அப்துல்லா ஏன் தீபாவளி கொண்டாடுகிறார்?
பட்டாசு கொளுத்தப்போவதில்லை
பட்சணம் சுவைக்கப்போவதில்லை
இந்த வருடம் தீபாவளி கொண்டாடப்போவதில்லை
என் சபதத்தைக் கேட்டு
வீட்டிலிருப்பவர்கள் சிரித்துவிட்டார்கள்
பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருச்சா?
“பாம்புப்புற்றுக்குப் பால்வார்க்கும்
பரிதாப ஜீவன்களே,,,பங்கேற்காமல் பழியேற்கும்
பாவப்பட்டவர்களே”,,,
என் நீண்ட நேர நெருப்பின்மேல்
நீர் தெளித்தார்கள்-
திகைப்பூண்டு மிதிச்சிட்டீங்களா?
நரகாசூரன் நல்லவனா? கெட்டவனா?
நரகாசூரனுக்கும் நாக்குக்கும் என்ன சம்பந்தம்?
உங்களுக்கு எது பிடிக்கும் ஊமைஜனங்களே?
தீனித்தினவா?
சடங்கா? சம்பிரதாயமா?
ஆச்சாரமா? அனுஷ்டானமா?
திதியா? தின்பண்டமா?
என் எல்லாக்கேள்விகளுக்கும்
ஒரே எதிர்க்கேள்வி
என்ன ஆச்சு இந்த ஆளுக்கு?
ஒன்றுமே ஆகலையா?
ஒரு குளிர்கால டிசம்பரில்
குற்றங்களின் ரதயாத்திரை
மனிதஉறவுகளைக்கிழித்துக்
குருதி சொட்டலையா?
பிளந்த பூமிக்குள்ளே
கடவுள்கள் எல்லாம் கால்இடறி விழலையா?
அயோத்தியில்
அல்லாவின் ஒற்றைமுலை
அறுத்தெறியப்படலையா?
வீடு மௌனத்தில் விறைத்துப்போய்
விருந்தினர் ஒருவர் உள்ளே நுழைய
வீட்டில் ஒருவர் கிசுகிசுத்தார்-
இன்னொரு கிறுக்கு வந்திருக்கு
அப்துல்லாதான் வந்திருந்தார்
என்கைகளில் அவர் கொண்டுவந்த பைகளைத் திணித்தார்
ஒன்றில் பட்டாசுகள்
இன்னொன்றில் இனிப்புகள்
உங்களில் யாருக்கேனும்
விடைதெரிந்தால் சொல்லுங்கள்-
அப்துல்லா ஏன் தீபாவளி கொண்டாடுகிறார்?
நா.வே.அருள்
கருத்துகள்
கருத்துரையிடுக