
#பேசும் புதிய சக்தி நன்றி.... ஆகஸ்டு இதழில் எனது கட்டுரை. கவிஞர் சிற்பியின் “முகந்து தீராக் கடல்” கவிதைத் தொகுப்பின் நூல் விமர்சனம் காட்டில் யானை; கடலில் திமிங்கலம் ********************************************************** “காலம் பல கண்ட கதவின் கீல்கள் என் முழங்கால்கள்” காலம் முழுவதும் கவிதைப் பயணம் நடத்திய கவிஞர் சிற்பியின் வாழ்விலிருந்து கசியும் வார்த்தைகள். ஆனால், எவ்வளவு காலம்தான் நடந்திருந்தாலும், எத்தனை பயணங்கள் நிகழ்த்தியிருந்தாலும் ஒரு கவிஞனின் கவிதை முட்டிகள் தேய்ந்துவிடுவதில்லை. கவிதையுலகம் வித்தியாசமானது. வயதாக ஆகத்தான் வலிமை கூடும் போலும். ஊன்றுகோல் எழுதுகோலை வெல்ல முடிவதில்லை. மரபில் ஊறிய மாபெரும் கவிஞனுக்கு அன்று புதுக்கவிதை ஒரு புதிய திசைதான். திரும்பிப் பார்க்கையில் திசைகளதிரும் தீர்மானமான பயணங்கள்! கவிதையுலகில் கவிஞர் சிற்பி, ஆயுதம் தாங்கிய போராளி போல கவிதை தாங்கிய இலக்கியத் தீவிரவாதி! இந்த “வானம்பாடி”யின் வாழ்க்கைச் சூட்டில் வார்த்தைகள் தகிக்கின்றன. கலையமைதியின் கர்ப்பத்தில் சிற்பி ஒரு சீற்றம் கொண்ட கவிதைச் சிலை. “சர்ப்பயாக”த்தில் நெளியத் தொடங்கிய கவ...