
கவிதை ஒரு கைவல்லியம் ********************************* 1 கவிதையென்பது ஒரு நாடோடித் தவம். கவிதையை வீட்டுக் காவலில் வைக்க முடியாது. சிறையாகுமெனில் கவிதை வீட்டையே நிராகரித்து வெளியேறிவிடும். வழக்கமான வாசல் வழிதான் என்றில்லை அது காற்றைப்போல சாளரத்தின் வழியாகவும் நுழையும் நூதனம் கவிதையென்பது கதவுகளைக் கூட வெறுக்கும் கட்டற்ற நுழைவு. கவிதைக்குப் பிடித்தது தென்னங்கீற்றில் கூடு கட்டும் நிலவின் சாளரத் தொங்கல் மட்டுமல்ல சாக்கடையில் விழுந்து கிடக்கும் நிலவின் பின்வாசல் பிம்பமும்தான். எப்போதும் திறந்திருக்கும் வீட்டைத்தான் அது விரும்புகிறது. பூட்டியிருக்கும் வீட்டினைத் திறந்துவிடுகிற மந்திரக் கைகள் கவிதைக்கு உண்டு. 2 கவிதையின் இன்னொரு பிரத்தியேகம் அசாத்தியமானது. கவிதை தனக்குள் ஒரு வாசனை உலகத்தை வைத்திருக்கிறது. அது வார்த்தைகளில் ஓவியத்தில் காகிதப் பூக்களிலென வாசத்தை நுகரவைத்துவிடுகிறது. ...