கிற்கான ஒரு சின்ன சாம்பிள்தான் இது.
தமிழகத்தில் மொத்தம் 2000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஒரே சமயத்தில் எந்திரன் திரையிடப்பட்டது. ஒரேநாளில் நான்கைந்து காட்சிகள். டிக்கட் விலை குறைந்தது ருபாய் 200/- அதிகபட்சம் ருபாய் 2000/-. முதல்நாள் வசூல் மட்டுமே ஏறக்குறைய ருபாய் 100 முதல் 200 கோடி வரை. போதும். உங்கள் பொன்கனவு நிறைவேறிவிட்டது. ஒரு தங்கச்சுரங்கத்துக்காக பூமியைப் பொத்தலிட்டப் பொன்மனச்செம்மல்தான் போங்கள். எந்தவொரு தீவிர சினிமா ரசிகனும் ஆசைப்பட்டால் கூட வேறு எந்தப் படத்தையும் பார்த்துவிட முடியாது. எல்லாம் எந்திரமயம். உங்கள் இதயத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். படம்வந்த வாரமே எந்திரனைப் பார்த்துவிடவேண்டும் என்று பேயாய் அலையும் ரசிகமணிகளுக்கு சூப்பர்ஸ்டார் செய்த ஒரு சின்ன உபகாரம்தான் ரசிகர்களின் சிலநாள்கூலிப்பணத்தைச் சுரண்டிக்கொடுத்திருப்பது. எத்தனை ரசிகர்கள் எத்தனை வேளை வயிற்றில் ஈரத்துணியைக் கட்டி இருந்தார்களோ? ரசிகர்களின் பட்டினியிலிருந்து உணவுத்தொழிற்சாலையையே உற்பத்தி செய்துகொண்டீர்களே, இது நியாயமா? சின்னச்சின்னத் தயாரிப்பாளர்களின் கேமிராக்களைக் குருடாக்கிவிட்டு சினிமா உலகத்துக்கு எந்த வெளிச்சத்தைத் தந்துவிடப்போகிறீர்கள்?
தமிழ்ச்சினிமா உலகம் கொஞ்சம் மாறிவருவதாகப் பெருமைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ஆசையில் மண்ணள்ளிப்போட்ட ஆலிவுட் ரேன்சு படத்தயாரிப்பாளரே……சின்னபட்ஜெட்டுகளில் சிறந்த கதைகளுடன் எப்போதேனும் ஒருமுறை வெற்றிபெறுகிற படங்களைத் தயாரிக்க இனி சாதாரணத் தயாரிப்பாளர்கள் தயாராய்இருப்பார்களா தெரியாது. சினிமாக்கனவுகளில் சிக்கித்தவிக்கும் என்னைப்போன்ற ஈயம், பித்தளை, பேரீச்சம் பழங்களுக்கு இனி என்ன எதிர்காலம்? உங்களைப்போன்றவர்கள் படம் எடுக்காத ஒரு வருடம் இனி எங்கே கிடைக்கப்போகிறது?
“தொழில்ல இதெல்லாம் சகஜமப்பா” என்று யாரும் சும்மா இருந்துவிடமுடியாது. கடல் திமிங்கிலங்களுக்குத்தான் சொந்தமெனில் இந்தப் பாழாய்ப்போன கடல் ஜீவித்திருப்பதற்கான அர்த்தம் என்ன? ஒன்றுமட்டும் புரிகிறது. முதலாளிகள் மிகவும் மோசமானவர்களாக மாறிவருகிறார்கள். ஒரு சின்ன ஞாபகம். அந்தக்காலத்தில்(1948 இல்) இதைப்போன்றே மெகா படம் “சந்திரலேகா” வெளிவந்தது. இன்றைய மதிப்பில் ருபாய்140 கோடி செலவில் தயாரான படம். அதைத்தயாரிப்பதற்கு 5 ஆண்டுகள் ஆயின. (எந்திரன் தயாரிப்புச்செலவு ருபாய் 160 கோடி). அமெரிக்காவில்கூட படம் வெளியிடப்பட்டது. தஞ்சாவூரில் ஒரு தியேட்டரில் படம் வெளியானது. இன்னொரு தியேட்டர் முதலாளி அதேபடத்தை வெளியிட விரும்பினார். படஅதிபர் வாசன் மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடும். அந்த பதில் இதுதான்- “ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக்கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்கவேண்டும் அல்லவா?”
கலையின் ஏகபோக அதிபதியே, சகத்தயாரிப்பாளர்கள் பிழைப்பது இருக்கட்டும். தமிழ்ச்சினிமா உலகம் பிழைக்க வேண்டாமா?
எந்திரன் சிந்திக்க ஆரம்பித்தது இருக்கட்டும். இவற்றையெல்லாம் நீங்கள் எப்போது சிந்திக்கப்போகிறீர்கள்?
இப்படிக்கு
காசை நம்பாமல் கதையை மட்டும் நம்பும் ஓர் உதவி இயக்குநர்.
கருத்துகள்
கருத்துரையிடுக